By ப. இசக்கி
First Published : 09 May 2011 12:00 AM IST
அடுத்தடுத்து நடந்த ஆட்சிகளில் தாழ்த்தப்பட்ட மக்களுக்காக ஒதுக்கிய தொகை முழுமையாக அவர்களுக்கு மட்டுமே செலவு செய்யப்பட்டிருந்தால், அந்த மக்களில் பாதி பேராவது முன்னேறி இருப்பார்கள். ஆனால் அந்த மக்களில் 80 சதவீதம் பேர் இன்னும் பழைய நிலையிலேயே இருக்கிறார்கள்.
கல்வி, வேலை வாய்ப்பில் 18 சதவீத இட ஒதுக்கீடு தந்தாலும், இப்போது இந்த மக்களின் அளவு 22 சதவீதம் அளவுக்கு உயர்ந்துவிட்டதாக சில புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.
தாழ்த்தப்பட்ட மக்களுக்காக குரல் தர வேண்டும் என்பதற்காக சட்டப்பேரவை, மக்களவைத் தொகுதிகளில் சில தொகுதிகள் இவர்களுக்காகவே ஒதுக்கப்பட்டுள்ளன. தனி தொகுதிகள் (ரிசர்வ்) எனப்படும் அவற்றில் வெல்பவர்கள் தாழ்த்தப்பட்ட மக்களுக்கு ஒன்றுபட்டு குரல் எழுப்புவதில்லை. தாங்கள் சார்ந்துள்ள கட்சி எடுக்கும் நிலைப்பாட்டைத்தான் ஆதரிக்கின்றனர்.
தமிழக அரசு சிறப்பு உட்கூறு திட்டத்தில் ஆதி திராவிடர் நலனுக்காக ஒதுக்கும் பணத்தை முழுமையாக இவர்கள் நலனுக்காக பயன்படுத்த வேண்டும் என்ற கோரிக்கை வலுவாக உள்ளது. இதை முழுமையாகச் செய்தாலே இந்த மக்கள் பெரிய அளவில் முன்னேறி விடுவார்கள்.
மேலும் ஆதி திராவிடர் நலத் துறைக்கு ஒதுக்கும் நிதியில் சுமார் 70 சதவீதம் கல்வித் துறைக்கு, அதாவது ஆதி திராவிடர் பள்ளிகளுக்காக செலவிடப்படுகிறது. பொதுக் கல்வித் துறையிலேயே ஆதி திராவிடர் பள்ளிகளுக்கென தனி இயக்குநரை நியமித்து அதற்காக நிதி ஒதுக்கினால், இந்த நிதியை ஆதி திராவிட மக்கள் நலனுக்காக செலவிடலாம். இது பெரிய அளவில் உதவியாக இருக்கும்.
ஆதி திராவிடர்களுக்கு மனைப் பட்டா தருவதற்காக நிதி ஒதுக்கி, நில உரிமையாளர்கள் வழக்கு தொடர்வதால் பட்டா தருவது நிலுவையில் உள்ளது. இவ்வாறு சுமார் 5000 வழக்குகள் உள்ளன. இதற்கு ஒதுக்கிய நிதியும் செலவிடப்படாமல் உள்ளது. சிறப்பு நீதிமன்றம் அமைத்து இந்த வழக்குகளை பைசல் செய்தால்தான் இந்த மக்களுக்கு விரைவாக பட்டா கிடைக்கும் என்கிறார் இந்தியக் குடியரசுக் கட்சி மாநிலத் தலைவர் செ.கு. தமிழரசன்.
மாணவர் விடுதிகள்:
ஆதிதிராவிட மாணவர்கள் கல்வியில்
மேம்பாடு அடைவதற்காக அவர்களுக்கு கல்வி உதவித்தொகையுடன் உணவு, உடை, இருப்பிடம் ஆகியன அரசால் இலவசமாக வழங்கப்படுகின்றன. ஆதிதிராவிட மாணவர் விடுதிகளில் தங்கிப் படிக்கும் மாணவருக்கு உணவுக்காக ஒதுக்கும் தொகை, சிறையில் கைதிகளுக்கு ஒதுக்குவதைவிடக் குறைவு என்ற குற்றச்
ட்டு உள்ளது. எனவே, விலைவாசி உயர்வுக்கு ஏற்ப உணவுக் கட்டணத்தை ஆண்டுதோறும் அல்லது இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறையாவது மாற்றி அமைக்க வேண்டும்.
