TAANAKS VNR செய்திகளை உங்கள் மொபைலில் பெறுவதற்கு ON TAANAKS-NEWS என்று டைப் செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பவும்.

Sunday, March 11, 2012

கல்விச்சாலையா? சிறைச்சாலையா?

மனிதனை மனிதனாக மாற்றுவதும், மனிதனை மற்ற விலங்கிலிருந்து வேறுபடுத்துவதும் கல்வியாகும். அதுதான் பண்பாட்டையும், நல்ல பழக்கவழக்கங்களையும் வளர்க்கிறது. மனிதப் பண்பையும், மனித நேயத்தையும் வளர்த்தெடுக்கிறது. அதனால்தான் கல்வி மனித சமுதாயத்தின் தவிர்க்க முடியாத தேவையாகிறது.


 "ஓர் அரசாங்கத்தின் நோக்கமே மக்களுக்குக் கல்வியைப் பயிற்றுவிப்பதுதான்' என்று மாவீரன் நெப்போலியனும், "ஒரு தேசத்தின் தலைவிதியைத் தீர்மானிப்பது வகுப்பறைகளே' என்று கல்வியாளர் கோத்தாரி கூறியதும் அதனால்தான். 
 இத்தனை ஆண்டுகளுக்குப் பிறகு மத்திய அரசாங்கம் "குழந்தைகள் இலவசக் கட்டாயக் கல்வி உரிமைச் சட்டம் - 2009' கொண்டு வந்திருப்பதும், அரசியல் அமைப்புச் சட்டத்தில் இதற்கான பரிந்துரை கட்டாயமாக்கப்பட்டிருப்பதும் கல்வியின் இன்றியமையாமையை எடுத்துக் காட்டுகிறது. இதனால்தான் மத்திய, மாநில அரசுகள் இதன் உரிமைக்காகப் போராடுகின்றன; விட்டுக் கொடுக்க மறுக்கின்றன.


மனிதர்களுக்கு எண்ணும், எழுத்தும் இரண்டு கண்களாகின்றன என்றும், கல்லாதவர்களுக்கு இரண்டு கண்களும் புண்களாகின்றன என்றும் நீதி நூல்கள் கூறுகின்றன. இத்தனை காலமாக இல்லாத அளவுக்கு இப்போது கல்விக்காகப் பணத்தை வாரி வாரி இறைக்கின்றனர். எல்லாம் சரி, இந்தக் கல்வி இப்போது எங்கே போய்க் கொண்டிருக்கிறது? அதன் இலக்கு திசைமாறிக் கொண்டிருப்பதாகத் தினமும் வரும் செய்திகள் தெரிவிக்கின்றன. 


 சென்னை பாரிமுனையில் உள்ள ஒரு பள்ளியின் ஆசிரியை, அப்பள்ளியில் ஒன்பதாவது படிக்கும் மாணவனாலேயே படுகொலை செய்யப்பட்டிருக்கிறார் என்பது நினைத்துப் பார்க்க முடியாதது. "மாதா பிதா குரு தெய்வம்' என்று படிக்கப்பட்ட ஒரு நாட்டில் இப்படியும் நடக்குமா? இந்தச் சின்ன வயதில் இப்படி ஒரு கொலைவெறி எங்கிருந்து வந்தது? 


 சென்னையில் கல்வியதிகாரி திட்டியதால் மாநகராட்சிப் பள்ளி ஆசிரியர் ஒருவர் "ஆசிட்' குடித்துள்ளார். இந்த நிகழ்வுக்குக் காரணமாகக் கருதப்பட்ட கல்வியதிகாரி மற்றும் தலைமையாசிரியர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர் ..
  
செங்கல்பட்டு மருத்துவக் கல்லூரியில் உதவிப் பேராசிரியராகப் பணிபுரிந்து வந்த பேராசிரியை ஒருவர் கிணற்றில் குதித்துத் தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
 உயர் கல்வியாகிய மருத்துவக் கல்வி பயின்று வந்த ஒரு மாணவன் சக மாணவனையே துண்டு துண்டாக வெட்டிக் கொலை செய்த அந்தக் கோரக் கொடுமையை எத்தனை காலம் ஆனாலும் மறக்க முடியுமா? 


கல்லூரிக்கு வரும் முதலாண்டு மாணவர்களைக் கேலியும், கிண்டலும் செய்யும் "ராகிங்' கொடுமையால் மனம் உடைந்து மாண்டவர்கள் எத்தனை பேர்? கல்விக்கூடத்தை விட்டே ஓடியவர்கள் எத்தனை பேர்? நடைபிணங்களாக மாறியவர்கள் எத்தனை பேர்? 


 பொது இடத்தில் எப்படி நடந்துகொள்ள வேண்டும் என்பது தெரியாமல் பேருந்துகளில் ஏறிக் கொண்டு, சக பயணிகள் முகம் சுளிக்கும்படி கும்மாளம் அடிப்பதும், "பேருந்து தினம்' என்ற பெயரில் பேருந்து கூரையில் ஏறிக்கொண்டு கூத்தடிப்பதும் நமது கல்வி முறையைச் சந்தேகிக்க வைக்கிறது. 


 சில பள்ளிகளில் ஆசிரியர்களே சாதி வெறியோடு செயல்படுவதும், சில கல்லூரிகளில் மாணவர்கள் சாதி வெறியோடு செயல்படுவதும் கலவரங்களின்போது வெளிப்படுகிறது. 


மாணவர்கள் போதைப் பொருளுக்கும், பாலியல் வன்முறைக்கும் இலக்காகும் போக்கு தொடர்கிறது. 
சில மாணவர்கள் சமூக விரோதிகளுக்கும், அரசியல்வாதிகளுக்கும் கூலிப்படையாகச் செயல்படுவதும், செயல்படுத்துவதும் மன்னிக்க முடியாத குற்றம் என்று இவர்களுக்குப் புரிய வைக்க வேண்டாமா? 


மாணவர்களும், இளைஞர்களும் இந்தச் சமுதாயத்தின் அசைக்க முடியாத அங்கங்கள்; சமுதாய விருட்சத்தின் வேர்களாக பெற்றோர்களும், ஆசிரியர்களும் இருந்தாலும், மாணவர்களும், இளைஞர்களுமே அவற்றின் விழுதுகள்; வேர்கள் பழுதாகும்போது இந்த விழுதுகளே தாங்க வேண்டும். இந்த விழுதுகளே பழுதானால்...


தமிழகத்தில் கல்லூரி மாணவர்கள் சமூகவிரோதச் செயல்களிலும், தீவிரவாதச் செயல்களிலும் ஈடுபடுவது கடந்த சில ஆண்டுகளாக அதிகரித்துள்ளது என்று உளவுத்துறையினர் தெரிவித்துள்ளனர். 


கடந்த நவம்பர் மாதம் சென்னை தாம்பரம் அருகே வெடிகுண்டு வைக்கத் திட்டமிட்டதாக பொறியியல் கல்லூரி மாணவர் ஒருவர் கைது செய்யப்பட்டது இதை மெய்ப்பித்துள்ளது. தமிழகத்தில் தீவிரவாதச் செயல்கள் அதிகரித்து வருவதற்கு அரசியல், சமூக, பொருளாதார ஏற்றத்தாழ்வுகளே காரணங்களாகும் என்பதில் ஐயமில்லை. அத்துடன் நுகர்வுக் கலாசாரத்தால் எதையும் உடனடியாகப் பெறத் துடிக்கும் மாணவர்கள் திருட்டு, வழிப்பறி, கொள்ளை போன்ற சமூகவிரோதச் செயல்களில் ஈடுபடுகின்றனர். சென்னை போன்ற பெரிய நகரங்களில் இது அதிகரித்து வருவதாகக் கூறப்படுகிறது. 20 ஆண்டுகளுக்கு முன்பு திராவிட இயக்கங்களிலும், திராவிடக் கட்சிகளிலும் சேருவதற்கு ஆர்வம் காட்டிய மாணவர்கள் இப்போது ஆர்வம் காட்டுவதில்லை. மாறாக, திராவிட இயக்கங்கள் விட்டுச் சென்ற இடத்தைத் தடை செய்யப்பட்ட இயக்கங்களும், தீவிரவாத இயக்கங்களும் அடைவதற்கு முயல்வதாகக் காவல்துறையினர் கூறுகின்றனர். இவ்வாறு மாணவர்கள் சீரழிந்து போவதற்கு இந்தச் சமுதாயச் சீரழிவையே காரணமாகக் கூற வேண்டும். எப்படியாவது பணம் பண்ண வேண்டும் என்று சுயநலத்தோடு அலைகிற சமுதாயம் இளைய தலைமுறைக்கு எதைக் கற்றுக் கொடுக்கும்? ஊழலும், லஞ்சமுமே ஒரு நாட்டின் உற்பத்திப் பொருளாக மாறிவிட்டபோது ஒழுக்கமும், உண்மையும் ஓடி ஒளியாமல் என்ன செய்யும்? 


