சென்னை, மார்ச் 3:
மின் தட்டுப்பாட்டை சமாளிக்கும் வகையில் அரசு அளித்துள்ள அனுமதியின் பேரில் பள்ளிகள் பயன்படுத்தும் ஜெனரேட்டர்கள் 5 கிலோ வாட் திறனை மிஞ்சக் கூடாது என தமிழக அரசு ஆணை பிறப்பித்துள்ளது.
இந்த ஆண்டு 10-ம் வகுப்பு, பிளஸ்-2 தேர்வுகளை சுமார் 20 லட்சம் மாணவர்கள் எழுத உள்ளனர். மின்வெட்டால் மாணவர்கள் பாதிக்கப்படக் கூடாது என்பதற்காக மேல்நிலை மற்றும் உயர்நிலைப் பள்ளிகளுக்கு ஜெனரேட்டர்கள் மூலம் மின்சாரம் வழங்கப்படும் என முதல்வர் ஜெயலலிதா அறிவித்திருந்தார்.
இதற்கான அரசாணை சனிக்கிழமை பிறப்பிக்கப்பட்டது. இதன்படி, அரசுப் பள்ளிகளுக்கு ஜெனரேட்டர்களை அரசே வாடகைக்குப் பெற்று வழங்கும். ஜெனரேட்டர்களை இயக்குவதற்கான டீசல் உள்ளிட்ட அனைத்து செலவுகளையும் அரசே ஏற்கும். அரசு உதவி பெறும் மற்றும் தனியார் மேல்நிலை மற்றும் உயர்நிலைப் பள்ளிகள் ஜெனரேட்டர்களை வாடகைக்கு எடுத்து இயக்கிக் கொள்ளலாம். அதற்கு ஏற்படும் கூடுதல் செலவை அரசு ஏற்கும். மார்ச், ஏப்ரலில் மட்டுமே இந்த வசதி செய்துதரப்படும்.
5 கிலோ வாட் திறனை மிஞ்சக்கூடாது: அரசு அனுமதியின்பேரில் பள்ளிகள் பயன்படுத்தும் ஜெனரேட்டர்கள் 5 கிலோ வாட் திறனை மிஞ்சக் கூடாது. அரசுப் பள்ளிகளைப் பொறுத்தவரை, இந்த ஜெனரேட்டரை பயன்படுத்துவதால் ஆகும் ஒட்டுமொத்த செலவு மாதத்துக்கு ரூ. 40,200-ஐ தாண்டக் கூடாது. அரசு உதவிபெறும் மற்றும் தனியார் பள்ளிகளுக்கு இந்தத் தொகையில் மூன்றில் இரண்டு பங்கு அளவுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. அதாவது ஒட்டுமொத்த செலவு மாதத்துக்கு ரூ. 26,800-ஐ தாண்டக் கூடாது.
மாவட்ட அளவில் அமைக்கப்பட்ட குழுக்கள், அரசு அளித்துள்ள வழிகாட்டுதல்களின்படி பள்ளிகளுக்கு ஆகும் இந்த செலவினத்துக்கான ஒப்புதலை அளிக்கும். இந்த செலவினங்களை அரசுப் பள்ளிகள், தங்களிடமுள்ள பெற்றோர் - ஆசிரியர் நிதி, பள்ளி சிறப்புக் கட்டணம் ஆகியவற்றிலிருந்து செலவழித்துக் கொள்ள வேண்டும். இந்தச் செலவினம் முழுவதையும் பின்னர் அரசிடமிருந்து திரும்பப் பெற்றுக் கொள்ளலாம்.
அரசு உதவி பெறும் மற்றும் தனியார் பள்ளிகள், தங்கள் சொந்த செலவில் ஜெனரேட்டர்களை முதலில் வாடகைக்கு எடுத்துக் கொள்ளவேண்டும். பின்னர் மாவட்ட குழுவின் பரிந்துரையின் பேரில், மாவட்ட ஆட்சியர் அரசிடமிருந்து செலவினத்துக்கான தொகையை பெற்றுத் தருவார். இவ்வாறு அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment