தமிழகத்தில் புதிதாக 53 மாணவர் விடுதிகளைத் தொடங்க முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.
இதுகுறித்து, தமிழக அரசு வெளியிட்ட அறிவிப்பு:
தமிழகத்தில் ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத் துறையின் கீழ் ஆதிதிராவிட மாணவர்கள் தங்கிப் படிப்பதற்காக ஆயிரத்து 254 நல விடுதிகள் செயல்பட்டு வருகின்றன. அரசின் பல்வேறு நலத்திட்ட உதவிகளின் பயனாக இப்போது ஆதிதிராவிட மாணவர்கள் அதிகளவில் கல்வி கற்க முன்வருகின்றனர்.
இடைநிற்றல் மிகவும் குறைந்துள்ளதால் மாணவர்கள் தங்கிப் படிப்பதற்கு ஏதுவாக புதிய விடுதிகள் தொடங்க முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார். ஆதிதிராவிட மாணவர்களுக்காக 21 பள்ளி விடுதிகள், 4 கல்லூரி விடுதிகள் என மொத்தம் 25 விடுதிகள் புதிதாக தொடங்கப்படும். இதில் ஒரு விடுதிக்கு 50 மாணவர்கள் வீதம் ஆயிரத்து 250 பேர் சேர்க்கப்படுவர்.
விடுதிகளை பராமரிக்க ஒரு விடுதிக்கு பட்டதாரி காப்பாளர் அல்லது காப்பாளினியும், சமையலர் மற்றும் காவலர் என மொத்தம் மூன்று பணியிடங்கள் ஏற்படுத்தப்படும்.
அதன்படி 25 விடுதிகளுக்கு 75 பணியிடங்கள் தோற்றுவிக்கப்படும்.
புதிதாக தொடங்கப்படவுள்ள 25 விடுதிகளுக்காக அரசுக்கு தொடர் செலவினமாக ரூ.2.93 கோடியும், தொடரா செலவினமாக ரூ.39.71 லட்சம் என மொத்தம் ரூ.3.32 கோடி செலவாகும்.
பிற்படுத்தப்பட்டோர்-மிகவும் பிற்படுத்தப்பட்டோர்: இதேபோன்று, பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் இன மாணவர்களுக்காக 15 விடுதிகளும், மாணவியர்களுக்காக 10 விடுதிகள் என மொத்தம் 25 கல்லூரி விடுதிகளும், இஸ்லாமிய சிறுபான்மையின பள்ளி மாணவர்களுக்காக 3 விடுதிகள் என மொத்தம் 28 விடுதிகள் தொடங்கப்படும்.
இந்த விடுதிகளை பராமரிக்க 112 பணியிடங்கள் தோற்றுவிக்கப்படும். இதனால் அரசுக்கு தொடர் செலவினமாக ரூ.1.43 கோடியும், தொடரா செலவினமாக ரூ.58.51 லட்சம் என மொத்தம் ரூ.2.1 கோடி செலவாகும் என தமிழக அரசின் அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment