சென்னை:
வகுப்பறைகளில் அட்டூழியம் செய்யும் மாணவர்கள் மீது நடவடிக்கை எடுக்க பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு அரசு அதிகாரம் வழங்க, சட்டத்தில் திருத்தம் கொண்டு வர வேண்டும் என, சமச்சீர் கல்விக் குழு முன்னாள் உறுப்பினர் கிறிஸ்துதாஸ் வலியுறுத்தினார்.
சென்னை பாரிமுனையில், பள்ளி ஆசிரியை உமா மகேஸ்வரியை, ஒன்பதாம் வகுப்பு மாணவன் கொலை செய்த விவகாரம், ஆசிரியர்கள் மத்தியில் கடும் அதிர்ச்சியையும், பீதியையும் ஏற்படுத்தியுள்ளது. தவறு செய்யும் மாணவர்கள் மீது நடவடிக்கை எடுக்க, தற்போது தலைமை ஆசிரியர்களுக்கோ, வகுப்பு ஆசிரியர்களுக்கோ அதிகாரம் எதுவும் இல்லை.
மாணவர்களுக்கு உடல் ரீதியாகவோ, மன ரீதியாகவோ தண்டனை தரக்கூடாது என சுப்ரீம் கோர்ட் ஏற்கனவே தெரிவித்துள்ளது. கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்திலும், இது கோடிட்டு காட்டப்பட்டுள்ளது. ஆசிரியர்களின் கைகள் கட்டப்பட்டிருப்பதும், தடம் மாறும் மாணவர்களை, மேலும் தவறு செய்ய ஊக்குவிப்பதாக, ஆசிரியர்கள் கருத்து தெரிவித்தனர் .
இதுகுறித்து, சமச்சீர் கல்விக் குழுவின் முன்னாள் உறுப்பினரும், தமிழ்நாடு நர்சரி, பிரைமரி, மெட்ரிகுலேஷன் பள்ளி நிர்வாகிகள் சங்கத்தின் பொதுச் செயலருமான கிறிஸ்துதாஸ் கூறியதாவது: முன்பெல்லாம், "பிள்ளையை என்ன வேண்டுமானாலும் செய்யுங்கள் ஆனால், அவன் நன்றாக படிக்க வேண்டும்' என, பெற்றோர் கூறுவர். ஆனால், அவையனைத்தையும் இப்போது பின்பற்ற வேண்டியதில்லை, தவறு செய்யும் மாணவர்களை, நல்வழியில் திருத்துவதற்கு, பல்வேறு வழிகளை ஆசிரியர்கள் கையாண்டனர். தற்போது, மாணவர்களை தொடவே கூடாது என சட்டமும், அரசும் கூறுகிறது.
ஆசிரியரை கொலை செய்த மாணவன் போன்றவர்களை, தற்போதுள்ள சட்டத்தில் தண்டிக்கவோ, நடவடிக்கை எடுக்கவோ ஆசிரியர்களுக்கு வழியில்லை. பிள்ளைகள் தவறான வழியில் செல்வதற்கு முதல் காரணம், பெற்றோர் தான். ஆக்கப்பூர்வமான பாதையில் பிள்ளைகளை அழைத்துச் செல்ல, பெற்றோர் செலவு செய்யலாம். மொபைல், பைக், கார் என அதிகளவில் செல்லம் கொடுத்து, குட்டிச்சுவராக்குகின்றனர்.
ஈரோட்டில், ஒலகடத்தில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் மது அருந்திவிட்டு வந்த 14 மாணவர்கள் மீது, அம்மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் பொன் குமார் நடவடிக்கை எடுத்துள்ளார். ஒன்பது மாணவர்களுக்கு "டிசி' கொடுத்ததுடன், ஐந்து மாணவர்களை "சஸ்பெண்ட்' செய்துள்ளார். இதேபோல் பல மாவட்டங்களில் நடக்கின்றன. ஆனால், விஷயம் வெளியே வருவதில்லை.
கடும் குற்றங்கள், தவறுகள் செய்யும் மாணவர்களை திருத்த, அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க, உரிய விசாரணை செய்த பின் நடவடிக்கை எடுக்க பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு, அரசு அதிகாரம் தர வேண்டும். இதற்கேற்ப, வழிகாண வேண்டும். இவ்வாறு கிறிஸ்துதாஸ் கூறினார்.
இந்த விவகாரத்தில், அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அனைத்து ஆசிரியர் சங்க அமைப்புகளும் எதிர்பார்க்கின்றன. ஏனெனில், போட்டி நிறைந்த கல்வி யுகமாக மாறிவிட்டது.
பள்ளிக்கூடத்திற்கு மாணவ, மாணவியர் சென்றபின், தங்களுக்கு அதில் அதிக பொறுப்புணர்வு இல்லை என்ற அபாயப்போக்கு பெற்றோரிடம் அதிகரித்துள்ளது. இம்மாதிரி பயங்கரங்கள் வந்ததும் அதை விலாவரியாக பேசிவிட்ட, தார்மீக அறிவுரைகளை மட்டும் முடிவாக அறிவித்தால் போதாது என்ற நிலை உருவாகிவிட்டது.
No comments:
Post a Comment