விடுதிகளுக்கு அரிசியை அரசு கொடுத்து விடுகிறது. மளிகைப் பொருள்களை கூட்டுறவுப் பண்டக சாலைகளில் பெற்றுக் கொள்ளலாம். காய்கனிகளை மட்டும் விடுதிக் காப்பாளர்கள் வெளிச்சந்தையில் கொள்முதல் செய்கின்றனர். அதற்கான தொகையை அந்தந்த வட்டாட்சியரிடம் பெற்றுக்கொள்ள வேண்டும். ஆனால் அந்தத் தொகையை வழங்க வட்டாட்சியர்கள் சதவீத அடிப்படையில் கமிஷன் கேட்பது பல முறைகேடுகளுக்கு வழி செய்கிறது என்பதும் காப்பாளர்களின் குற்றச்சாட்டு. இதனால் உணவின் அளவும், தரமும் குறைகிறது. இதைக் காரணம் காட்டி காப்பாளர்கள் தண்டிக்கப்படுகின்றனர். இந்த நிலையை மாற்ற வேண்டும் என்பது அவர்களின் கருத்து.
பொருளாதார மேம்பாட்டுக் கடன்கள்: "தாட்கோ' மூலம் வழங்கப்படும் பொருளாதார மேம்பாட்டுக் கடன்களை ஆதிதிராவிட மக்களின் பெயரில் பிற சமுதாய மக்களோ, பொருளாதார வசதி படைத்த மற்றவர்களோ பெற்று பயனடைவதாக தொண்டு நிறுவனப் பிரதிநிதிகள் கூறுகின்றனர்.
நிலம் இல்லாத ஏழைகள் நிலம் வாங்கவும், நிலம் வைத்திருப்பவர்கள் அதை மேம்படுத்தவும் ரூ. 1 லட்சம்வரை கடன் வழங்கப்படுகிறது. இதில் 50 சதவீதம் மானியம். 50 சதவீதம் வங்கிக் கடனாக வழங்கப்படுகிறது. இந்தக் கடனை, ஒரு தாழ்த்தப்பட்டவரின் பெயரில் அவர் கூலி வேலை செய்யும் நில உரிமையாளர் பெற்றுக் கொள்கிறார். கடனுக்கான மானியத்தை மட்டும் அவர் எடுத்துக் கொண்டு தாழ்த்தப்பட்டவருக்கு செலவுக்கு சிறிய தொகையைக் கொடுத்துவிட்டு கடனை ஒருசில மாதங்களில் திரும்பச் செலுத்தி விடுகின்றனர். இதில் கடனானது தாழ்த்தப்பட்ட மக்களுக்கு வழங்கப்பட்டதாகக் கூறப்பட்டாலும் உண்மையாக பயன்பெறுபவர் வேறு ஒருவரே. கடன் முறையாக திருப்பிச் செலுத்தப்படுவதால் அதிகாரிகள் இந்த முறைகேட்டைத் தடுப்பதில்லை.
இதேபோல, ஆட்டோ, மினி லாரி வாங்கவும் கடன் வழங்கப்படுகிறது. "நபார்டு' போன்ற வங்கிகள் மூலம் டிராக்டர் வாங்கவும், கடன், சிறு பால்பண்ணை வைக்க கடன், சுய தொழில் தொடங்கவும் கடன் வழங்கப்படுகிறது. இந்தக் கடன்களில் பெரும்பாலானவற்றை தாழ்த்தப்பட்டவர்களின் பெயரில் பிற சமுதாய மக்களே பெற்றுக் கொள்வதாக பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினர் டி. தேவேந்திரன் தெரிவித்தார்.
இந்த முறைகேடுகளைத் தடுக்க வேண்டுமானால் கடன் கொடுக்கும் முன்பு முறையான விசாரணையும், கடன் கொடுத்த பின்னர் அந்தக் கடனைப் பெற்றவர் அதைப் பயன்படுத்தி இருக்கிறாரா என்பதையும் கண்காணிக்க வேண்டும் என்கிறார் அவர்.
தாட்கோ நிதியுதவியைத் தருவதற்கென தனியாக ஒரு வங்கி இருந்தால் தாழ்த்தப்பட்ட மக்கள் கடன் பெற இன்னும் வசதியாக இருக்கும். வங்கிக்கும் ரிசர்வ் வங்கி விதிகள் மூலமாக அதிக சலுகைகள் கிடைக்கும் என்கிறார் செ.கு. தமிழரசன்.
கல்லூரியில் சேரும் ஆதி திராவிட மாணவர்களுக்கு ஓரிரு மாதங்களுக்குள் உதவித் தொகை தந்தால்தான் புத்தகம் வாங்கும் செலவுக்கு உதவும். சில மாதங்கள் கழித்து தருவதால் பயன் இல்லை என்கிறார் அவர்.
""ஆதிதிராவிட மக்களுக்குச் சொந்தமான பஞ்சமி நிலங்கள் பல்வேறு நபர்களால் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளன. இந்த நிலங்களை மீட்பதற்காக ஓய்வுபெற்ற நீதிபதி ஒருவர் தலைமையில் அமைக்கப்பட்ட பஞ்சமி நில மீட்பு ஆணையம் செயல்படாத நிலையில் உள்ளது. எனவே, இந்த ஆணையத்தின் செயல்பாடுகளை துரிதப்படுத்தி, பஞ்சமி நிலங்களை மீட்டு ஆதிதிராவிட மக்களிடமே மீண்டும் வழங்க வேண்டும்'' என்று சமூக சமத்துவப் படையின் நிறுவனத் தலைவர் ப. சிவகாமி கூறுகிறார்.
