பொதுத் தேர்வுகளில், மாணவர்கள் ஒழுங்கீனச் செயல்களில் ஈடுபட்டால், கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என, தேர்வுத் துறை இயக்குனர் எச்சரித்தார்.
கடந்த பிளஸ் 2 பொதுத் தேர்வில், 184 மாணவர்களுக்கு தண்டனை வழங்கப்பட்டதையும் சுட்டிக் காட்டினார்.
நாளை ஆரம்பம்: தமிழகம் மற்றும் புதுச்சேரியில், நாளை(மார்ச்8) முதல், பிளஸ் 2 பொதுத் தேர்வுகள் துவங்குகின்றன. இரு மாநிலங்களிலும் சேர்த்து, ஏழு லட்சத்து, 60 ஆயிரத்து, 975 மாணவர்கள் தேர்வை எழுத, 1,974 தேர்வு மையங்கள் அமைக்கப் பட்டுள்ளன.
தலைநகர் சென்னையில், 412 பள்ளிகளில் இருந்து, 50 ஆயிரத்து, 201 மாணவர்கள், 139 மையங்களிலும்; புதுச்சேரியில், 105 பள்ளிகளில் இருந்து, 12 ஆயிரத்து, 42 மாணவர்கள், 31 மையங்களிலும் தேர்வை எழுதுகின்றனர்.
தேர்வுத்துறை எச்சரிக்கை: பிளஸ் 2 பொதுத் தேர்வில், ஒழுங்கீனச் செயல்களில் மாணவர்கள் ஈடுபட்டால், கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என, தேர்வுத் துறை இயக்குனர் வசுந்தரா தேவி எச்சரித்துள்ளார்.
அவர் வெளியிட்ட செய்திக் குறிப்பு: கேள்வித்தாள் கட்டுக்காப்பு மையங்களில், 24 மணி நேரமும் ஆயுதம் தாங்கிய போலீசார் பாதுகாப்பில் ஈடுபட்டுள்ளனர். இந்த மையங்களை அடிக்கடி கண்காணிக்க, அனைத்து ஆய்வு அலுவலர்களுக்கும் உத்தரவிடப் பட்டுள்ளது. ஒவ்வொரு மாவட்டத்திலும், கலெக்டர் தலைமையில் அமைக்கப்பட்ட மாவட்ட தேர்வுக்குழுவில், கல்வித்துறை அலுவலர்களும் சேர்ந்து செயல்படுவர்.
கண்காணிப்பு குழு: ஒரு சில மையங்களில், நிலையான கண்காணிப்பு குழுக்கள் அமைக்கப்பட்டு, தேர்வு துவங்கியதில் இருந்து, முடியும்வரை அங்கேயே தங்கியிருந்து கண்காணிப்பர். 4,000க்கும் மேற்பட்ட உறுப்பினர்கள் அடங்கிய, பறக்கும் படை குழுக்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.
இயற்பியல், கணிதம், விலங்கியல், வேதியியல், உயிரியல் மற்றும் தாவரவியல் ஆகிய, ஆறு பாடங்களுக்குரிய தேர்வின்போது, வேறு பள்ளிகளைச் சேர்ந்த தலைமை ஆசிரியர்கள், முதன்மை கண்காணிப்பாளர்களாக இருந்து தேர்வை நடத்துவர். இதுதவிர, அண்ணா பல்கலையைச் சேர்ந்த அலுவலர்களும், தேர்வு மையங்களை பார்வையிடுவர்.
184 பேருக்கு தண்டனை: துண்டுத்தாள் வைத்திருத்தல், அதைப்பார்த்து எழுத முயற்சித்தல், பிற மாணவர்களைப் பார்த்து எழுதுதல், தேர்வு அதிகாரிகளிடம் முறைகேடாக நடந்து கொள்ளுதல், விடைத்தாளை மாற்றம் செய்தல், ஆள் மாறாட்டம் செய்தல் போன்றவை, கடும் குற்றங்களாக கருதப்படும். கடந்த ஆண்டு பிளஸ் 2 தேர்வில், பல்வேறு குற்றங்களில் ஈடுபட்ட, 184 மாணவர்களுக்கு தண்டனை வழங்கப்பட்டது.
சிறப்பு அம்சங்கள்
* இந்த ஆண்டில் இருந்து, 10ம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 மாணவர்களுக்கு, கூடுதல் ரகசியக் குறியீடு மற்றும் புகைப்படங்களுடன் கூடிய மதிப்பெண் சான்றிதழ்கள் வழங்கப்பட உள்ளன.
* ஆள் மாறாட்டத்தை தவிர்க்கும் வகையில், தேர்வர்களுடைய புகைப்படங்கள், பெயர் பட்டியலிலும், ஹால் டிக்கெட்டிலும் பதிவு செய்து வழங்கப்பட்டுள்ளன.
* அனைத்து பாட தேர்வுகளின்போதும், தமிழ் வழி கேள்விகளுடன், ஆங்கில வழி கேள்விகளும், ஒரே தாளில் இடம் பெறும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
* இயற்பியல், வேதியியல், உயிரியல், தாவரவியல், விலங்கியல், கணிதம், வரலாறு, வணிகவியல், பொருளியல், கணக்கியல் ஆகிய பாடங்களுக்கு, சிறுபான்மை மொழிகளான தெலுங்கு, கன்னடம், மலையாளம், உருது ஆகிய மொழிகளிலும், கேள்வித்தாள் இடம் பெற்றிருக்கும்.
* சென்னை புழல் மற்றும் வேலூர் மத்திய சிறைகளில், 49 சிறைவாசிகள் பிளஸ் 2 தேர்வை எழுதுகின்றனர். இவ்வாறு தேர்வுத்துறை இயக்குனர் கூறியுள்ளார்.
தேர்வெழுதும் மாணவர்கள் விவரம்
* பள்ளிகள் எண்ணிக்கை: 5,557
* மொத்த மாணவர்கள்: 7,60,975
* மாணவர்கள்: 3,53,006
* மாணவிகள்: 4,07,969
* மாணவிகள் கூடுதல்: 54,963
* 2011ஐ விட மொத்த கூடுதல்: 37,403
* தனித்தேர்வு மாணவர்கள்: 61,319
* மொத்த மாணவர்கள்: 7,60,975
* மாணவர்கள்: 3,53,006
* மாணவிகள்: 4,07,969
* மாணவிகள் கூடுதல்: 54,963
* 2011ஐ விட மொத்த கூடுதல்: 37,403
* தனித்தேர்வு மாணவர்கள்: 61,319
No comments:
Post a Comment