தமிழக அரசு பட்டதாரி ஆசிரியர்களுக்கான காலிப் பணியிடங்களை நிரப்புவதற்கு ஆணையிட்டுள்ளதை விடுதலைச் சிறுத்தைகள் மனமார வரவேற்கிறது. தமிழகமெங்கிலும் ஏறத்தாழ 25,000 பட்டதாரி ஆசிரியர்களுக்கான படிப்பை முடித்தவர்கள் வேலைவாய்ப்புக்காகக் காத்திருக்கிறார்கள். 50 வயதைக் கடந்த நிலையிலும் வேலைவாய்ப்பின்றி பெரும்பாலானோர் அல்லலுற்று வருகின்றனர். இந்நிலையில் தமிழக அரசின் அறிவிப்பு வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து காத்திருப்போருக்கு அதிர்ச்சியளிக்கும் வகையில் அமைந்துள்ளது. அதாவது தகுதித் தேர்வு, மற்றும் போட்டித் தேர்வு ஆகிய இரட்டைத் தேர்வு முறையின்படி பட்டதாரி ஆசிரியர்களின் நியமனம் செய்யப்படும் என்று அறிவித்திருப்பதால் நீண்டகாலமாக காத்திருப்போருக்கு வேலைவாய்ப்பு மறுக்கப்படும் நிலை உருவாகும் என அவர்களிடையே அச்சம் எழுந்துள்ளது.
கடந்த காலங்களில் பதிவு மூப்பு அடிப்படையில் வேலைவாய்ப்பு வழங்கப்பட்டதைப் போல தற்போதும் நியமனம் செய்யப்பட வேண்டுமென கோரிக்கை வைத்துள்ளனர். இக்கோரிக்கையை தமிழக அரசு கனிவுடன் பரிசீலிக்க வேண்டும் என விடுதலைச் சிறுத்தைகள் கேட்டுக்கொள்கிறது. அதாவது இரட்டைத் தேர்வு முறையை கைவிட்டு, பதிவு மூப்பு அடிப்படையிலேயே, போட்டித் தேர்வின் மூலம் மட்டுமே அப்பணியிடங்களை நிரப்ப வேண்டுமென விடுதலைச் சிறுத்தைகள் தமிழக அரசுக்கு வேண்டுகோள் விடுக்கிறது.
-தொல்.திருமாவளவன்
No comments:
Post a Comment