 அறங்களிலேயே தலைசிறந்ததாகக் கருதப்பட்ட கல்வி என்பது இப்போது கடைச்சரக்காகிவிட்டது. பணம் இருந்தால்தான் படிக்கவே முடியும் என்ற நிலை உருவாகிவிட்டது. "படிப்பு' என்பதே பணம் சம்பாதிப்பதற்கான ஒரு தொழில் என்றே பெற்றோரும், மற்றோரும் எண்ணுகின்றனர். இவர்கள் கற்பது ஒழுக்கமும், பண்பாடும், மனித நேயமும் வளர்வதற்கென்று யாராவது, எப்போதாவது நினைத்ததுண்டா? மனிதன் பிறந்த நிலையிலேயே விட்டுவிடப்பட்டால் அவன் மனிதனாக இருக்க மாட்டான். அவன் வாழும் சூழ்நிலை அவனது இயற்கைத் தன்மையைச் சூறையாடி விடும்; பல பேர் நடந்து செல்லக்கூடிய பாதையில் செடியை வளரவிட்டால் அது அழிந்து போகும். கல்வியற்ற 
மனிதனும் அழிபட்டுத்தான் போவான். 


செடி நன்றாக வளர வேண்டுமானால் மண்ணைக் கிளறி, காலாகாலத்தில் நீர் பாய்ச்சி, எருவிட்டு, புழு பூச்சி முதலியன அணுகாதபடி காப்பாற்றப்பட வேண்டும். அதுபோலவே மனிதன் பண்பாடு பெற வேண்டுமானால் அவனுக்குக் கல்வி மிகவும் அவசியமானது. இவ்வாறு கல்வியைப் பற்றி ஆராய்ச்சி மேற்கொண்ட ரூசோ கூறினார்.


மக்களுக்குக் கல்வியின் தேவை புரிகிறது. ஆனால், கல்வி முறைதான் புரியவில்லை. உலகம் முழுவதும் உண்மையான கல்வியைத் தேடி மனிதகுலம் அலைகிறது. இந்தியா போன்ற வளர்முக நாடுகளில் இந்தத் தவிப்பு இருமடங்காகிறது. சமத்துவத்தையும், சமதருமத்தையும் நோக்கி இந்தக் கல்விமுறை ஏழை, எளிய மக்களை அழைத்துப் போகவில்லை. மாறாக, பெரும்பான்மையான மக்களிடமிருந்து அன்னியப்பட்டுப் போனது. "ஏட்டுச் சுரைக்காய் கறிக்குதவாது' என்றும், "பள்ளிக் கணக்கு புள்ளிக்கு ஆகாது' என்றும் இந்தக் கல்விமுறையைக் கேலி செய்யும் நாட்டுப்புற மக்களின் பழமொழிகள் ஏராளம். இதைப் பற்றி நம் கல்வித்துறை கவலைப்பட்டதே இல்லை. கடந்த காலங்களில் அரசும், கல்வித்துறையும் நியமித்த கல்விக் குழுக்களின் அறிக்கையை முழுமையாகப் படித்ததுண்டா? நடைமுறைப்படுத்தியதுதான் உண்டா? தன்னைச் சுற்றியிருக்கும் மனிதர்களைப் பற்றியே கவலைப்படாத ஒரு புதிய சமுதாயத்தை இந்தக் கல்விமுறை வளர்த்து வருகிறது. "மாதா பிதா குரு தெய்வம்' என்பதெல்லாம் அவர்களுக்குப் புரியாது; நுகர்வுக் கலாசாரத்தில் அதற்கு எல்லாம் இடமில்லை. கண்ணையும், காதுகளையும் மூடிக் கொண்டு இசையை மட்டும் கேட்டு அனுபவிப்பார்கள். வேறு எதுவும் அவர்களுக்குத் தேவையில்லை. பரந்த உள்ளமும், பண்பாடும் வளர்க்க வேண்டிய கல்விமுறை பணம் பண்ணும் தொழிலாகச் சுருங்கிவிட்டது. 


மனித மாண்புகளை வளர்ப்பதற்குப் பதிலாக, மதிப்பெண் வாங்கும் இயந்திரமாக மனிதர்களை மாற்றிவிட்டது. எந்திரங்களுக்கு இதயம் ஏது? இதயம் இல்லாத மாணவர்களை உருவாக்குவதால் என்ன பயன்? அன்னையும், பிதாவுமான முன்னறி தெய்வங்களையே அநாதை விடுதிக்கு அனுப்புவதும், வணக்கத்துக்குரிய குருவையே கொலை செய்வதுமான மனித நேயமற்ற போக்கையே இந்தக் கல்விமுறை வளர்த்தெடுக்கிறது


"எங்கு எது நடந்தாலும் கண்டு கொள்ளாதே' என்பதுதான் இந்தக் கல்வி அவர்களுக்குக் கற்றுக் கொடுத்த பாடமாகும். இந்தப் பாடத்திட்டம்தான் இத்தனை காலமாக இங்கே நடத்தப்படுகிறது. 


 "கல்வியின் நோக்கம், கற்கும் பிள்ளைகளின் தன்னம்பிக்கையை வளர்ப்பதாகவும், மனவலிமை மற்றும் நற்பண்புகளை வளர்ப்பதாகவும் இருக்க வேண்டும்' என்று சுவாமி விவேகானந்தர் கூறியுள்ளார்


. நமது கல்விக்கூடங்களில் இதற்கு இடம் இருக்கிறதா? மாணவர்களின் ஆளுமையை வளர்ப்பதற்குத் தேவையான கலை, கைத்தொழில், விளையாட்டு, நீதிபோதனை முதலிய வகுப்புகள் முடக்கப்பட்டு, அங்கும் மனப்பாடப் படிப்பு மட்டுமே நடத்தப்படுகிறது. பல பள்ளிகளில் நூலகம் என்பதே இல்லை. இருந்தாலும் அவை செயல்படுவதே இல்லை. எல்லாவற்றுக்கும் மேலாக நல்ல ஆசிரியர்களின் தேவை இன்னும் தொடர்கிறது


 கிரேக்க மாவீரன் அலெக்சாண்டரின் வெற்றிகளுக்கு அவனது ஆசிரியர் அரிஸ்டாடில் பின்னணியில் இருந்தார் என்று வரலாறு கூறுகிறது. ""நான் வாழ்வதற்காக என் தந்தைக்குக் கடமைப்பட்டுள்ளேன்; நன்றாக வாழ்வதற்கு என் ஆசிரியருக்குக் கடமைப்பட்டுள்ளேன்'' என்று அலெக்சாண்டர் கூறியுள்ளார். ஆனால், இங்கே நல்ல ஆசிரியர்களுக்கு ஒரு மாணவன் தரும் பரிசு மரணம்தானா


 கல்விச்சாலை பெருகினால் சிறைச்சாலைகள் குறையும்; குறைய வேண்டும் என்பதுதான் நியதி; இங்கே கல்விச்சாலைகளும் பெருகுகின்றன; சிறைச்சாலைகளும் நிரம்பி வழிகின்றன. இந்தச் சமுதாயத்தின் சீர்கேடுகளுக்குத் தீர்வு காண வேண்டாமா?....
  
நன்றி : தினமணி 12.03.2012

No comments:

Post a Comment