TAANAKS VNR செய்திகளை உங்கள் மொபைலில் பெறுவதற்கு ON TAANAKS-NEWS என்று டைப் செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பவும்.

Thursday, February 23, 2012

சத்துணவுக்காக 3 கி.மீ., நடக்கும் மாணவர்கள் : அரசு அதிகாரிகள் ஆஜராக ஐகோர்ட் உத்தரவு


மதுரை : 
விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே, இடையன்குளம் ஆதிதிராவிடர் அரசு நடுநிலைப்பள்ளி மாணவர்கள் சத்துணவுக்காக மூன்று கி.மீ., தூரம் நடப்பதாக தினமலர் நாளிதழில் வெளியான செய்தியை, பொது நல வழக்காக மதுரை ஐகோர்ட் கிளை நேற்று எடுத்தது. முதன்மை கல்வி அதிகாரி, ஆதிதிராவிடர் நல அலுவலர் நேரில் ஆஜராகி விளக்கமளிக்க உத்தரவிட்டது.


இடையன்குளம் ஆதிதிராவிடர் அரசு நடுநிலைப்பள்ளியில் இடமிருந்தும் கட்டடங்கள் இல்லை. இதனால், ஐந்து முதல் எட்டாம் வகுப்புகள், ஒன்றரை கி.மீ., தூரமுள்ள மம்சாபுரம் ஆதிதிராவிடர் மாணவர் விடுதியில் நடத்தப்படுகின்றன. இம்மாணவர்கள் சத்துணவு சாப்பிட, தினமும் இடையன்குளத்திற்கு நடந்து சென்று திரும்புகின்றனர். இதுகுறித்து தினமலரில் நவ., 17ல் செய்தி வெளியானது. இதை பொது நல வழக்காக எடுத்து விசாரிக்கக் கோரி, ஐகோர்ட் கிளை பதிவாளர் (நீதி) சேஷசாயி மனு செய்தார். மனுவில், மாணவர்கள் வெயில், மழையில் நடந்து செல்வதால், சத்துணவுத் திட்டத்தின் நோக்கம் நிறைவேறாமல் போகிறது. பாதுகாப்பான சூழலில், மாணவர்கள் படிக்கும் இடத்தில் சத்துணவு வழங்குவது அரசு கடமை. பள்ளியில் கூடுதல் கட்டடம், காம்பவுண்ட் சுவர் கட்டவும், ஐந்து முதல் எட்டாம் வகுப்பு மாணவர்களுக்கு படிக்கும் இடத்தில் சத்துணவு வழங்கவும் அரசு அதிகாரிகளுக்கு உத்தரவிட வேண்டும் என கோரினார்.


மனு நீதிபதிகள் ஆர்.பானுமதி, டி.ராஜா பெஞ்ச் முன் விசாரணைக்கு வந்தது. மனுதாரர் சார்பில் வக்கீல் பிரபு ராஜதுரையும், அரசு தரப்பில் ராஜசேகரனும் ஆஜராயினர். நீதிபதிகள், "மாணவர்கள் படிக்கும் இடத்தில் சத்துணவு வழங்க உடன் எடுக்கப் போகும் நடவடிக்கை குறித்து, முதன்மை கல்வி அதிகாரி, மாவட்ட ஆதிதிராவிடர் நல அதிகாரி நேரில் ஆஜராகி விளக்க வேண்டும். கலெக்டர் அல்லது அவரது அலுவலக அதிகாரியும் நேரில் ஆஜராக வேண்டும்' என்றனர். விசாரணையை நவ., 29க்கு தள்ளி வைத்தனர்.

No comments:

Post a Comment