TAANAKS VNR செய்திகளை உங்கள் மொபைலில் பெறுவதற்கு ON TAANAKS-NEWS என்று டைப் செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பவும்.

Thursday, December 27, 2012

ஏனிந்த முட்டுக்கட்டை?


First Published : 28 December 2012 02:28 AM IST
ஒரு வழியாகக் கடந்த 17-12-2012 அன்று, இந்திய நாடாளுமன்ற மாநிலங்களவையில் எஸ்.சி./ எஸ்.டி. இனத்தவருக்கு அரசுப் பணி பதவி உயர்வில் இடஒதுக்கீடு வழங்குவதற்கான 117-வது சட்டத்திருத்த மசோதா, அவைக்கு வந்திருந்த உறுப்பினர்களில் மூன்றில் இரண்டு பங்கு பலத்துடன் நிறைவேறியுள்ளது. இனி எப்போது இம்மசோதா மக்களவையில் நிறைவேற்றப்படுமோ தெரியவில்லை.
  இது தலித் மக்களின் பிரச்னை மட்டுமல்ல, இந்த தேசத்தின் பிரச்னையும்கூட. இந்து மதத்தின் சனாதன வித்தாக உருவெடுத்துள்ள சாதி எனும் கொடிய வேர், எல்லா இந்தியர்களிடமும் ஊடுருவிப் பாய்ந்து படர்ந்து நின்று நிலை கொண்டுள்ளது. எனவே, பிரமிடு வடிவிலான படிநிலைச் சாதிய சமூக அமைப்பில், உயர்ந்தோன் - தாழ்ந்தோன், மேலானவன் - கீழானவன், ஆதிக்கவாதி - அடிமைச்சாதி என்று மனித வேறுபாடு இயற்கைபோலவே காட்சியளித்து வருகிறது.
 ஒடுக்கப்பட்ட சமூக மக்கள் சமூகரீதியாக முன்னேற வேண்டுமெனில், அவர்கள் சுயமாகச் சிந்திக்கும் திறனுடையவர்களாக மாற வேண்டும். அதற்கு அறிவு அவசியம். அந்த அறிவுக்குத் திறவுகோல் கல்வி. எனவே, இம்மக்களின் பிள்ளைகளை பள்ளிக்கு அனுப்ப வேண்டும் என்று திட்டமிட்டுச் செயலாற்றியவர் கோலாப்பூர் சமஸ்தான மன்னர் சாகு மகராஜ். ஒடுக்கப்பட்ட மக்களை உயர்த்துவதற்காக, பல வழிகளில் உதவிய இவர்தான் 1902-இல் முதன்முதலாக இவர்களுக்காக இடஒதுக்கீட்டையும் அமல்படுத்தினார்.
 பட்டியல் வகுப்பினர் அல்லது, "ஷெட்யூல்டு காஸ்ட்' என்ற சட்டப்பூர்வமான பெயர்கொண்ட ஒடுக்கப்பட்ட மக்கள் சமூகம் உருவானதற்கு நீண்டதொரு வரலாற்றுப் பின்னணி உண்டு.
 இந்தியாவில் மக்கள்தொகை கணக்கெடுப்பு, 1881-இல்தான் முதன்முதலாக நடைபெற்றது. அப்போது சமய ரீதியாகவும், வர்ண ரீதியாகவும் மட்டுமே மக்கள் வகைப்படுத்தப்பட்டார்கள். ஏனெனில் அப்போது இந்துக்கள் மற்றும் இஸ்லாமியர் என்ற பிரிவே மேலோங்கியிருந்தது. பின்னர் தொடர்ந்து 1891, 1901, 1921, 1931 என்று பத்தாண்டுகளுக்கு ஒருமுறை நடைபெற்று வந்த மக்கள்தொகை கணக்கெடுப்புகளில்தான் வகுப்பு ரீதியாகவும் படிப்படியாகக் கணக்கிட்டனர்.
 ""1919-இல் மாண்டேகு - சேம்ஸ்போர்டு திட்டம்'' கொண்டு வரப்பட்டு, ஆங்கிலேயரின் அரசாட்சியில் இந்தியர்களுக்கும் பங்களிக்கும் உரிமை பரவலாக்கப்பட்டது. பிரிட்டிஷ் அரசாட்சியில் இந்தியர்களுக்கும் பிரதிநிதித்துவம் வழங்கியபோது சமூக ரீதியாக விளிம்பு நிலை மக்களாயிருந்தவர்களின் பிரதிநிதிகளுக்கும் வாய்ப்பு தர வேண்டும் என்ற கோரிக்கை பாபாசாகேப் அம்பேத்கரால் முன் வைக்கப்பட்டு, பிரிட்டிஷாரால் ஏற்றுக் கொள்ளப்பட்டது. அதன்படி, இந்திய ஆட்சிப் பணியில் தீண்டாதாரும் இடம் பெற்றனர்.
 அரசாட்சியில் பங்குபெறும் இந்தியப் பிரதிநிதிகளைத் தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் முறையைக் கொண்டு வருவதற்காக பிரிட்டிஷார் ""சவுத்பரோ குழு''வை அமைத்தனர். இக்குழுவின் முன் தீண்டாதாருக்கான கோரிக்கை வைத்து பாபாசாகேப் அம்பேத்கர் வாதாடியதன் பயனாக, அவர்களுக்கும் சில பிரதிநிதித்துவம் வழங்கப்பட்டது.
 ""லார்டு சர். ஜான் சைமன்'' என்பவர் தலைமையில் ஒரு குழுவை நியமித்தது பிரிட்டிஷ் பேரரசு. இந்தியாவில் தீண்டாத மக்கள் படும் கொடுமை, அவர்களின் இழிநிலை ஆகியவற்றையெல்லாம் தொகுத்து, இதிலிருந்து விடுபடத் தேவையான வழிமுறைகளையும் வகுத்து, அதை சைமன் குழுவில் சமர்ப்பித்து தீண்டாத மக்களின் வாழ்வுரிமைக்காக வாதாடி நின்றார் பாபாசாகேப் அம்பேத்கர். பாபாசாகேபின் கோரிக்கையில் உள்ள நியாயத்தை உணர்ந்த ஆங்கிலேய அரசு, தீண்டாதாரின் உரிமை குறித்து, வட்டமேஜை மாநாட்டில் தீர்மானிக்கப்படும் என்று அறிவித்ததோடு, அந்த மாநாட்டில் தீண்டாதாரின் பிரதிநிதிகளாகப் பங்கேற்க பாபாசாகேப் அம்பேத்கர் மற்றும் தாத்தா ரெட்டைமலை சீனிவாசன் இருவரையும் அழைத்தது.
 1930-இல் லண்டனில் நடைபெற்ற முதலாவது வட்டமேஜை மாநாட்டில் தீண்டத்தகாத  மக்கள் மட்டுமே வாக்களித்து தங்களது பிரதிநிதிகளைத் தேர்ந்தெடுக்கும் தனித் தொகுதி முறையை நடைமுறைப்படுத்துவது குறித்து ஆவன செய்ய "லோதியன் கமிட்டி' அமைக்கப்பட்டது. இதன் மூலம் இந்தியா முழுவதும் குடியிருந்த தீண்டத்தகாத மக்கள் மாநில வாரியாகக் கண்டறியப்பட்டு, ஒரு பட்டியலுக்குள் கொண்டு வரப்பட்டனர். அதுவே "ஷெட்யூல்டு காஸ்ட்' என்ற இனமாக அடையாளப்படுத்தப்பட்டது. இதுவே 1935-ஆம் ஆண்டு இந்திய அரசாங்க சட்டத்திலும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. அன்றைக்கு சென்னை, பம்பாய், வங்காளம், பஞ்சாப், பிகார், ஒரிசா, அசாம், காஷ்மீர் ஐக்கிய மற்றும் மத்திய என்று 10 மாகாணங்களைக் கொண்டிருந்த இந்திய நாட்டில் 429 சாதியினர் இந்தத் தீண்டத்தகாதார் பட்டியலுக்குள் கொண்டு வரப்பட்டனர்.
 இந்தியாவிற்கு 1947-இல் சுதந்திரம் கிடைத்தது. 1950-இல் இந்திய அரசியல் சட்டம் அமலுக்கு வந்தது. ஆனால், அதற்கு 20 ஆண்டுகளுக்கு முன்னரே அதாவது, பிரிட்டிஷ் பேரரசு காலத்திலேயே தலித் மக்களுக்கான இடஒதுக்கீடு 1932-இல் போடப்பட்ட பூனா ஒப்பந்தத்தின் மூலம் அதிகாரப்பூர்வமாக நடைமுறைக்கு வந்துவிட்டது என்பது குறிப்பிடத்தக்க சரித்திரச் செய்தியாகும்.
 இந்தியாவில் ஷெட்யூல்டு காஸ்ட் மக்களுக்கு வழங்கப்பட்டு வரும் இடஒதுக்கீடு என்பது மூன்று வகைப்படும்.
 அதில் முதலாவது "தேர்தல் ஒதுக்கீடு'. இதில் வேட்பாளர் மட்டுமே எஸ்.சி.யாக இருப்பார். ஆனால், வாக்காளர்கள் அனைத்து சாதியினரும்தான். எனவே, பிற சாதியினரின் வாக்குகளை அதிகமாகப் பெறுபவரே வெற்றியடைய முடியும். எனவே, "தலித் மக்கள் தங்களுக்குரிய உண்மையான பிரதிநிதியைத் தேர்ந்தெடுக்க முடியாமல் போகிறது என்பதை  இங்கே குறிப்பிட்டாக வேண்டும்.
 இரண்டாவது கல்வி ஒதுக்கீடு. இதன் மூலம் படிப்பறிவு பெற்ற பட்டதாரிகள் ஷெட்யூல்டு சமூகத்திலும் வரத் தொடங்கினர். இந்தக் கல்வி ஒதுக்கீடு முறையால் இச்சமூகம் மெல்ல மெல்ல மேலெழும்பி வருகிறது.
 மூன்றாவதாக வேலைவாய்ப்பு ஒதுக்கீடு. ஆண்டாண்டுகாலமாய் அடிமைச் சேவகம் மட்டுமே செய்வதற்குக் கட்டாயப்படுத்தப்பட்டு, கொடுமைக்குள்ளாக்கப்பட்ட தலித் சமூகம் தலைநிமிர அரசுப் பணி மிகவும் அவசியமாயிற்று. அவர்களுக்கும், ஆட்சியதிகாரப் பொறுப்பில் உரிய பங்கு வழங்க வேண்டும் என்ற நியாயமான உணர்வின் காரணமாகவே, வேலைவாய்ப்பில் இடஒதுக்கீடு கொண்டு வரப்பட்டது. ஆனால், இந்த இடஒதுக்கீடு சரிவரக் கடைப்பிடிக்கப்படாததால், இவர்களுக்குரிய பல லட்சம் பணியிடங்கள் இன்னும் காலியாகவே உள்ளன. இதேபோன்ற நிலைதான் பதவி உயர்வு ஒதுக்கீட்டிலும் நீடித்து வருகிறது.
 என்னதான் சட்டம் நன்றாக இருந்தாலும் அதை நடைமுறைப்படுத்துபவர் நாணயமற்றவராக இருந்துவிட்டால் அந்தச் சட்டத்தால் என்ன பயன்? என்று பாபாசாகேப் அம்பேத்கர் வினா எழுப்பியதற்கேற்ப, இந்த இடஒதுக்கீடு மத்திய, மாநில அரசுகளால் முற்றிலும் முழுமையாக அமல்படுத்தப்படவில்லை. இம் மக்களுக்கான அரசுப் பணியிடங்கள் முழுமையாக நிரப்பப்படவில்லை என்பது ஒருபுறமிருக்க, வழங்கப்பட்டுள்ள இடங்களும் கடைநிலை ஊழியர்களின் பணிகளாக உள்ளதே தவிர உயர் பதவிகளில் நிலைவாரியாக ஓரளவுக்குக்கூட நிரப்பப்படவில்லை.