விரயமாகும் நிதி: ஆதிதிராவிட இனத்தவர்கள் சுய தொழில் தொடங்க அவர்களுக்கு கடனுதவி அளிப்பதுடன் சிறு தொழில் பயிற்சி அளிக்கும் வகையில் மாவட்டந்தோறும் ஐந்தாறு ஆண்டுகளுக்கு முன்பு பயிற்சி மையங்கள் கட்டப்பட்டன. அவை இப்போது மூடிக்கிடக்கின்றன. பல லட்சம் செலவில் கட்டப்பட்ட இம் மையங்களில் பயிற்சியளிக்க பயிற்சியாளர்கள் Aநியமிக்கப்படவில்லை.
இப்போது தனியார் நிறுவனங்களில் பயிற்சியளிக்கப்பட்டு வருகிறது. இதனால் அந்தக் கட்டடங்கள் அனைத்தும் பாழடைந்து வருகின்றன என்கிறார் "மனித உரிமைக் களம்' அமைப்பின் இயக்குநர் பரதன். எனவே, பயிற்சிக் கருவிகளை அளித்து பயிற்சியாளர்களை நியமித்தால் ஆதிதிராவிட இளைஞர்கள் பயன்பெறுவதுடன் அரசு நிதி விரயமாவதும் தடுக்கப்படும் என்கிறார் அவர்.
வீணாகும் கட்டடங்கள்: ஆதிதிராவிட மக்கள் சுய தொழில் தொடங்கும் வகையில் வியாபாரம் செய்ய "தாட்கோ' மூலம் நகர்ப்புறங்களிலும், பேரூராட்சிப் பகுதிகளிலும் ஆங்காங்கே வணிக வளாகங்கள் கட்டப்பட்டுள்ளன. இவற்றில் கடைகளை வாடகைக்கு எடுத்து சொந்தமாக வியாபாரம் செய்யும் தாழ்த்தப்பட்ட மக்களை விரல் விட்டு எண்ணி விடலாம். சில ஊர்களில் தாழ்த்தப்பட்டவரின் பெயரில் மற்றவர்கள் கடைகளை வாடகைக்கு எடுத்து பயன்படுத்தி வருகிறார்கள்.
விதிமுறைகள் கடுமையாக அமல்படுத்தப்படும் இடங்களில் கடைகள் காலியாகவே காட்சியளிக்கின்றன. நாளடைவில் அந்தக் கட்டடம் பாழடைந்து பயனற்றுப் போகும் நிலை உருவாகி வருகிறது. இதற்குப் போதுமான கண்காணிப்பு இல்லாமையும், தேவை அறிந்து கட்டடங்களைக் கட்டாததுமே காரணம் என்பது அச் சமுதாயப் பிரதிநிதிகளின் கருத்து. எதிர்காலத்தில் இதைத் தவிர்க்க வேண்டும்.
தாழ்த்தப்பட்ட மக்கள் பயன்பெறும் வகையில் நகரத்தில் முக்கியமான இடங்களில் திருமண மண்டபங்கள் கட்டப்பட்டுள்ளன. அவற்றைப் பயன்படுத்த விரும்புவோர் சாதிச் சான்றுடன் அந்தத் துறை அலுவலர்களை அணுகி அனுமதி பெற வேண்டும். சாதிச் சான்று பெறுவதிலும், அதிகாரிகளை சந்தித்து அனுமதி பெறுவதிலும் உள்ள சிரமங்களால் அந்த மண்டபங்கள் முழுமையாக பயன்படுத்த முடியாத நிலை உள்ளதாக அச் சமுதாய மக்கள் கூறுகின்றனர். இதை மற்ற சமுதாய மக்களும் பயன்படுத்த முன்வராததால் அவை பயனற்று காட்சிப் பொருளாகி வருகின்றன.
எந்தக் கட்சியில் இருந்தாலும் தாழ்த்தப்பட்ட சமூகத்துக்கு எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள் மற்றும் உள்ளாட்சி அமைப்பு நிர்வாகிகள் உள்ளிட்டவர்கள் ஏதேனும் ஒரு பொதுவான அமைப்பின் கீழ் சேருவதற்கு ஒரு ஏற்பாடு செய்ய வேண்டும் என்று மூத்த அதிகாரிகள் யோசனை தெரிவிக்கின்றனர்.
இந்த சமுதாயம் பயன்பெற வேண்டுமானால் தாழ்த்தப்பட்டவர்களின் பெயரில் மற்றவர்கள் பயன்பெறுவதைத் தடுக்கவும், திட்ட செயலாக்கத்தைக் கண்காணிக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவர்கள் வலியுறுத்துகின்றனர்.
No comments:
Post a Comment