மதுரை :
விருதுநகர் மாவட்டம் இடையன்குளம் ஆதிதிராவிடர் நடுநிலை பள்ளி மாணவர்களுக்கு படிக்கும் இடத்தில் சத்துணவு வழங்க மதுரை ஐகோர்ட் கிளை உத்தரவிட்டது. கூடுதல் கட்டடம் கட்ட நடவடிக்கை எடுக்கவும் உத்தரவிட்டது. இடையன்குளம் ஆதிதிராவிடர் நடுநிலை பள்ளியில் கட்டட வசதியில்லாததால், 5 முதல் 8ம் வகுப்பு மாணவர்களுக்கு மம்சாபுரம் ஆதிதிராவிடர் நல மாணவர் விடுதியில் பாடம் நடத்தப்படுகிறது. சத்துணவு சாப்பிட அவர்கள் தினமும் ஒன்றரை கிலோ மீட்டர் இடையன்குளத்திற்கு நடந்து செல்கின்றனர் என தினமலர் நாளிதழில் நவ., 17ல் வெளியான செய்தியை பொது நல வழக்காக ஐகோர்ட் கிளை எடுத்தது. அதிகாரிகள் ஆஜராகவும் உத்தரவிட்டது.
வழக்கு நேற்று நீதிபதிகள் ஆர்.பானுமதி, டி.ராஜா பெஞ்ச் முன் விசாரணைக்கு வந்தது. பதிவாளர் சேஷசாயிக்காக வக்கீல் பிரபு ராஜதுரை ஆஜரானார். முதன்மை கல்வி அலுவலர் பாண்டி, ஆதிதிராவிட நல அலுவலர் ராமகிருஷ்ணன், கலெக்டருக்காக மதிய உணவு நேர்முக உதவியாளர் வரதராஜன் ஆஜராயினர்.
அரசு வக்கீல் ராஜசேகரன், கலெக்டர் சண்முகத்தின் பதில் மனுவை தாக்கல் செய்தார். மனுவில், "இடையன்குளம் பள்ளியில் 5 முதல் 8 ம் வகுப்பு வரை படிக்கும் 93 பேருக்கு மம்சாபுரத்தில் பாடம் நடத்தப்படுகிறது. அவர்களுக்கு சத்துணவு, இடையன்குளம் பள்ளியில் தயாரிக்கப்பட்டு, ஆட்டோ அல்லது டிரை சைக்கிள் மூலம் கொண்டு செல்லப்படுகிறது. செய்தி வெளியான அன்று மம்சாபுரத்தில் சத்துணவு வழங்கப்படவில்லை. படிக்கும் இடத்தில் சத்துணவு வழங்கப்படும். 3.10 லட்சம் ரூபாயில் கூடுதல் கட்டடம் கட்ட அனைவருக்கும் கல்வி திட்டத்தில் கல்வி அதிகாரி மாநில அரசுக்கு பரிந்துரை செய்தார். நிதி கோரி மத்திய அரசை மாநில அரசு கேட்டுள்ளது' என குறிப்பிடப்பட்டது.அதை பதிவு செய்த நீதிபதிகள், மாணவர்கள் படிக்கும் இடத்தில் சத்துணவு வழங்க வேண்டும். கூடுதல் கட்டடம் கட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும். இதுகுறித்து மூன்று மாதங்களில் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும், என்றனர். வழக்கை முடிக்க அரசு தரப்பு கோரியதை ஏற்க நீதிபதிகள் மறுத்து விட்டனர்.
No comments:
Post a Comment