 இந்நிலையில் இந்தியாவிலுள்ள பிற்படுத்தப்பட்ட மக்களுக்கும் இடஒதுக்கீடு வழங்குவதற்கு வகை செய்வதற்காக 1979-இல் நியமிக்கப்பட்ட மண்டல் குழு தனது அறிக்கையை 1980-இல் சமர்ப்பித்தது. இது பத்தாண்டுகள் கழித்து 1990-இல் அமல்படுத்தப்பட்டது. இதன்படி பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு மத்திய அரசுப் பணியிலே 27 விழுக்காடு நடைமுறைக்கு வந்தது. ஆக, இந்தியாவில் சமூகத்தில் ஒடுக்கப்பட்ட எஸ்.சி./எஸ்.டி. மக்களுக்கும் இடஒதுக்கீடு, ஒடுக்குகின்ற ஆதிக்கவர்க்கமான பிற்படுத்தப்பட்ட மக்களுக்கும் இடஒதுக்கீடு என்ற நிலை ஏற்பட்டுவிட்டது.
 16-11-1992-இல் இந்திரா சஹானி என்பவரால் பிற்படுத்தப்பட்ட மக்களுக்கான இடஒதுக்கீட்டை எதிர்த்துத் தொடரப்பட்ட வழக்கில் வழங்கப்பட்ட தீர்ப்பில், ""எஸ்.சி./எஸ்.டி. ஊழியர்களுக்கு அரசுப் பணி பதவி உயர்வில் இடஒதுக்கீடு வழங்கக்கூடாது. இதை 5-வது வருடத்திலிருந்து அமல்படுத்த வேண்டும்'' என்று அந்த வழக்கிற்கு எந்தவிதத்திலும் தொடர்பில்லாத ஒரு பிரச்னையில் தீர்ப்பு வழங்கியது நீதிமன்றம்.
 ஏற்கெனவே தலித் இனத்தாருக்கு இடஒதுக்கீடு வழங்குவதில் எவ்வளவு குளறுபடி செய்ய முடியுமோ, எவ்வளவு தாமதம் செய்ய முடியுமோ அதையெல்லாம் செய்து கொண்டிருந்த ஆதிக்க சாதி உணர்வு அதிகாரிகளால் இந்த நீதிமன்றத் தீர்ப்பு உடனடியாக நடைமுறைப்படுத்தப்பட்டது. அதன்படி, அரசுப் பதவி உயர்வில் இடஒதுக்கீடு வழங்குவது உடனடியாக நிறுத்தப்பட்டது.
 அதனால்தான் மீண்டும் பதவி உயர்விலும் இடஒதுக்கீடு வழங்க வேண்டுமென்று தலித் மக்கள் குரல் கொடுத்தார்கள். கோரிக்கை வைத்தார்கள். போராட்டம் நடத்தினார்கள். அதனால் இதற்காக 1995-இல் 16(4ஏ) என்ற 77-வது சட்டத்திருத்த மசோதா இந்திய நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது.
 இதன்படி எஸ்.சி., எஸ்.டி., ஊழியர்களுக்குப் பதவி உயர்வில் மீண்டும் இடஒதுக்கீடு வழங்க வகை செய்யப்பட்டது. ஆனால், இது நடைமுறைக்கே வரவில்லை.
 இதை எதிர்த்து எம். நாகராஜ் என்பவர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்தார். இவ்வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம் தனது 19-10-2006-இல் வெளியிட்ட தீர்ப்பில் கீழ்க்காணும் 3 நிபந்தனைகளை விதித்தது.
 1. அரசின் உயர் பதவிகளில் இடம் காலியாக இருக்கிறது என்பதை அரசு உறுதிப்படுத்த வேண்டும்.
 2. இப்பதவிகளில் எஸ்.சி., எஸ்.டி. ஊழியர்களை நியமிக்கும் அளவுக்கு அவர்கள் பாதிக்கப்பட்ட நிலையில்தான் உள்ளார்கள் என்பதை அரசு ஊர்ஜிதப்படுத்த வேண்டும்.
 3. இப்பதவிகளில் எஸ்.சி., எஸ்.டி. ஊழியர்களை நியமனம் செய்தால் அரசின் நிர்வாகத் திறன் எந்தவிதத்திலும் பாதிக்கப்படாது என்று அரசு உத்தரவாதம் அளிக்க வேண்டும்.
 இந்த மூன்று நிபந்தனைகளைத் தெளிவாக்கிய பின்னர்தான் பதவி உயர்வில் எஸ்.சி., எஸ்.டி. ஊழியர்களுக்கு இடஒதுக்கீடு வழங்கலாம் என்று தீர்ப்பு அளிக்கப்பட்டது.
 இந்நிலையில் உத்தரப் பிரதேசத்தில் முதலமைச்சராக பதவியேற்ற பகுஜன் சமாஜ் கட்சித் தலைவி செல்வி மாயாவதி, மேற்காணும் மசோதாவை மையப்படுத்தி அரசுப் பணி பதவி உயர்வில் இடஒதுக்கீடு வழங்க உத்தரவிட்டார். இதை எதிர்த்து அலகாபாத் அமர்வு உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்தார்கள்.
 இவ்வழக்கினை விசாரித்த நீதிபதிகள் தல்வீர் பண்டாரி, தீபக் மிஸ்ரா ஆகியோர் வழங்கிய தீர்ப்பில், தாழ்த்தப்பட்ட வகுப்பு ஊழியர்களுக்குப் பதவி உயர்வில் இடஒதுக்கீடு வழங்க வலுவான சட்ட ஆதாரமில்லை என்று கூறி உத்தரப் பிரதேச அரசாணையை 28-4-2012 அன்று ரத்து செய்து விட்டனர்.
 இதன்பிறகு 4.9.2012-இல் மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் விவாதித்து, பதவி உயர்வில் இட ஒதுக்கீடு வழங்குவதற்கான மசோதாவை நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் தாக்கல் செய்து ஒப்புதல் பெறுவது என்று தீர்மானிக்கப்பட்டது. இந்த 117-வது சட்டத்திருத்த மசோதா மூலம் எஸ்.சி., எஸ்.டி. ஊழியர்களுக்குப் பதவி உயர்வில் இடஒதுக்கீடு வழங்க எந்தவித நிபந்தனையையும் பின்பற்ற வேண்டிய தேவையில்லை என்று சட்டப் பாதுகாப்பு செய்யப்பட்டுள்ளது அவ்வளவே. அதாவது ஏற்கெனவே இருந்த உரிமை, பறிக்கப்பட்ட உரிமை திரும்பத் தர வழி வகுக்கப்பட்டுள்ளது.
 மத்திய அரசின் செயலாளர் அந்தஸ்தில் எஸ்.சி. ஒருவர்கூட இல்லை. கூடுதல் செயலாளர்களில் ஓரிருவரே உள்ளனர். நூற்றுக்கும் மேற்பட்ட துறைவாரியான செயலாளர்களில் ஐந்தாறு எஸ்.சி. மட்டுமே உள்ளனர். மாநில தலைமைச் செயலாளர்கள் யாருமே இல்லை. உச்ச நீதிமன்றத்தில் எஸ்.சி. நீதிபதி இல்லை. உயர் நீதிமன்ற நீதிபதிகளில் ஓரிருவர் மட்டுமே உள்ளனர். பிற அரசு நிறுவனங்களிலும் உயர் அதிகாரிகளாக எஸ்.சி. இனத்தவர் இல்லை என்கிற நிலை, பட்டியல் இனத்தவர்கள் வேண்டுமென்றே புறக்கணிக்கப்படுகிறார்கள் என்பதைத்தானே காட்டுகிறது?
 பதவி உயர்விலும் இடஒதுக்கீடு என்பதை பிற்படுத்தப்பட்டவர்களுக்கும், இஸ்லாமியர்களுக்கும்கூட நடைமுறைப்படுத்த வேண்டும் என்று முலாயம்சிங் கருத்தறிவிக்கிறார். அதை தி.மு.க. தலைவர் கருணாநிதி ஆதரித்து அறிக்கை விடுகிறார். அப்படியானால், பதவி உயர்வில் எஸ்.சி.க்கு இடஒதுக்கீடு வழங்கினால் அரசு நிர்வாகத்தில் திறமை போய்விடும் என்கிறார்களே, இடஒதுக்கீடு பிற்படுத்தப்பட்டவர்களுக்கும் வழங்கினால் மட்டும் திறமை போய்விடாதா? இதென்ன பித்தலாட்டமான வாதம்?
 அரசுப் பணியில் பதவி உயர்வு என்பது வெறும் மூப்பு வரிசை (சீனியாரிட்டி) அடிப்படையில்தான் வழங்கப்படுகிறது. அப்படியானால்... 100 அலுவலர்களில் 22 பேர் எஸ்.சி. என்றால், இதில் கண்காணிப்பாளராகப் பதவி உயர்வு பெறும் 50 பேரில் 11 பேர் எஸ்.சி. என்று நியமனம் பெறுவதுதானே நடைமுறை நியாயம்?
÷இன்றைய மாணவர்களில் எஸ்.சி./எஸ்.டி. மாணவர்கள் எடுக்கும் உச்சகட்ட மதிப்பெண்களுக்கும் பிற ஜாதி மாணவர்கள் எடுக்கும் உச்சகட்ட மதிப்பெண்களுக்கும் இடையிலுள்ள வேறுபாடு வெறும் அரை மதிப்பெண், ஒரு மதிப்பெண் என்ற அளவில்தான் உள்ளது என்கின்றபோது, தலித் மக்களின் திறமைக்கு என்ன குறைச்சல் என்ற கேள்விக்கு எவரால் பதில் கூற முடியும்?
 இடஒதுக்கீடு மூலம் அரசுப் பணியில் அமரலாம். ஆனால், பதவி உயர்வில் மட்டும் அது கூடாது என்கின்ற வாதம், இம்மக்களை அதிகாரப் பதவியில் அமர்த்தாமல் அடிமட்ட வேலைகளிலேயே நிறுத்திக் கொள்ளும் வஞ்சகத்தனம்தானே தவிர  வேறில்லையே?
÷இப்போது தாக்கல் செய்யப்பட்டுவரும் மசோதா, பதவி உயர்வில் எஸ்.சி.க்கு இடஒதுக்கீடு வழங்க வகை செய்யும் மசோதா என்றே பலரும் புரிந்து கொண்டுள்ளார்கள். அப்படியே பேசியும் வருகிறார்கள். அது தவறு. பதவி உயர்வில் இடஒதுக்கீடு வழங்க வேண்டுமென்று 1995-ஆம் ஆண்டே மசோதா தாக்கல் செய்யப்பட்டு நிறைவேற்றப்பட்டுவிட்டது. ஏற்கெனவே வழங்கப்பட்டுள்ள பதவி உயர்வில் இடஒதுக்கீடு என்ற சட்டத்தில் சரியானபடி வாக்கிய அமைப்பு இல்லை என்பதால், அதை விதிமுறைப்படி திருத்தம் செய்வதற்காகக் கொண்டு வரப்படும் ஒரு துணை மசோதா அவ்வளவே!
÷நாடாளுமன்றம் மறு தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைக்கப்பட்டுள்ள நிலையில், இனி மக்களவை எப்போது கூடி, இதனை எவ்விதம் நிறைவேற்றும் என்பது தெரியவில்லை. ஒடுக்கப்பட்ட மக்களின் உன்னதத் தலைவர் பாபா சாகேப் அம்பேத்கர் எடுத்துரைத்ததைப்போல் "உலகம் எவ்வளவுதான் விஞ்ஞானப்பூர்வமாக வளர்ந்தாலும் இந்தியா மட்டும், அது கடைப்பிடிக்கும் சாதிய வர்ணாசிரம சதிக்குள் சிக்குண்டு முன்னேற்றத்தைத் தடுக்கும் முட்டுக்கட்டையாகவே கிடக்கும்' என்ற தீர்க்கதரிசன வாசகம்தான் நம் நினைவிற்குள் சுழல்கிறது.
ஜெய்பீம்!
கட்டுரையாளர்: சட்டப்பேரவை உறுப்பினர். இந்தியக் குடியரசுக் கட்சியின் அகில இந்தியத் துணைத் தலைவர்.

Monday, December 24, 2012

என்ன வேண்டும் எங்களுக்கு? - ஆதிதிராவிடர் நலத்துறை


First Published : 09 May 2011 12:00 AM IST
அடுத்தடுத்து நடந்த ஆட்சிகளில் தாழ்த்தப்பட்ட மக்களுக்காக ஒதுக்கிய தொகை முழுமையாக அவர்களுக்கு மட்டுமே செலவு செய்யப்பட்டிருந்தால், அந்த மக்களில் பாதி பேராவது முன்னேறி இருப்பார்கள். ஆனால் அந்த மக்களில் 80 சதவீதம் பேர் இன்னும் பழைய நிலையிலேயே இருக்கிறார்கள்.
கல்வி, வேலை வாய்ப்பில் 18 சதவீத இட ஒதுக்கீடு தந்தாலும், இப்போது இந்த மக்களின் அளவு 22 சதவீதம் அளவுக்கு உயர்ந்துவிட்டதாக சில புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.
தாழ்த்தப்பட்ட மக்களுக்காக குரல் தர வேண்டும் என்பதற்காக சட்டப்பேரவை, மக்களவைத் தொகுதிகளில் சில தொகுதிகள் இவர்களுக்காகவே ஒதுக்கப்பட்டுள்ளன. தனி தொகுதிகள் (ரிசர்வ்) எனப்படும் அவற்றில் வெல்பவர்கள் தாழ்த்தப்பட்ட மக்களுக்கு ஒன்றுபட்டு குரல் எழுப்புவதில்லை. தாங்கள் சார்ந்துள்ள கட்சி எடுக்கும் நிலைப்பாட்டைத்தான் ஆதரிக்கின்றனர்.
தமிழக அரசு சிறப்பு உட்கூறு திட்டத்தில் ஆதி திராவிடர் நலனுக்காக ஒதுக்கும் பணத்தை முழுமையாக இவர்கள் நலனுக்காக பயன்படுத்த வேண்டும் என்ற கோரிக்கை வலுவாக உள்ளது. இதை முழுமையாகச் செய்தாலே இந்த மக்கள் பெரிய அளவில் முன்னேறி விடுவார்கள்.
மேலும் ஆதி திராவிடர் நலத் துறைக்கு ஒதுக்கும் நிதியில் சுமார் 70 சதவீதம் கல்வித் துறைக்கு, அதாவது ஆதி திராவிடர் பள்ளிகளுக்காக செலவிடப்படுகிறது. பொதுக் கல்வித் துறையிலேயே ஆதி திராவிடர் பள்ளிகளுக்கென தனி இயக்குநரை நியமித்து அதற்காக நிதி ஒதுக்கினால், இந்த நிதியை ஆதி திராவிட மக்கள் நலனுக்காக செலவிடலாம். இது பெரிய அளவில் உதவியாக இருக்கும்.
ஆதி திராவிடர்களுக்கு மனைப் பட்டா தருவதற்காக நிதி ஒதுக்கி, நில உரிமையாளர்கள் வழக்கு தொடர்வதால் பட்டா தருவது நிலுவையில் உள்ளது. இவ்வாறு சுமார் 5000 வழக்குகள் உள்ளன. இதற்கு ஒதுக்கிய நிதியும் செலவிடப்படாமல் உள்ளது. சிறப்பு நீதிமன்றம் அமைத்து இந்த வழக்குகளை பைசல் செய்தால்தான் இந்த மக்களுக்கு விரைவாக பட்டா கிடைக்கும் என்கிறார் இந்தியக் குடியரசுக் கட்சி மாநிலத் தலைவர் செ.கு. தமிழரசன்.
மாணவர் விடுதிகள்: 
ஆதிதிராவிட மாணவர்கள் கல்வியில் 
மேம்பாடு அடைவதற்காக அவர்களுக்கு கல்வி உதவித்தொகையுடன் உணவு, உடை, இருப்பிடம் ஆகியன அரசால் இலவசமாக வழங்கப்படுகின்றன. ஆதிதிராவிட மாணவர் விடுதிகளில் தங்கிப் படிக்கும் மாணவருக்கு உணவுக்காக ஒதுக்கும் தொகை, சிறையில் கைதிகளுக்கு ஒதுக்குவதைவிடக் குறைவு என்ற குற்றச்

ட்டு உள்ளது. எனவே, விலைவாசி உயர்வுக்கு ஏற்ப உணவுக் கட்டணத்தை ஆண்டுதோறும் அல்லது இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறையாவது மாற்றி அமைக்க வேண்டும்.


விடுதிகளுக்கு அரிசியை அரசு கொடுத்து விடுகிறது. மளிகைப் பொருள்களை கூட்டுறவுப் பண்டக சாலைகளில் பெற்றுக் கொள்ளலாம். காய்கனிகளை மட்டும் விடுதிக் காப்பாளர்கள் வெளிச்சந்தையில் கொள்முதல் செய்கின்றனர். அதற்கான தொகையை அந்தந்த வட்டாட்சியரிடம் பெற்றுக்கொள்ள வேண்டும். ஆனால் அந்தத் தொகையை வழங்க வட்டாட்சியர்கள் சதவீத அடிப்படையில் கமிஷன் கேட்பது பல முறைகேடுகளுக்கு வழி செய்கிறது என்பதும் காப்பாளர்களின் குற்றச்சாட்டு. இதனால் உணவின் அளவும், தரமும் குறைகிறது. இதைக் காரணம் காட்டி காப்பாளர்கள் தண்டிக்கப்படுகின்றனர். இந்த நிலையை மாற்ற வேண்டும் என்பது அவர்களின் கருத்து.
பொருளாதார மேம்பாட்டுக் கடன்கள்: "தாட்கோ' மூலம் வழங்கப்படும் பொருளாதார மேம்பாட்டுக் கடன்களை ஆதிதிராவிட மக்களின் பெயரில் பிற சமுதாய மக்களோ, பொருளாதார வசதி படைத்த மற்றவர்களோ பெற்று பயனடைவதாக தொண்டு நிறுவனப் பிரதிநிதிகள் கூறுகின்றனர்.
நிலம் இல்லாத ஏழைகள் நிலம் வாங்கவும், நிலம் வைத்திருப்பவர்கள் அதை மேம்படுத்தவும் ரூ. 1 லட்சம்வரை கடன் வழங்கப்படுகிறது. இதில் 50 சதவீதம் மானியம். 50 சதவீதம் வங்கிக் கடனாக வழங்கப்படுகிறது. இந்தக் கடனை, ஒரு தாழ்த்தப்பட்டவரின் பெயரில் அவர் கூலி வேலை செய்யும் நில உரிமையாளர் பெற்றுக் கொள்கிறார். கடனுக்கான மானியத்தை மட்டும் அவர் எடுத்துக் கொண்டு தாழ்த்தப்பட்டவருக்கு செலவுக்கு சிறிய தொகையைக் கொடுத்துவிட்டு கடனை ஒருசில மாதங்களில் திரும்பச் செலுத்தி விடுகின்றனர். இதில் கடனானது தாழ்த்தப்பட்ட மக்களுக்கு வழங்கப்பட்டதாகக் கூறப்பட்டாலும் உண்மையாக பயன்பெறுபவர் வேறு ஒருவரே. கடன் முறையாக திருப்பிச் செலுத்தப்படுவதால் அதிகாரிகள் இந்த முறைகேட்டைத் தடுப்பதில்லை.
இதேபோல, ஆட்டோ, மினி லாரி வாங்கவும் கடன் வழங்கப்படுகிறது. "நபார்டு' போன்ற வங்கிகள் மூலம் டிராக்டர் வாங்கவும், கடன், சிறு பால்பண்ணை வைக்க கடன், சுய தொழில் தொடங்கவும் கடன் வழங்கப்படுகிறது. இந்தக் கடன்களில் பெரும்பாலானவற்றை தாழ்த்தப்பட்டவர்களின் பெயரில் பிற சமுதாய மக்களே பெற்றுக் கொள்வதாக பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினர் டி. தேவேந்திரன் தெரிவித்தார்.
இந்த முறைகேடுகளைத் தடுக்க வேண்டுமானால் கடன் கொடுக்கும் முன்பு முறையான விசாரணையும், கடன் கொடுத்த பின்னர் அந்தக் கடனைப் பெற்றவர் அதைப் பயன்படுத்தி இருக்கிறாரா என்பதையும் கண்காணிக்க வேண்டும் என்கிறார் அவர்.
தாட்கோ நிதியுதவியைத் தருவதற்கென தனியாக ஒரு வங்கி இருந்தால் தாழ்த்தப்பட்ட மக்கள் கடன் பெற இன்னும் வசதியாக இருக்கும். வங்கிக்கும் ரிசர்வ் வங்கி விதிகள் மூலமாக அதிக சலுகைகள் கிடைக்கும் என்கிறார் செ.கு. தமிழரசன்.
கல்லூரியில் சேரும் ஆதி திராவிட மாணவர்களுக்கு ஓரிரு மாதங்களுக்குள் உதவித் தொகை தந்தால்தான் புத்தகம் வாங்கும் செலவுக்கு உதவும். சில மாதங்கள் கழித்து தருவதால் பயன் இல்லை என்கிறார் அவர்.
""ஆதிதிராவிட மக்களுக்குச் சொந்தமான பஞ்சமி நிலங்கள் பல்வேறு நபர்களால் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளன. இந்த நிலங்களை மீட்பதற்காக ஓய்வுபெற்ற நீதிபதி ஒருவர் தலைமையில் அமைக்கப்பட்ட பஞ்சமி நில மீட்பு ஆணையம் செயல்படாத நிலையில் உள்ளது. எனவே, இந்த ஆணையத்தின் செயல்பாடுகளை துரிதப்படுத்தி, பஞ்சமி நிலங்களை மீட்டு ஆதிதிராவிட மக்களிடமே மீண்டும் வழங்க வேண்டும்'' என்று சமூக சமத்துவப் படையின் நிறுவனத் தலைவர் ப. சிவகாமி கூறுகிறார்.
விரயமாகும் நிதி: ஆதிதிராவிட இனத்தவர்கள் சுய தொழில் தொடங்க அவர்களுக்கு கடனுதவி அளிப்பதுடன் சிறு தொழில் பயிற்சி அளிக்கும் வகையில் மாவட்டந்தோறும் ஐந்தாறு ஆண்டுகளுக்கு முன்பு பயிற்சி மையங்கள் கட்டப்பட்டன. அவை இப்போது மூடிக்கிடக்கின்றன. பல லட்சம் செலவில் கட்டப்பட்ட இம் மையங்களில் பயிற்சியளிக்க பயிற்சியாளர்கள் Aநியமிக்கப்படவில்லை.
இப்போது தனியார் நிறுவனங்களில் பயிற்சியளிக்கப்பட்டு வருகிறது. இதனால் அந்தக் கட்டடங்கள் அனைத்தும் பாழடைந்து வருகின்றன என்கிறார் "மனித உரிமைக் களம்' அமைப்பின் இயக்குநர் பரதன். எனவே, பயிற்சிக் கருவிகளை அளித்து பயிற்சியாளர்களை நியமித்தால் ஆதிதிராவிட இளைஞர்கள் பயன்பெறுவதுடன் அரசு நிதி விரயமாவதும் தடுக்கப்படும் என்கிறார் அவர்.
வீணாகும் கட்டடங்கள்: ஆதிதிராவிட மக்கள் சுய தொழில் தொடங்கும் வகையில் வியாபாரம் செய்ய "தாட்கோ' மூலம் நகர்ப்புறங்களிலும், பேரூராட்சிப் பகுதிகளிலும் ஆங்காங்கே வணிக வளாகங்கள் கட்டப்பட்டுள்ளன. இவற்றில் கடைகளை வாடகைக்கு எடுத்து சொந்தமாக வியாபாரம் செய்யும் தாழ்த்தப்பட்ட மக்களை விரல் விட்டு எண்ணி விடலாம். சில ஊர்களில் தாழ்த்தப்பட்டவரின் பெயரில் மற்றவர்கள் கடைகளை வாடகைக்கு எடுத்து பயன்படுத்தி வருகிறார்கள்.
விதிமுறைகள் கடுமையாக அமல்படுத்தப்படும் இடங்களில் கடைகள் காலியாகவே காட்சியளிக்கின்றன. நாளடைவில் அந்தக் கட்டடம் பாழடைந்து பயனற்றுப் போகும் நிலை உருவாகி வருகிறது. இதற்குப் போதுமான கண்காணிப்பு இல்லாமையும், தேவை அறிந்து கட்டடங்களைக் கட்டாததுமே காரணம் என்பது அச் சமுதாயப் பிரதிநிதிகளின் கருத்து. எதிர்காலத்தில் இதைத் தவிர்க்க வேண்டும்.
தாழ்த்தப்பட்ட மக்கள் பயன்பெறும் வகையில் நகரத்தில் முக்கியமான இடங்களில் திருமண மண்டபங்கள் கட்டப்பட்டுள்ளன. அவற்றைப் பயன்படுத்த விரும்புவோர் சாதிச் சான்றுடன் அந்தத் துறை அலுவலர்களை அணுகி அனுமதி பெற வேண்டும். சாதிச் சான்று பெறுவதிலும், அதிகாரிகளை சந்தித்து அனுமதி பெறுவதிலும் உள்ள சிரமங்களால் அந்த மண்டபங்கள் முழுமையாக பயன்படுத்த முடியாத நிலை உள்ளதாக அச் சமுதாய மக்கள் கூறுகின்றனர். இதை மற்ற சமுதாய மக்களும் பயன்படுத்த முன்வராததால் அவை பயனற்று காட்சிப் பொருளாகி வருகின்றன.
எந்தக் கட்சியில் இருந்தாலும் தாழ்த்தப்பட்ட சமூகத்துக்கு எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள் மற்றும் உள்ளாட்சி அமைப்பு நிர்வாகிகள் உள்ளிட்டவர்கள் ஏதேனும் ஒரு பொதுவான அமைப்பின் கீழ் சேருவதற்கு ஒரு ஏற்பாடு செய்ய வேண்டும் என்று மூத்த அதிகாரிகள் யோசனை தெரிவிக்கின்றனர்.
இந்த சமுதாயம் பயன்பெற வேண்டுமானால் தாழ்த்தப்பட்டவர்களின் பெயரில் மற்றவர்கள் பயன்பெறுவதைத் தடுக்கவும், திட்ட செயலாக்கத்தைக் கண்காணிக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவர்கள் வலியுறுத்துகின்றனர்.

