சிவகங்கை:
""ஆதிதிராவிடர் சமுதாய வளர்ச்சிக்கென, அரசு 5 ஆயிரம் கோடி ரூபாய் ஒதுக்கியுள்ளதாக'', தமிழக கூடுதல் தலைமை செயலர் கிறிஸ்துதாஸ் காந்தி பேசினார்.
சிவகங்கையில் நடந்த ஆய்வு கூட்டத்தில் அவர் பேசியதாவது: தமிழக அரசு, ஆதிதிராவிடர் சமுதாய மக்களின் வளர்ச்சிக்காக 5 ஆயிரம் கோடி ரூபாய் ஒதுக்கியுள்ளது. இந்நிதியில், அனைத்து துறைகளிலும் கடனுதவி, தொழில் கடன்கள் வழங்கப்படும். குறிப்பாக கூட்டுறவு துறை மூலம் விவசாய கடன், கால்நடைகள் வாங்க கடன், நகை கடன், சிறு தொழில் சார்ந்த கடன்களை ஆதிதிராவிடர்களுக்கு வழங்குவதற்காகவே, இத்துறைக்கு 3 ஆயிரம் கோடி ரூபாய் ஒதுக்கியுள்ளது.
இச்சமுதாய மக்கள் அடிப்படை கல்வியோடு தங்கள் வாழ்க்கை தரத்தை முடித்துவிடாமல், உயர்கல்வி கற்று சமுதாயத்தில் நல்ல நிலைக்கு வரவே, பல ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ்., தேர்வுக்கான பயிற்சிகள் பெற வேண்டும். ஒவ்வொரு ஆண்டும் இன்ஜினியரிங் உள்ளிட்ட தொழில்நுட்ப கல்லூரிகளில் 2 லட்சம் இடங்கள் ஏற்படுகின்றன. இதில் 40 ஆயிரம் இடங்கள் ஆதிதிராவிடர்களுக்கென ஒதுக்கப்படுகிறது. ஆனால், அதில் எவரும் சேராததால், ஒவ்வொரு ஆண்டும் அந்த இடங்கள் உபயோகமின்றி போகிறது. எனவே இச்சமுதாய மக்கள், அரசு வழங்கும் பல்வேறு சலுகைகளை பயன்படுத்தி, வாழ்க்கை தரத்தை உயர்த்திக்கொள்ள வேண்டும், என்றார். கலெக்டர் ராஜாராமன், டி.ஆர்.ஓ., தனபால், திட்ட இயக்குனர் சக்திவேல், கூட்டுறவு இணை பதிவாளர் காந்திநாதன், ஆதிதிராவிடர் நலத்துறை அலுவலர் குணசேகரன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
No comments:
Post a Comment