TAANAKS VNR செய்திகளை உங்கள் மொபைலில் பெறுவதற்கு ON TAANAKS-NEWS என்று டைப் செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பவும்.

Thursday, February 23, 2012

'மாணவர்களுக்கு உளவியல் ஆலோசனை வழங்க ஆசிரியர் குழு'

சென்னை, பிப். 22: 


மாணவர்களுக்கு ஏற்படும் பிரச்னைகளைக் கண்டறிந்து உளவியல் ஆலோசனை வழங்க, ஒவ்வொரு பள்ளியிலும் இரண்டு ஆசிரியர்களைக் கொண்ட குழுவை நியமிக்க வேண்டும் என்று பள்ளிக் கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது.
 பள்ளி வகுப்பறையிலேயே ஆசிரியை கொலை செய்யப்பட்ட சம்பவத்தின் எதிரொலியாக இந்த உத்தரவை பள்ளிக் கல்வித் துறை பிறப்பித்துள்ளது.
 சென்னை பாரிமுனையில் உள்ள செயின்ட் மேரீஸ் ஆங்கிலோ இந்தியன் மேல்நிலைப் பள்ளி ஆசிரியை உமா மகேஸ்வரி, வகுப்பறையிலேயே அந்தப் பள்ளியின் 9-ம் வகுப்பு மாணவரால் கொலை செய்யப்பட்டார்.
 மாணவரின் தர அறிக்கையில் ஆசிரியை குறிப்பிட்ட கருத்துகளால் நடைபெற்றதாகக் கூறப்படும் இந்த சம்பவம் தமிழகம் முழுவதும் அதிர்ச்சியலைகளை ஏற்படுத்தியது.
 இதனைத் தொடர்ந்து, இப்போதுள்ள கல்வி முறையால் மாணவர்களுக்கு ஏற்படும் மன அழுத்தம், திரைப்படங்களில் வன்முறைக் காட்சிகள் உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் குறித்து விவாதங்கள் எழுந்தன.
 அனைத்து மாணவர்களுக்கும் நன்னெறி போதனைகளை வழங்க வேண்டும் என்று பள்ளிக் கல்வித் துறை சார்பில் அனைத்து பள்ளிகளுக்கும் முதற்கட்டமாக உத்தரவிடப்பட்டது.
 இந்தப் பிரச்னையை முழுமையாக ஆராய்ந்த பிறகு, அதைத் தீர்ப்பதற்காக பள்ளிக் கல்வித் துறை சார்பில் பள்ளித் தலைமையாசிரியர்களுக்கான வழிகாட்டு நெறிமுறைகள் உருவாக்கப்பட்டுள்ளன. அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரிகளுக்கும் புதன்கிழமை அனுப்பப்பட்ட இந்த வழிகாட்டு நெறிமுறைகளின் விவரம்:
 தொடர்ந்து பள்ளிக்கு வராத மாணவர்களைக் கண்டறிந்து, அவர்களின் பெற்றோர்களை சம்பந்தப்பட்ட தலைமையாசிரியர்கள் அணுக வேண்டும். அந்த மாணவர்கள் பள்ளிக்கு வராததற்கான காரணத்தை அறிந்து அவர்கள் தொடர்ந்து பள்ளிக்கு வருவதற்குரிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.


1. பள்ளியில் பயிலும் மாணவர்களுக்கு ஆசிரியர்கள்தான் இரண்டாவது பெற்றோர் என்ற மனநிலையை ஏற்படுத்த வேண்டும்.


2. மாணவர்களுக்கு அவ்வப்போது நன்னெறி போதனைகள் மற்றும் நல்ல பழக்கவழக்கங்கள் குறித்து எடுத்துரைத்து அவர்களை நல்வழிப்படுத்த முனைப்புடன் செயல்பட வேண்டும். மாணவர்களுக்கு ஆசிரியர்கள் முன்மாதிரியாக இருத்தல் அவசியம்.

3.ஒவ்வொரு தலைமையாசிரியரும் பள்ளிக்கு வரும் மாணவ, மாணவியருக்கு ஏதேனும் உடல் நலக் குறைவு ஏற்படுவதைக் கண்டறிந்தால் உடனடியாக முதலுதவி சிகிச்சை அளித்து சம்பந்தப்பட்ட பெற்றோருக்குத் தெரிவிக்க வேண்டும்.


 4.பள்ளிகளில் ஆலோசனைப் பெட்டி: ஒவ்வொரு பள்ளியிலும் ஆலோசனைப் பெட்டி  ஒன்றை வைக்க வேண்டும். மாணவ, மாணவியர் தங்களின் குறைகளையும், நிறைகளையும், பிரச்னைகளையும் தெரிவிக்க உரிய நடவடிக்கை மேற்கொள்ளலாம்.

5.பாரபட்சமின்றி அனைத்து மாணவ, மாணவியரிடமும் ஆசிரியர்கள் கவனம் செலுத்த வேண்டும். கற்றல்-கற்பித்தல் செயல்பாடுகளில் அனைவரையும் ஈடுபடுத்த வேண்டும். 


6.பெற்றோர், ஆசிரியர், மாணவர் ஒருங்கிணைந்த கூட்டம் மாதம் ஒருமுறை நடத்த வேண்டும்.
 இந்த வழிகாட்டு நெறிமுறைகளை தவறாது பின்பற்ற வேண்டும் என அனைத்துத் தலைமையாசிரியர்களுக்கும் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள் அறிவுறுத்த வேண்டும்.

No comments:

Post a Comment