மானிய காஸ் சிலிண்டர் விலை அதிகரிப்பால் பிற்படுத்தப்பட்டோர் விடுதிகளில் இறைச்சி, சுண்டல், காபி நிறுத்தம் காப்பாளர் சங்க கூட்டத்தில் முடிவு

திருச்சி, : மானிய காஸ் சிலிண்டர் விலை அதிகரித்துள்ளதால், பிற்படுத்தப்பட்டோர் விடுதிக ளில் ஆட்டிறைச்சி, சுண் டல், சுக்கு காபியை நிறுத்த காப்பாளர் சங்க செயற்குழு கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது.
தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்டோர் விடுதி காப்பாளர்கள், ஆசிரியர்கள் மாநில செயற்குழு கூட்டம் திருச்சியில் நேற்று நடந்தது. சங்க மாநில தலை வர் சகாதேவன் தலைமை வகித்தார். அமைப்புச் செய லாளர் சுந்தர்ராஜன் வரவேற்றார். பொதுச் செய லாளர் முருகேசன், அமைப் புச் செயலாளர் இன்பகடல், திருச்சி மாவட்ட தலைவர் சம்பத், புதுக் கோட்டை மாவட்ட தலை வர் சுப்பையா உள்பட பலர் பங்கேற்றனர். பொரு ளாளர் தயாளன் நிதிநிலை அறிக்கை வாசித்தார்.
கூட்டத்தில், தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் நலத் துறை விடுதிகளுக்கு வழங்கப்படும் மானிய விலை சமையல் காஸ் சிலிண்டர் விலையை, காஸ் நிறுவனங் கள் ரூ. 390 லிருந்து, ரு.1,315 ஆக உயர்த்தியுள்ளது.
இதனால் ஏற்படும் கூடு தல் தொகை ரூ. 925 உடனடியாக விடுதிகளுக்கு அனுமதியளித்து அரசு உத்தரவிட வேண்டும். காஸ் சிலிண்டர் விலை உயர்வு வித்தியாசத்தை அரசு ஏற்று, நிதித்துறை ஒப்புதல் பெறும் வரை, தற்காலிகமாக விடுதி மாணவர்களு க்கு வழங்கப்படும், சுண்டல், சுக்குகாபி, ஆட்டு இறைச்சி, வாரம் 2 முட்டை என்பதை நிறுத்தி, தற்போதுள்ள உணவு செலவின கட்டணத்திலேயே விடுதியை நிர்வகிப்பது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. முடிவில் வெற்றி வேல் நன்றி கூறினார்.

Saturday, December 22, 2012

ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்று இரட்டைபட்டம் (Double Degree) காரணமாக பணிநியமனம் வழங்கப்படாத 13 ஆசிரியர்களுக்கு பணியிடங்களை தற்காலிகமாக ஒதுக்கி அரசிடம் விளக்கம் கேட்டு உயர்நீதிமன்றம் உத்தரவு


ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றும் இரட்டை பட்டம் (Double Degree) பயின்றதன் காரணமாக பல ஆசிரியர்களுக்கு பணிநியமனம் வழங்கப்படவில்லை. இதனால் பதிக்கப்பட்ட ஆசிரியர்கள் பெரும் வேதனைக்கு உள்ளாகினர். இதுகுறித்து ஆசிரியர் தேர்வு வாரியத்திடம் அனுகியபோது , "உயர்நீதிமன்றத்தின் தீர்ப்புப்படி இரட்டை பட்டம் பயின்றோருக்கு பணி வழங்க இயலாது" என விளக்கமளித்ததால், இதனால் பலர் நீதிமன்றத்தை அனுகினர்.
இந்நிலையில் பல்வேறு மாவட்டத்தை சேர்ந்த 13 பாதிக்கப்பட்ட ஆசிரியர்கள் ஒன்றிணைந்து உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தனர். நேற்று (21.12.2012) இவ்வழக்கின் விசாரணை தொடங்கியது. தாங்கள் TET விண்ணப்பம் அளித்தபோது இரட்டை பட்டம் பணிநியமனத்திற்கு தகுதியுடையது என்று தகவல் அறியும் உரிமைச்சட்டத்தின் மூலம் ஆசிரியர் தேர்வு வாரியமும் உயர்கல்வி ஆணையமும் தகவல் அளித்ததையும், 100க்கும் மேற்பட்ட ஆவணங்களையும் மனுதாரர் தரப்பில் அளிக்கப்பட்டது.

இதையடுத்து வழக்கு தொடுத்துள்ள 13 ஆசிரியர்களுக்கும் 13 பணி இடங்களை தற்காலிகமாக ஒதுக்கியும் இந்த பணியிடங்கள் இறுதித்தீர்புக்கு உட்பட்டது என்றும், இதுகுறித்து விளக்கத்தினை 15 நாட்களுக்குள் அளிக்க அரசுக்கும் கல்வித்துறைக்கும் உயர்நீதி மன்றநீதிபதி திரு.வெங்கடராமன் உத்தரவிட்டார்.

Tuesday, December 18, 2012

மாவட்டச் செயற்குழு 15.12.2012- மாவட்டச் செயலாளர் அறிக்கை


 தமிழக ஆதிதிராவிடர் ஆதிவாசிகள் நலத்துறை                  
ஆசிரியர் காப்பாளர் சங்கம். விருதுநகர் மாவட்டக் கிளை.                     
                          மாவட்டச் செயற்குழு.
நாள்: 15.12.12 ( சனிக்கிழமை)     இடம் : அஜய் ரெஸ்டாரெண்ட்,
                                                திருவில்லிபுத்தூர்.
                   
               .

  எமது உறவினும் மேலான உறவுகளுக்கு……!
                                               வணக்கம்.கடந்த மாவட்டச்செயற்குழு 26.10.12 அன்று நடைபெற்றது.அதுமுதல் நாளது வரை சங்கம் சாதித்த சாதனைகளையும் இன்னல்களையும் இடர்ப்பாடுகளையும் இன்பங்களையும் இச்செயற்குழுவில் பதிவு செய்வதில் சங்கம் பேரானந்தமும் பெருமகிழ்ச்சியும் அடைகிறது.
                       29.10.2012 அன்று நமது சங்க மகளிர் அணிச் செயலாளரும் சுந்தரராசபுரம் விடுதிக்காப்பாளினியுமான திருமதி அ.செல்லம்மாள் விடுதியைப் புதிய கட்டிடத்திற்கு தன்னிச்சையாக மாற்றியதாகக் கூறி அவரிடம் நேரடியாக விளக்கம் கேட்டு DADWO அழைத்தபோது அவருடன் நமது சங்க மாவட்டத்தலைவர், மாவட்டச்செயலாளர் மற்றும் கொள்கைப்பரப்புச் செயலாளர் ஆகியோர் இரவு 7 மணி அளவில் சென்று அலுவலரிடம் விளக்கம் அளித்து நமது சங்க மகளிர் அணிச் செயலாளர் தன்னிச்சையாக அந்த முடிவை எடுக்கவில்லை என்று தெளிவுபடுத்தப்பட்டது.
                         29.10.2012 அன்று விருதுநகர் மாணவர் விடுதியில் மாணவர் ஒருவர் தற்கொலைக்கு முயன்றபோது விடுதிக்காப்பாளரும் நமது சங்க கொள்கைப்பரப்புச் செயலாளருமான திரு அ.பால்ராஜ் அவர்களுக்கு ஆதரவாக மாவட்டத்தலைவர் திரு சி.சின்னராசு அவர்களின் வழிகாட்டுதலின் பேரில் மாநில அமைப்புச் செயலாளர் அவர்கள் தலைமையில் மாவட்டப் பொருளாளர் உள்ளிட்ட உறுப்பினர்கள் திரண்டு இரவு 8 மணிவரை அவருடனிருந்து நிர்வாகரீதியான பிரச்சினைகள் அவருக்கு ஏற்படாதவண்ணம் சங்கம் அவரைப் பாதுகாத்தது.
                    07.11.2012 அன்று குறிப்பிட்ட சமூகத்தினரால் மாநிலம் தழுவிய பந்த் நடத்தப்பட்டு பேருந்துகள் எதுவும் இயக்கப்படாத நிலையில் மாநில அமைப்புச் செயலாளரும் சாத்தூர் மாணவர் விடுதிக் காப்பாளாராகப் பணிபுரியும் திரு பொ.சிவக்குமார் அவர்கள் விடுதியில் DADWO அவர்கள் நண்பகல் 12.20 மணிக்கு திடீர்த்தணிக்கை மேற்கொண்டார்.அவர் மீது வேண்டுமென்றே திட்டமிட்டு உள்நோக்கத்தோடு சம்பந்தமில்லாமல் முந்தைய நாள் வருகையைக் கணக்கிட்டு அவருக்குக் “காரணம் கேட்கும் குறிப்பாணை” வழங்கப்பட்டது. இதன்மீது சங்கம் உடனடியாகத் தலையிட்டு கடுமையாக எதிர்ப்பு தெரிவித்ததன் காரணமாக அவர் மீதான மேல் நடவடிக்கை கைவிடப்பட சங்கம் காரணமாக அமைந்தது.
                        07.11.2012 அன்று நமது சங்க கொள்கைப்பரப்புச் செயலாளரும் விருதுநகர் விடுதிக்காப்பாளருமான திரு அ.பால்ராஜ் அவர்கள் மீது உள்நோகத்தோடு பொய்ப்புகார்களைச் ஜோடனை செய்து திடீரென கோட்டையூர் பள்ளிக்கு தமிழாசிரியராகப் பணியிடமாறுதல் செய்யப்பட்டார்.இதுகுறித்து உடனடியாக SMS மூலம் தகவல் தெரிவிக்கப்பட்டு இரவு 10 மணி அளவில் நிர்வாகிகள் 10 பேர் கலந்து கொண்ட அலைபேசி வழியேயான CONFERRENCE CALL MEETTING ல் நிர்வாகிகளிடம் கருத்துக்கள் கேட்கப்பட்டு 08.11.12 அன்று DADWO விடம் நேரில் விளக்கம் கேட்கப்பட்டது.அலுவலர் அவர்கள் முறையான பதிலளிக்க மறுத்ததால் “அரசாணைக்கு எதிராக முறையற்றவாரு வழங்கிய உத்தரவுக்கு எமது உறுப்பினர் அடிபணிய மாட்டார்” என்பதனையும் இதே நிலை தொடர்ந்தால் அலுவலரைக் கண்டித்து ஆர்ப்பாட்டம், போராட்டம்,பத்திரிக்கைச் செய்தி போன்ற போராட்ட வியூகங்களை வகுக்கச் சங்கம் தயங்காது என்று DADWO விடம் ஆணித்தரமாகவும் கடுமையாகவும் பதிவு செய்தது இச்சங்கம்.
                       அதன் பின்னர் உடனடியாக பெரும்பான்மையான சங்க உறுப்பினர்களுடன் மாவட்ட ஆட்சியரை நேரில் சந்தித்து இது சம்பந்தமாகப் புகார் மனு அளிக்கப்பட்டு “அரசாணைக்கு எதிராக இவ்வுத்தரவு வழங்கப்பட்டுள்ளது” என்பதனைச் சுட்டிக்காட்டியதன் காரணமாக மாவட்ட ஆட்சியர் உடனடியாக இவ்வுத்தரவை இரத்து செய்ய அலுவலரைக் கேட்டுக்கொண்டார்.
                           ஆனால் தன்னிலையை மாற்றிக்கொள்ள விரும்பாத அலுவலர் மாவட்ட ஆட்சியரிடம் வாய்மொழியாகப் பல்வேறு பொய்ப் புகார்களைக் கூறியதன் விளைவாக உடனடித் தீர்வு எட்டப்படாததால் 16.11.2012 அன்று மாவட்ட ஆட்சியர் நமது சங்கத்தையும் DADWO வையும் பேச்சு வார்த்தைக்கு அழைத்தார்.
                           16.11.2012 அன்று மாவட்ட ஆட்சியர் முன்னிலையில் நமது சங்க மாவட்டத்தலைவர், மாவட்டச் செயலாளர் மற்றும் சம்பந்தப்பட்ட காப்பாளர் திரு அ.பால்ராஜ் அவர்களோடு DADWO உள்ளிட்டோர் கலந்து கொண்ட பேச்சு வார்த்தையின் போது அன்னாருக்கு வழங்கப்பட்ட மாறுதல் உத்தரவை இரத்து செய்யுமாறு மாவட்ட ஆட்சியர் அலுவலரை அறிவுறுத்தினார்.                                
                        அதன் பின்னர் நடைபெற்ற மாவட்ட ஆட்சியரின் கப்பாளர்கள் மற்றும் காப்பாளினிகளுக்கான ஆய்வுக்கூட்டத்தில் DADWO விடம் நமது சங்கத்தைச் சேர்ந்த          மாநில அமைப்புச் செயலாளர் திரு பொ.சிவக்குமார்,  மாநிலத்துணைத்தலைவர் திரு.மா.கோவிந்தராசு,மாவட்டத் தலைவர் திரு சி.சின்னராசு, மாவட்டச் செயலாளர் திரு இ.வெள்ளத்துரை, மாவட்டத் துணைத்தலைவர் திரு இரா.யுவராஜா,உறுப்பினர் திரு சு.இராஜன் ஆகியோர் நமது நிர்வாக ரீதியிலான பிரச்சினைகளை மிக நேர்த்தியாக எடுத்துரைத்தனர்.
                          22.11.2012 காப்பாளர் திரு அ.பால்ராஜ் அவர்களின் பணி மாறுதல் உத்தரவை இரத்து செய்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டு ஒரு வரத்துக்கு மேலாகியும் அவ்வுத்தரவு DADWO அவர்களால் அனுப்பப்படாததால் மாவட்டத் தலைவர் அவர்களின் வழிகட்டுதலின் படி மாவட்டப் பொருளாளர், மாவட்டத் துணைத்தலைவர்,மாவட்டத் தலைமை நிலையச் செயலாளர் ஆகியோர் சென்று DADWO விடம் உத்தரவின் விபரத்தினைக் கேட்டறிந்தனர்.
                      23.11.2012 அன்று சங்கத்தின் எதிர்பார்ப்புக்கு மாறாக திரு அ.பால்ராஜ் அவர்களின் பணிமாறுதல் உத்தரவை இரத்து செய்து அதே விடுதியில் நீடிக்கச் செய்வதற்குப் பதிலாக நரிக்குடி மாணவர் விடுதிக்கு பணியிடமாறுதல் செய்து DADWO அவர்களால் உத்தரவு வழங்கப்பட்டது.
                      26.11.2012 அன்று இரவு 7 மணி அளவில் இதற்கான காரணம் கேட்கும் பொருட்டு மாவட்ட ஆட்சியர் அவர்களை மாவட்டத்தலைவர், மாவட்டச்செயலாளர்,மாவட்டப் பொருளாளர், மாவட்டத் துணைத்தலைவர், மாவட்ட தலைமை நிலையச் செயலாளர் ஆகியோர் சந்தித்து விளக்கம் கேட்டனர்.
                      மாவட்ட ஆட்சியர் அவர்கள் “நரிக்குடி மாணவர் விடுதியில் அவரைப் பணியில் சேரச் சொல்லுங்கள் ஒரு வாரத்திலிருந்து ஒரு  மாதத்திற்குள் அவருக்கு நானே அதே பணியிடத்தில் மாறுதல் பெற்றுத்தருகிறேன்” என்று கூறிய உறுதிமொழியின் அடிப்படையிலும், தற்போதைய ஆட்சியர் அவர்கள் நமது சங்கத்தின் கோரிக்கைகளை நியாமான முறையில் பரிசீலிக்கிறார் என்ற நம்பிக்கையின் அடிப்படையிலும் ,தொடர்ந்து விருதுநகர் விடுதியில் பணி புரிந்து பல்வேறு இன்னல்களுக்கும் மன உளைச்சல்களுக்கும் ஆளாகும் திரு பால்ராஜ் அவர்களுக்கு நிவாரணம் பெரும் பொருட்டும் அன்னாரது விருப்பத்தின் அடிப்படையிலும் அவர் நரிக்குடி விடுதியில் பணியில் சேர நமது சங்கம் வழிகாட்டியது.
                          மாவட்ட ஆட்சியரைச் சந்தித்து மேற்காணும் நிகழ்வு நடைபெற்றுக் கொண்டிருக்கும் அதே வேளையில் நாம் இங்கிருப்பதைத் தெரிந்து கொண்டே DADWO அவர்கள் மாலை 6 மணிக்குப் புறப்பட்டு மாவட்டத்தலைவர், மாவட்டச்செயலாளர் ஆகியோர் பணிபுரியும் தளவாய்புரம்,ஜமீன் கொல்லங்கொண்டான் மற்றும் தளவாய்புரம் மாணவியர் விடுதிகளை இரவு 8 மணிக்கு மேல் திடீர்த்தணிக்கை செய்தார்கள்
                         இத்திடீர்த்தணிக்கையின் விபரம் துணைச் செயலாளர் திரு அ.ஸ்கைலாப் அவர்களால் அனைவருக்கும் SMS மூலம் தெரிவிக்கப்பட்டது.
                                இந்நிலையில் மாவட்டத்தலைவர் DADWO அவர்களை அலைபேசியில் தொடர்பு கொண்டு தனது விடுதி பற்றிய விபரத்தினையும் தான் தற்சமயம் விடுப்பிலிருக்கும் விபரத்தினையும் தெரிவித்ததோடு மட்டுமல்லாமல் இந்நேரத்தில் விடுதிகளைத் திடீர்த்தணிக்கை செய்ய வேண்டிய அவசரம் மற்றும் அவசியத்தினையும் கேட்டறிந்தார்.
                             பின்னர் மாவட்டத்தலைவரின் அறிவுரையின்படி மாவட்டச் செயலாளர் திரு இ.வெள்ளத்துரை DADWO அவர்களை அலைபேசியில் தொடர்பு கொண்டு “என்னம்மா இராத்திரி நேரத்துல களவாணிப் பயலுகளப் புடிக்க வர்ர மாதிரி வர்ரீங்க..” என்றும் “ என் விடுதில ரெண்டு மாசமா கரண்டு இல்ல  ணும்,மோட்டார் பம்பு ரிப்பேர்ணும்,தண்ணி குழாய்லாம் உடஞ்சு கிடக்குணும்,கிரைண்டர் ரிப்பேர்ணும் உங்ககிட்ட கம்ப்ளைண்ட் கொடுத்தேன்..நீங்க தாசில்தாரு மூலமா கொடுக்கச் சொன்னீங்க..அதுவும் கொடுத்து ஒரு மாசமாச்சு..ஆனா ஒரு ஆக்சனும் இல்ல..அதெல்லாம் சரிபண்ணிக் கொடுத்துட்டு நைட்டு 10 மணிக்குக் கூட வாங்கம்மா..”என்றும் கடுமையாகப் பேசியதன் விளைவாகவும்……………….
                          துணச்செயலாளர் அனுப்பிய SMS செய்தியைப் படித்த துணைத்தலைவர் திரு இரா.யுவராஜா தனது அலைபேசி அணைந்த நிலையிலும் அந்த இரவு நேரத்திலும் தனது ஊர் செல்லும் பயணத்தைப் பாதியிலேயே முடித்துக்கொண்டும் தன்னந்தனியாக மாவட்ட ஆட்சியரை அவரது பங்களாவில் இரவு 9.30 மணியளவில் சென்று நேரில் சந்தித்து “எமது சங்கத்தின் மாவட்டத்தலைவர் மற்றும் மாவட்டச் செயலாளர் விடுதிகளை இரவு 8 மணிக்கு மேல் திடீர்த்தணிக்கை செய்வது எமது சங்க நிர்வாகிகளைப் பழிவாங்கும் நடவடிக்கையின் பாரபட்சமான அங்கம்”என்பதைப் பதிவு செய்ததன் விளைவாகவும்………
                         மாவட்ட ஆட்சியர் DADWO வை அழைத்துக் கடிந்து கொண்டதன் காரணமாகவும் அலுவலர் அவர்கள் தனது போக்கை மாற்றிக் கொண்டதுடன்..அதுவரை தணிக்கை செய்த விடுதிக்காப்பாளர்களுக்கு வழங்கப்படவிருந்த குற்றக்குறிப்பாணைகள் இரத்து செய்யப்பட்ட நிகழ்வு நமது சங்க நிர்வாகிகள், உறுப்பினர்களுக்கு மட்டுமல்லாது…நமது சங்கம் சாராத காப்பாளர்களுக்கும் நமது சங்கம் பாதுகாவலனாய் இருந்துள்ளது என்பதில் சாதனைகள் புரிவதில் சளைக்காத சங்கம் நம் சங்கம் என்று பெருமிதம் கொள்ளச் செய்கிறது.
                          DADWO அலுவலகத்தில் கல்வி உதவித்தொகை வழங்கும் பிரிவில் உதவிக்குப் பணிபுரிய ஆகாசம்பட்டி பள்ளி ஆசிரியை திருமதி புனிதா,  இடையன்குளம் பள்ளி ஆசிரியர் திரு செல்வக்குமார், இலட்சுமியாபுரம் பள்ளி ஆசிரியர் திரு கிஷோர்குமார் ஆகிய ஆசிரியர்களை நியமித்ததை சங்கத்தின் சார்பாக அதிருப்தியோடு அலுவலர்க்கு உணர்த்தியதன் விளைவாக ஆசிரியர்கள் தொடர்ந்து பள்ளிகளிலேயே பணிபுரிய இச்சங்கம் உறுதுணையாக இருந்து வந்துள்ளது.
                      
