TAANAKS VNR செய்திகளை உங்கள் மொபைலில் பெறுவதற்கு ON TAANAKS-NEWS என்று டைப் செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பவும்.

Sunday, March 25, 2012

அடுத்த 5 ஆண்டுகளில் 2,341 பள்ளிகளில் கணினிவழிக் கல்வி: முதல்வர்

சென்னை, மார்ச் 25: அடுத்த 5 ஆண்டுகளில் 2,341 பள்ளிகளில் கணினி வழி கல்வி அளிக்கும் திட்டத்தை நடைமுறைப்படுத்த முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டார்.இதுதொடர்பாக, தமிழக அரசு ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட அறிவிப்பு:அனைவருக்கும் கணினி வழி கல்வி அளிக்கும் திட்டத்தின் கீழ் அடுத்த 5 ஆண்டு காலத்தில் 1,880 மேல்நிலைப் பள்ளிகள் மற்றும் 461 உயர்நிலைப் பள்ளிகளில் கணினி கல்வியை நடைமுறைப்படுத்த முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.இந்தத் திட்டத்துக்காக முதல் தவணையாக ரூ.31 கோடியே 21 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
அறிவுசார் பள்ளிகள்: 
நாமக்கல் மாவட்டம் ஆர்.புதுப்பாளையத்தில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளி, தேனி மாவட்டம் பெரியகுளத்தில் உள்ள அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளி, விருதுநகர் மாவட்டம் வீரசோழனில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளி, திண்டுக்கல் மாவட்டம் பழனியில் உள்ள அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளி, மதுரை மாவட்டம் மேலூரில் உள்ள அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளி ஆகிய 5 பள்ளிகளில் முதற்கட்டமாக ரூ.1 கோடியே 25 லட்சம் செலவில் "அறிவுசார் பள்ளிகள்' நிறுவ முதல்வர் உத்தரவிட்டுள்ளார்.இதற்காக முதற்கட்டமாக, ரூ.26 லட்சம் வழங்கப்படுகிறது. திருச்சி மாவட்டத்தில் திருச்செந்துறை, அயிலாப்பேட்டை, சோமரசம்பேட்டை, எட்டரை, இனாம்குளத்தூர் ஆகிய 5 இடங்களில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளிகளில் ரூ.1 கோடியே 25 லட்சம் செலவில் அறிவுசார் பள்ளிகள் தொடங்க முதல்வர் அனுமதி வழங்கியுள்ளார். நடுநிலைப் பள்ளிகள் உயர் நிலைப் பள்ளிகளாக தரம் உயர்த்தப்பட்டதால், நிலையிறக்கம் செய்யப்பட்ட இடைநிலை ஆசிரியர் பணியிடம், தலைமையாசிரியர் பணியிடமாக நிலை உயர்த்தப்படுகிறது.


புதிய பணியிடங்கள்: நடுநிலைப் பள்ளிகளிலிருந்து உயர் நிலைப் பள்ளிகளாக நிலை உயர்த்தப்பட்ட 544 பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்காக ஆய்வகங்கள் உருவாக்கப்பட்டுள்ளன. இவற்றைப் பராமரிக்க 544 ஆய்வக உதவியாளர் பணியிடங்களும், அலுவலகப் பணிக்காக 344 இளநிலை உதவியாளர் பணியிடங்களும் ஏற்படுத்த முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஸ்மார்ட் ஸ்கூலில் கூடுதலாக என்ன வசதிகள்?
சாதாரணப் பள்ளிகளில் உள்ள கரும்பலகைகளுக்குப் பதிலாக ஸமார்ட் பள்ளிகளில் (அறிவுசார் பள்ளிகள்) ஸ்மார்ட் போர்டுகள் இருக்கும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.ஸ்மார்ட் பள்ளிகளில் ஏற்படுத்தப்பட உள்ள கூடுதல் வசதிகள் தொடர்பாக அவர்கள் மேலும் கூறியது:இந்தப் பள்ளிகளில் கம்ப்யூட்டர் உதவியுடன் மாணவர்களுக்கு பாடங்கள் கற்றுத்தரப்படும். வகுப்பறைகளில் சாதாரண கரும்பலகைக்குப் பதிலாக "ஸ்மார்ட் போர்டு' நிறுவப்படும்.இந்த ஸ்மார்ட் போர்டு கம்ப்யூட்டருடன் இணைக்கப்படும். அதன்மூலம் கம்ப்யூட்டர் திரையை போர்டில் பார்க்கலாம்.கல்வி தொடர்பான தகவல்கள், அனிமேஷன்கள், படங்கள் ஆகியவற்றை இன்டர்நெட் மூலமாக மாணவர்களுக்கு தெளிவாக விளக்கலாம். உயிரியல் பாடத்தில் நுரையீரல் செயல்பாடு குறித்து விளக்க வேண்டும் என்றால், வெறுமனே படத்தை மட்டும் வரையாமல், அது எவ்வாறு செயல்படும் என்பதை அனிமேஷன் மூலம் விளக்கலாம்.அதன்மூலம், மாணவர்கள் மிகச் சிறந்த முறையில் கல்வி கற்க முடியும். அதேநேரத்தில், வெள்ளை நிறத்தில் இருக்கும் இந்த ஸ்மார்ட் போர்டை பாடங்களை எழுதுவதற்கும் பயன்படுத்தலாம் என்று அவர்கள் தெரிவித்தனர்.

No comments:

Post a Comment