                                                    15.11.2012 அன்று மல்லாங்கிணறு மாணவியர் விடுதிக் காப்பாளினி கூட்டுறவு பண்டகசாலை சென்ற நிலையில் DADWO திடீர்த்தணிக்கை செய்தபோது அலுவலர் அவர்கள் இருக்கும் போதே ஈப்பு ஓட்டுநர் திரு கனகராஜ் சமையர்களிடம் “நோட்ட எடுத்துட்டு வா” “உங்க “டீச்சர எங்க..டெய்லி இப்படித்தான் சீக்கிரமே வீட்டுக்குப் போயிருவாங்களோ” என்று அவரே DADWO போலச் செயல்பட்ட விதத்தினை 16.11.2012 அன்று மாவட்ட ஆட்சியருடனான பேச்சு வார்த்தையின் போது DADWO முன்னிலையிலேயே மாவட்ட ஆட்சியரிடம் தெரிவித்ததன் காரணமாக “ஈப்பு ஓட்டுநர் விடுதிக்கு உள்ளே வரக்கூடாது” என்ற ஆட்சியரின் வாய்மொழி உத்தரவின் காரணமாக அதன் பின்னர் நடைபெற்ற விடுதிதணிக்கைகளின் போது ஈப்பு ஓட்டுநர் விடுதிக்கு உள்ளே வராமல் இருப்பதற்குச் சங்கம் காரணமாக அமைந்துள்ளது.
                         திருச்சுழி வட்ட விடுதிகளுக்கு மண்டல அலுவலராகச் செயல்படும் சிறப்பு திட்டங்கள் செயலாக்க அலுவலர் வாரந்தோறும் கூட்டும் அனைத்து விடுதிக் காப்பாளர்களுக்கான ஆய்வுக்கூட்டத்தில் ‘’காப்பாளர் காப்பாளினிகளை ஒருமையில் பேசுகிறார்” “டாய்லெட்ட சுத்தமா வச்சுட்டு SMS அனுப்பச் சொல்கிறார்” “எந்த விளக்கமும் கேட்கவோ கொடுக்கவோ விடாமல் காப்பாளர் காப்பாளினிகளை அடிமைகளைப் போன்று நடத்துகிறார்” என்று பல்வேறு குற்றச்சாட்டுகள் வரப்பெற்றதைத் தொடர்ந்து அந்த அலுவலரை பெரும்பான்மையான இயக்க உறுப்பினர்களின் ஆதரவோடு சென்று அவரை மன்னிப்பு கேட்க வைத்ததோடு “என்னய ரோட்டுல வச்சு கல்லால அடிங்க’’  “மண்டல அலுவலர் பொறுப்பிலிருந்து நான் ரிலீவ் ஆகிக் கொள்கிறேன்” என்று அலுவலர் வாயலயே அவரைச் சொல்ல வைத்தது நமது சங்கத்தை மற்ற சங்க உறுப்பினர்களும் வேறு துறை சார்ந்த சங்கங்களும் பொறாமையோடு பார்க்கும் அளவுக்கு நமது வளர்ச்சி இருக்கிறது என்பதற்கு இது ஓர் எடுத்துக்காட்டாகும்.
                                   மாநிலச் சங்கத்திற்கு நமது மாவட்டம் கொடுத்த கொடை மாநில அமைப்புச் செயலாளர் திரு பொ.சிவக்குமார் அவர்கள் தன்னலம் கருதாது நாமெல்லாம் நமது உறுப்பினர் திரு கருப்பசாமியின் கல்யாணத்தில் விருந்துண்டு களைத்திருந்த 23.11.2012 அன்று மாநிலத் தலைவர் உள்ளிட்ட மாநில நிர்வாகிகளோடு சென்னையில் நடைபெற்ற ஆணையர் அவர்களுடனான பேச்சு வார்த்தையில் கலந்து கொண்டு நமது மாவட்டத்தின் பங்களிப்பைச் சிறப்பாகச் செய்து முடித்தார் என்பதனைச் சங்கம் பெருமிதத்துடன் நினைவு கூர்கிறது.
                                    தீபாவளிக் கோலாகலங்கள் கொடிகட்டிப் பறந்த 12.11.2012 அன்றைய நிலையில் நமது சங்க மகளிர் அணிச் செயலாளரும் சுந்தரராசபுரம் விடுதிக்காப்பாளினியுமான திருமதி அ.செல்லம்மாள் அவர்களின் வீடு கிரகப்பிரவேசத்துக்குக் கடுமையான வேலைப் பழுவிற்கு இடையிலேயும் நமது சங்க மாநிலத்தலைவர் திரு கோ.பாக்கியராஜ் அவர்கள் வந்து சிறப்புச் சேர்த்தார்.அன்னாரை நமது சங்க உறுப்பினர்கள் மற்றும் நிர்வாகிகள் திரளாகவும் மலர்ந்த முகத்துடனும் வரவேற்று உபசரித்து சிறந்த பரிசுடனும் சிவந்த முகத்துடனும் வழியனுப்பி வைத்தோம் என்பது நாம் உறவாக இருக்கும் சங்கம் என்பதற்கு உதாரணமாக இருந்த நிகழ்வினைப் பகிர்ந்து கொள்வதில் பரவசம் அடைகிறோம்..!
 -----------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------

   வார்டனா…ஓ வாடனா… வாத்தியாரா…என்னது ADW டிபார்ட்மென்டா…ஓ வெல்பேரா…அதாங்க எஸ்சி டிபார்ட்மென்டு…உங்காஸ்டல்ல தாதாதாதாதாதாதாசில்தாதாதாதாதாரு விசிட்டா…அய்யய்யோ கல்க்க்டரு ராசபாளயம் வாராராம்லெ…….
           என்ற நிலை மாறி………
                மாமா கலெக்டர பாத்து ஒரு வாரம் ஆச்சு மாமா..நாளைக்கு பார்த்துருவோமா மாமா.. அண்ணே ஆபிசரு போற ரூட்டு சரி இல்லணே…உண்ணாவிரதம் உக்காந்துருவமாணே..சித்தப்பு எதுக்கு சித்தப்பு நமக்கு இந்த காசு…பாத்துக்கலாம் சித்தப்பு கரெக்க்டா இருப்போம் சித்தப்பு…எவனும் ஒரு ம…ம் புடுங்க முடியாது… அண்ணே..தங்கச்சி அக்கோய்..மதினி…சிஸ்டர்.. பங்காளி ,சம்பந்தி, பிரதர்ர்ர்ர்….மச்சான்…தம்பி..
           என்ற நிலை தொடரும் நிலையில்….

             மாற்றம் ஒன்றே மாறாத இவ்வுலகில்…….ஓகே ஓகே நிறுத்திக்கிறேன்.. அதே பழய   பழமொழி தாங்க..ஒன்று பட்டால் உண்டு வாழ்வு…நம்மில் ஒற்றுமை நீங்கில் அனைவருக்கும் தாழ்வே..ஓகே..பீ ஃகேர்புல்..(என்னச் சொன்னேன்:-)))))))))))))))))))


                                                                                                       
மாவட்டத்தலைவர்   மாவட்டச்செயலாளர்    மாவட்டப் பொருளாளர்

தமிழகத்தில் 30 ஆண்டுகளாகப் பள்ளிகளில் செயல்பட்டுவரும் சத்துணவுத் திட்டத்தில் வழங்கப்படும்,  உணவுப்பட்டியலில் இதற்கு முன்பும் சின்னச் சின்ன மாற்றங்கள் நடந்துள்ளன. எம்ஜிஆர் கொண்டு வந்த சத்துணவுத் திட்டத்தில் கலைஞர் கருணாநிதி வாரத்திற்கு ஒரு முட்டையைச் சேர்த்தார். முட்டை சாப்பிடாத சைவக் குழந்தைகளுக்கு வாழைப்பழமும் கிடைத்தது.  சென்ற ஆட்சியில் வாரம் முழுவதும் முட்டைகளை அவர் பெருகப் பண்ணினார். இப்படி பலப்பல மாற்றங்கள் நடந்துள்ளன.
ஆனால், கடந்த நவம்பர் 2 ஆம் தேதி முதலமைச்சர் ஜெயலலிதா, சட்டசபையில் அறிவித்த புதிய சத்துணவுத்திட்ட நிரலில் உள்ள உணவுகளின் பட்டியலைப் படித்தவர்களுக்கு, ஏழைக் குழந்தைகளின் வாழ்க்கையில் ஏதோ ஒரு புரட்சி நடப்பதாகவே தோன்றும். பிரியாணி, பட்டாணி புலாவ், மிளகுக்கறி முட்டை என அந்தப் பட்டியலைக் கேட்பவர்களின் நாவு ஊறும். ஆனால் கல்வியாளர்களும், சத்துணவு ஊழியர்களும் இத்திட்டத்தின் சாத்தியம் குறித்து மிகப்பெரிய சந்தேகங்களைத் தெரிவிக்கின்றனர்.
புதிய சத்துணவுத் திட்டத்திற்கான வெள்ளோட்டம் சென்னையில் உள்ள சைதாப்பேட்டை மற்றும் முதலமைச்சர் ஜெயலலிதாவின் தொகுதியான  ஸ்ரீரங்கம் தொகுதிக்குட்பட்ட அந்தநல்லூர் பள்ளிகளில் நடத்தப்பட்டுள்ளன.  தாமு தலைமையிலான சமையல் நிபுணர்கள் மற்றும் சத்துணவு திட்ட அதிகாரிகளால் புதிய உணவுவகைகளுக்கான பட்டியலும் செய்முறையும் உருவாக்கப் பட்டுள்ளன. இப் புதிய பட்டியல் இப்போதைக்கு 32 மாவட்டங்களில், மாவட்டத்துக்கு ஒரு வருவாய் மண்டலம் வீதம் அறிமுகப்படுத்தப்பட உள்ளது. படிப்படியாக தமிழகம் முழுவதும் விரிவுபடுத்தப்படும் என்று அறிவித்துள்ளார். இந்த வெள்ளோட்டங்களில் ஒரு குழந்தைக்கு 6 ரூபாய் வீதம் செலவழிக்கப்பட்டதாகவும், இந்தத் தொகையை அரசு ஒதுக்கவே ஒதுக்காது என்றும் கூறுகிறார் தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்க மாநிலத்தலைவர் பழனிச்சாமி.
“அந்தநல்லூர் பள்ளியில் 100 குழந்தைகளுக்கு 600 ரூபாய் செலவில் வெஜிடபுள் புலாவ் செய்து கொடுத்துள்ளார்கள். பயன்படுத்தப்பட்ட அரிசி பொன்னி அரிசி. இந்த அரிசி உயர்ரக அரிசியாகும். ஆனால் சத்துணவுக்காக ஆரம்பப்பள்ளி மாணவர் ஒன்றுக்கு தமிழக அரசு 70 பைசா மட்டுமே ஒதுக்குகிறது. உயர்நிலைப் பள்ளியில் படிக்கும் மாணவருக்கு 80 பைசா ஒதுக்குகிறது. 36 பைசாவில் காய்கறி, 27 பைசாவுக்கு விறகு, மளிகைப் பொருளுக்கு 17 பைசா என்பது அரசின் கணக்கு. இத்துடன் அரிசி, பருப்பு, முட்டை, கொண்டைக்கடலை போன்றவற்றை மட்டுமே அரசு தருகிறது. இப்படிப்பட்ட குறைந்தபட்ச விலையில் குழந்தைகளுக்கு வெஜிடபுள் புலவு போடுவது சாத்தியமேயில்லை. அத்துடன் அரசு தரும் அரிசியில் பிரியாணி மற்றும் புலவு போன்ற உணவுவகைகளைச் செய்யவே முடியாது” என்கிறார்.
மேலோட்டமாகப் பார்ப்பதற்கு கவர்ச்சிகரமாகத் தெரியும் இந்த சத்துணவுத் திட்டத்தின் பின்னணியில் வேறு உள்நோக்கம் இருக்க வாய்ப்பு இருப்பதாகவும் சந்தேகிக்கிறார் பத்திரிக்கையாளர் ஞாநி.
“தமிழக அரசால் அறிவிக்கப் பட்டுள்ள புதிய சத்துணவுத் திட்டம், தனியார்மயத்தை நோக்கி இத்திட்டத்தைக் கொண்டு போகப்போகிறார்களோ என்ற சந்தேகத்தை ஏற்படுத்துகிறது. இவர்கள் சொல்லியுள்ள உணவுகளின் பட்டியலைப் பார்க்கும்போது, இதையெல்லாம் செய்யப் பள்ளிகளில் போதிய வசதிகள், மனிதவளம் இல்லாத நிலையில் மையப்படுத்தப்பட்ட சென்ட்ரல் கிச்சன்களைக் கொண்டுவரலாம். பிறகு படிப்படியாக அதை அயல்வேலையாக தனியாருக்கு ஒப்படைக்கும் நிலை வருவதற்கு வாய்ப்பு இருக்கிறது” என்கிறார்.
இதே கருத்தை தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்க மாநிலத்தலைவர் பழனிச்சாமியும் பிரதிபலிக்கிறார்.
“மொத்தம் உள்ள ஒன்றேகால் லட்சம் சத்துணவு ஊழியர்களில் 28 ஆயிரம் காலியிடங்கள் நிரப்பப் படாமலேயே உள்ளது. இன்னும் சில ஆண்டுகளில் 50 சதவிகிதம் சத்துணவு ஊழியர்கள் ஓய்வுபெறும் வயதில் உள்ளனர். இச்சூழ்நிலையில் பள்ளிகளில் சத்துணவு சமைப்பது என்பதை இல்லாமலாக்கி ஒரு ஊராட்சிக்கு ஒரு பொதுச் சமையலறை அமைக்கும் திட்டம் இருப்பதாக அமைச்சரே ஒருமுறை சூசகமாக எங்களிடம் குறிப்பிட்டார். இந்த உணவுவகைகளைப் பார்த்தாலும் அவை அனைத்தையுமே பாக்கெட்டில் கட்டிக் கொடுத்துவிட முடியும் என்பது புரிகிறது. இந்த யோசனையைப் பார்த்தால் சத்துணவுத் திட்டத்தை தனியார் மயமாக்கப் போகிறார்களோ என்று எங்களுக்கு அச்சம் ஏற்பட்டுள்ளது” என்கிறார்.
மேலும், இது குறித்து சென்னை புறநகர் அரசுப் பள்ளி ஒன்றின் தலைமை ஆசிரியர் ஒருவர் யதார்த்த நிலையை விளக்கினார்: “ஏற்கனவே நிலைமை மோசமாக இருக்கிறது. சத்துணவு சமைக்க விற்கு கிடைப்பது இல்லை. காய்கறிகளை நாங்களே வாங்கிக்கொள்ள வேண்டியிருக்கிறது. போதுமான விறகு, தரமான காய்கறிகளை வாங்க வேண்டுமானால் திருடினால்தான் உண்டு. சத்துணவு சமைப்பதற்காக வழங்கப்படும் அரிசி தரமாக இல்லை என்றால் மொத்த உணவும் கொட்டப்படுகிறது. முருங்கைக்காய், கத்தரிக்காய் போன்ற காய்களைக் குழந்தைகள் சாப்பிடுவதில்லை. ஆசிரியருக்குப் பயந்து கண்ட இடத்தில் கொட்டுகிறார்கள். இதனால் பள்ளி வளாகத்தில் குப்பைதான் குமிகிறது. பின்னர் அதைச் சுத்தப்படுத்துவதே பெரியவேலையாக இருக்கிறது. “
அரசின் நல்லெண்ணத்தைப் பாராட்ட வேண்டும் என்றும் ஆனால் இதுபோன்ற வெறும் கவர்ச்சி அறிவிப்புகளால் எந்தப் பயனும் இல்லை என்றும் கல்வியாளர் எஸ்.எஸ்.ராஜகோபாலன் குறிப் பிடுகிறார்.
“சத்துணவுத் திட்டம் ஆரம்பித்த காலத்திலிருந்து மேலிருந்து கீழ்வரை ஊழல்மயம்தான். இதுபோன்ற திட்டங்களையெல்லாம் அறிவிப்பதற்கு முன்பு முழுமையாக இத்திட்டம் எப்படி நடக்கிறது என்பதுபற்றி அரசு ஆய்வு செய்யவேண்டும். இப்போதைய விலைவாசியில்  70 பைசாவில் தரமான உணவை எப்படி வழங்க முடியும்.” என்கிறார்.
புதிய சத்துணவுத் திட்டத்துக்கானகூடுதல் நிதியைச் சமாளிப்பது குறித்து அரசு எந்தத் திட்டத்தையும் வைத்தி ருப்பதாகத் தெரியவில்லை என்கிறார்கள் கல்வியாளர்கள். இதுகுறித்து சமூக நலத்துறை அமைச்சரைத் தொடர்பு கொள்ள தொடர்ந்து முயன்றும் முடியவில்லை. தாயிற் சிறந்த கோவிலுமில்லை என்ற ரிங்டோனை மட்டும் 100 முறை கேட்டோம்.
இப்போதைக்கும் தமிழக அரசு அறிவித்த சமையல் நிபுணர் தாமு தயாரித்த உணவுப்பட்டியல் மட்டும் இப்போது நம் கையில் இருக்கிறது...கொண்டைக்கடலைப் புலவு, கருவேப்பிலை சாதம், தக்காளி முட்டை மசாலா....என்று படித்து இன்புற வேண்டியதுதான்.     

Friday, October 19, 2012

ஆதிதிராவிடர் பள்ளி விடுதிகள் மோசம்


சென்னை: "தமிழகத்தில் உள்ள ஆதிதிராவிட மற்றும் பழங்குடியின பள்ளி விடுதிகள், மிக மோசமான, பாதுகாப்பற்ற நிலையில் உள்ளன" என தேசிய குழந்தை உரிமைகள் பாதுகாப்பு ஆணைய தலைவர், சாந்தா சின்கா கூறினார்.
தேசிய குழந்தை உரிமைகள் பாதுகாப்பு ஆணையத்தின் சார்பில், தமிழகம் மற்றும் புதுச்சேரியில் நிகழ்ந்த, குழந்தை உரிமை மீறல்கள் குறித்த, சென்னையில் நடந்த, இரண்டு நாள் பொது விசாரணை நேற்று நிறைவடைந்தது. ஆணையத்தின் தலைவர், சாந்தா சின்கா கூறியதாவது:
கல்வி உரிமை மறுத்தல், குழந்தை தொழிலாளர், உடல் ரீதியான தண்டனை அளித்து, குழந்தை கடத்தல், பாலியல் கொடுமைகள் என, 67 வழக்குகள் விசாரிக்கப் பட்டன. இதற்கு, விரைவில் தீர்வு காண, பரிந்துரைக்கப்பட்டு உள்ளது. தமிழகத்தில் உள்ள ஆதிதிராவிட மற்றும் பழங்குடியின பள்ளி விடுதிகளில், மோசமான நிலையே நிலவுகிறது. இதை அரசும், ஏற்றுக் கொண்டுள்ளது. மாநிலத்தில், முறைப்படுத்தப் படாத விடுதிகள் எண்ணிக்கை, அதிகளவில் உள்ளன.
குழந்தைகள் சம்பந்தப்பட்ட, பல்வேறு துறைகள், ஒருங்கிணைந்து பணிபுரிவதில்லை. இவர்களுடன், போலீசார் ஒத்துழைப்பும் அவசியம். அப்படி ஒருங்கிணைந்து பணிபுரிந்தால் மட்டுமே, குழந்தைகள் உரிமைகள் நிலைநாட்டப்படும்.இரண்டு நாள் பொது விசாரணையில், பல்வேறு விஷயங்கள், கவனத்திற்கு கொண்டு வரப்பட்டு உள்ளன. இப்பிரச்னைக்கு தீர்வு காண, தேசிய குழந்தை உரிமைகள் பாதுகாப்பு ஆணையம், பல பரிந்துரைகளை அரசுக்கு அளிக்க உள்ளது.இவ்வாறு அவர் கூறினார்.
முன்னாள் துணைவேந்தர் வசந்தி தேவி கூறியதாவது:தமிழகத்தில், கல்வி உரிமை சட்டம் முழுமையாக நிறைவேற்றப் படவில்லை. இதை கல்வி துறை சார்ந்தவர்களும், ஏற்றுக் கொண்டுள்ளனர். இதுதொடர்பாக, பல பரிந்துரைகள் அரசுக்கு அளிக்கப்படும்.
குழந்தை திருமணம் குறித்த, ஏராளமான புகார்கள் வந்துள்ளன. இதுகுறித்து, விரிவாக ஆய்வு செய்து, தேசிய குழந்தை உரிமைகள் பாதுகாப்பு ஆணையத்திற்கு, அறிக்கை அளிக்க, சிபாரிசு செய்திருக்கிறோம்.இவ்வாறு அவர் கூறினார்.

Tuesday, October 9, 2012

பட்டதாரி, இடைநிலை ஆசிரியர்களை நியமிக்க புதிய வழிமுறை


பட்டதாரி, இடைநிலை ஆசிரியர்களை நியமிக்க புதிய வழிமுறை: தமிழக அரசு
பட்டதாரி மற்றும் இடைநிலை ஆசிரியர்களை நியமிப்பதற்கான புதிய வழிமுறையை பின்பற்ற தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இதன்படி, ஆசிரியர் தகுதித் தேர்வு மற்றும் "வெயிட்டேஜ்' மதிப்பெண் அடிப்படையில் ஆசிரியர்கள் நியமனம் செய்யப்பட வேண்டும் என்று தமிழக அரசு திங்கள்கிழமை தெரிவித்துள்ளது. ஆசிரியர் தகுதித் தேர்வுக்குப் பிறகு நேர்முகத் தேர்வு அல்லது மீண்டும் போட்டித் தேர்வு நடத்தப்படும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், புதிய முறையாக "வெயிட்டேஜ்' மதிப்பெண் முறையை தமிழக அரசு அறிமுகப்படுத்துகிறது.

ஆசிரியர் தகுதி மறுதேர்வு வரும் 14-ம் தேதி நடைபெற உள்ள நிலையில் தமிழக அரசின் இந்த உத்தரவு மிகுந்த முக்கியத்துவம் பெற்றுள்ளது.

ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சிப் பெற்ற பட்டதாரி ஆசிரியர்களுக்கு பிளஸ் 2, இளநிலைப் பட்டம், ஆசிரியர் தகுதித் தேர்வில் பெற்ற மதிப்பெண் அடிப்படையில் "வெயிட்டேஜ்' மதிப்பெண் வழங்கப்படும். அதேபோல், இடைநிலை ஆசிரியர்களுக்கு பிளஸ் 2, ஆசிரியர் பட்டயப் படிப்பு, ஆசிரியர் தகுதித் தேர்வில் பெற்ற மதிப்பெண் அடிப்படையில் "வெயிட்டேஜ்' மதிப்பெண் வழங்கப்படும்.

இடைநிலை ஆசிரியர் நியமனத்தைப் பொருத்தவரை உச்ச நீதிமன்றத்தில் உள்ள வழக்கு நிலுவையில் இருக்கும் வரை, ஆசிரியர் தகுதித் தேர்வுக்குப் பிறகு மாநில அளவிலான பதிவு மூப்பு முறை பின்பற்றப்படும் என்றும் அரசு தெரிவித்துள்ளது.

தமிழகம் முழுவதும் 5,451 இடைநிலை ஆசிரியர் பணியிடங்கள், 18,922 பட்டதாரி ஆசிரியர் பணியிடங்கள் ஆசிரியர் தகுதித் தேர்வின் மூலம் நிரப்ப தமிழக அரசு முடிவு செய்தது.

அதனடிப்படையில் ஆசிரியர் தகுதித் தேர்வில் வெற்றி பெற்ற இடைநிலை ஆசிரியர்கள் மாநில பதிவு மூப்பின் அடிப்படையிலும், ஆசிரியர் தகுதித் தேர்வு மதிப்பெண் அடிப்படையில் பட்டதாரி ஆசிரியர்கள் நியமனமும் நடைபெறும் என்று தமிழக அரசு அறிவித்தது.

இந்த நிலையில், ஆசிரியர் தகுதித் தேர்வு தொடர்பான வழக்குகளை விசாரித்த உயர் நீதிமன்றம், இந்தத் தேர்வு வெறும் தகுதித் தேர்வு மட்டுமே. ஆசிரியர்களைத் தேர்ந்தெடுக்க புதிய நடைமுறையைக் கடைப்பிடிக்க வேண்டும் என்று உத்தரவிட்டது.

இதுதொடர்பாக அரசுக்குப் பரிந்துரைக்க உயர்நிலைக் குழு அமைக்கப்பட்டுள்ளதாக தமிழக அரசு நீதிமன்றத்தில் தெரிவித்தது. தமிழக பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் என்.ஆர்.சிவபதி தலைமையிலான இந்தக் குழுவில் பள்ளிக் கல்வித் துறைச் செயலாளர் டி.சபிதா, ஆசிரியர் தேர்வு வாரியத்தின் தலைவர் சுர்ஜித் கே.சௌத்ரி, பள்ளிக் கல்வி இயக்குநர் கே.தேவராஜன் ஆகியோர் இடம்பெற்றிருந்தனர்.

பல்வேறு மாநிலங்களில் பின்பற்றப்படும் ஆசிரியர் தேர்வு நடைமுறையை ஆராய்ந்த பிறகு இந்தக் குழு அரசுக்குப் பரிந்துரை அனுப்பியது.

அந்தப் பரிந்துரையை ஏற்று தமிழக அரசு ஆணை பிறப்பித்துள்ளது. அதன் விவரம்:
ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்ற இடைநிலை ஆசிரியர்களுக்கு அவர்கள் ஏற்கெனவே பெற்ற மதிப்பெண் அடிப்படையில் 100 மதிப்பெண் "வெயிட்டேஜ்' மதிப்பெண்ணாக வழங்கப்படும்.

பிளஸ் 2 தேர்வில் பெற்ற மதிப்பெண்ணுக்கு 15 மதிப்பெண்ணும், ஆசிரியர் பட்டயத் தேர்வில் பெற்ற மதிப்பெண்ணுக்கு 25 மதிப்பெண்ணும், ஆசிரியர் தகுதித் தேர்வில் பெற்ற மதிப்பெண்ணுக்கு 60 மதிப்பெண்ணும் "வெயிட்டேஜ்' மதிப்பெண்ணாக வழங்கப்படும்.
மொத்தம் 100 மதிப்பெண்ணுக்கு இவர்கள் பெறும் மதிப்பெண் அடிப்படையில் இடைநிலை ஆசிரியர்கள் நியமிக்கப்படுவார்கள் (உச்ச நீதிமன்ற வழக்கு முடியும்வரை ஆசிரியர் தகுதித் தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கு மாநில பதிவு மூப்பின் அடிப்படையில் பணி நியமனம் வழங்கப்படும்).

பட்டதாரி ஆசிரியர்களுக்கு...ஆசிரியர் தகுதித் தேர்வில் வெற்றி பெற்ற பட்டதாரி ஆசிரியர்களுக்கு பிளஸ் 2 தேர்வில் பெற்ற மதிப்பெண்ணுக்கு 10 மதிப்பெண்ணும், இளநிலைப் பட்டம், பி.எட். பட்டங்களில் பெற்ற மதிப்பெண்ணுக்கு தலா 15 மதிப்பெண்ணும், ஆசிரியர் தகுதித் தேர்வில் பெற்ற மதிப்பெண்ணுக்கு 60 மதிப்பெண்ணும் "வெயிட்டேஜ்' மதிப்பெண்ணாக வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.

கடந்த ஜூலை 12-ல் நடைபெற்ற ஆசிரியர் தகுதித் தேர்வை 6.60 லட்சம் பேர் எழுதினர். இவர்களில் 2,448 பேர் மட்டுமே தேர்ச்சி பெற்றனர்.

இந்தத் தேர்வில் தோல்வியடைந்தவர்களுக்கு மீண்டும் ஒரு வாய்ப்பு வழங்கவும், 22 ஆயிரத்துக்கும் அதிகமான ஆசிரியர்களைத் தேர்ந்தெடுக்கவும் அக்டோபர் 14-ம் தேதி ஆசிரியர் தகுதி மறுதேர்வு நடத்தப்படுகிறது.
இந்தத் தேர்வில் மொத்தம் 6.70 லட்சம் பேர் பங்கேற்க உள்ளனர்.

வெயிட்டேஜ் மதிப்பெண் பகிர்வு எப்படி?
இடைநிலை ஆசிரியர்களுக்கான "வெயிட்டேஜ்' மதிப்பெண் (100):
பிளஸ் 2 தேர்வுக்கு வழங்கப்படும் மதிப்பெண் (15):
90 சதவீதத்துக்கு மேல் ..................- 15 மதிப்பெண்
80 முதல் 90 சதவீதம் வரை.............-12
70 முதல் 80 சதவீதம் வரை.............- 9
60 முதல் 70 சதவீதம் வரை.............- 6
50 முதல் 60 சதவீதம் வரை.............- 3
ஆசிரியர் பட்டயத் தேர்வுக்கு வழங்கப்படும் மதிப்பெண் (25)
70 சதவீதத்துக்கு மேல்..................- 25 மதிப்பெண்
50 முதல் 70 சதவீதம் வரை............- 20
ஆசிரியர் தகுதித் தேர்வு (60)
90 சதவீதத்துக்கும் மேல்................- 60 மதிப்பெண்
80 முதல் 90 சதவீதம் வரை............- 54
70 முதல் 80 சதவீதம் வரை............- 48
60 முதல் 70 சதவீதம் வரை............- 42
பட்டதாரி ஆசிரியர்களுக்கான "வெயிட்டேஜ்' மதிப்பெண் (100):
பிளஸ் 2 தேர்வுக்கு வழங்கப்படும் மதிப்பெண் (10)
90 சதவீதத்துக்கு மேல்..................- 10 மதிப்பெண்
80 முதல் 90 சதவீதம் வரை............- 8
70 முதல் 80 சதவீதம் வரை............- 6
60 முதல் 70 சதவீதம் வரை............- 4
50 முதல் 60 சதவீதம் வரை............- 2
இளநிலைப் பட்டப் படிப்பு (15)
70 சதவீதத்துக்கும் மேல்................- 15
50 முதல் 70 சதவீதம் வரை............- 12
50 சதவீதத்துக்கும் கீழே................- 10
பி.எட். படிப்பு (15)
70 சதவீதத்துக்கும் மேல்................- 15
50 முதல் 70 சதவீதம் வரை............- 12
ஆசிரியர் தகுதித் தேர்வு (60)
90 சதவீதத்துக்கும் மேல்................- 60 மதிப்பெண்
80 முதல் 90 சதவீதம் வரை............- 54
70 முதல் 80 சதவீதம் வரை............- 48
60 முதல் 70 சதவீதம் வரை............- 40