
ஆனால், கடந்த நவம்பர் 2 ஆம் தேதி முதலமைச்சர் ஜெயலலிதா, சட்டசபையில் அறிவித்த புதிய சத்துணவுத்திட்ட நிரலில் உள்ள உணவுகளின் பட்டியலைப் படித்தவர்களுக்கு, ஏழைக் குழந்தைகளின் வாழ்க்கையில் ஏதோ ஒரு புரட்சி நடப்பதாகவே தோன்றும். பிரியாணி, பட்டாணி புலாவ், மிளகுக்கறி முட்டை என அந்தப் பட்டியலைக் கேட்பவர்களின் நாவு ஊறும். ஆனால் கல்வியாளர்களும், சத்துணவு ஊழியர்களும் இத்திட்டத்தின் சாத்தியம் குறித்து மிகப்பெரிய சந்தேகங்களைத் தெரிவிக்கின்றனர்.
புதிய சத்துணவுத் திட்டத்திற்கான வெள்ளோட்டம் சென்னையில் உள்ள சைதாப்பேட்டை மற்றும் முதலமைச்சர் ஜெயலலிதாவின் தொகுதியான ஸ்ரீரங்கம் தொகுதிக்குட்பட்ட அந்தநல்லூர் பள்ளிகளில் நடத்தப்பட்டுள்ளன. தாமு தலைமையிலான சமையல் நிபுணர்கள் மற்றும் சத்துணவு திட்ட அதிகாரிகளால் புதிய உணவுவகைகளுக்கான பட்டியலும் செய்முறையும் உருவாக்கப் பட்டுள்ளன. இப் புதிய பட்டியல் இப்போதைக்கு 32 மாவட்டங்களில், மாவட்டத்துக்கு ஒரு வருவாய் மண்டலம் வீதம் அறிமுகப்படுத்தப்பட உள்ளது. படிப்படியாக தமிழகம் முழுவதும் விரிவுபடுத்தப்படும் என்று அறிவித்துள்ளார். இந்த வெள்ளோட்டங்களில் ஒரு குழந்தைக்கு 6 ரூபாய் வீதம் செலவழிக்கப்பட்டதாகவும், இந்தத் தொகையை அரசு ஒதுக்கவே ஒதுக்காது என்றும் கூறுகிறார் தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்க மாநிலத்தலைவர் பழனிச்சாமி.
“அந்தநல்லூர் பள்ளியில் 100 குழந்தைகளுக்கு 600 ரூபாய் செலவில் வெஜிடபுள் புலாவ் செய்து கொடுத்துள்ளார்கள். பயன்படுத்தப்பட்ட அரிசி பொன்னி அரிசி. இந்த அரிசி உயர்ரக அரிசியாகும். ஆனால் சத்துணவுக்காக ஆரம்பப்பள்ளி மாணவர் ஒன்றுக்கு தமிழக அரசு 70 பைசா மட்டுமே ஒதுக்குகிறது. உயர்நிலைப் பள்ளியில் படிக்கும் மாணவருக்கு 80 பைசா ஒதுக்குகிறது. 36 பைசாவில் காய்கறி, 27 பைசாவுக்கு விறகு, மளிகைப் பொருளுக்கு 17 பைசா என்பது அரசின் கணக்கு. இத்துடன் அரிசி, பருப்பு, முட்டை, கொண்டைக்கடலை போன்றவற்றை மட்டுமே அரசு தருகிறது. இப்படிப்பட்ட குறைந்தபட்ச விலையில் குழந்தைகளுக்கு வெஜிடபுள் புலவு போடுவது சாத்தியமேயில்லை. அத்துடன் அரசு தரும் அரிசியில் பிரியாணி மற்றும் புலவு போன்ற உணவுவகைகளைச் செய்யவே முடியாது” என்கிறார்.
மேலோட்டமாகப் பார்ப்பதற்கு கவர்ச்சிகரமாகத் தெரியும் இந்த சத்துணவுத் திட்டத்தின் பின்னணியில் வேறு உள்நோக்கம் இருக்க வாய்ப்பு இருப்பதாகவும் சந்தேகிக்கிறார் பத்திரிக்கையாளர் ஞாநி.
“தமிழக அரசால் அறிவிக்கப் பட்டுள்ள புதிய சத்துணவுத் திட்டம், தனியார்மயத்தை நோக்கி இத்திட்டத்தைக் கொண்டு போகப்போகிறார்களோ என்ற சந்தேகத்தை ஏற்படுத்துகிறது. இவர்கள் சொல்லியுள்ள உணவுகளின் பட்டியலைப் பார்க்கும்போது, இதையெல்லாம் செய்யப் பள்ளிகளில் போதிய வசதிகள், மனிதவளம் இல்லாத நிலையில் மையப்படுத்தப்பட்ட சென்ட்ரல் கிச்சன்களைக் கொண்டுவரலாம். பிறகு படிப்படியாக அதை அயல்வேலையாக தனியாருக்கு ஒப்படைக்கும் நிலை வருவதற்கு வாய்ப்பு இருக்கிறது” என்கிறார்.
இதே கருத்தை தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்க மாநிலத்தலைவர் பழனிச்சாமியும் பிரதிபலிக்கிறார்.
“மொத்தம் உள்ள ஒன்றேகால் லட்சம் சத்துணவு ஊழியர்களில் 28 ஆயிரம் காலியிடங்கள் நிரப்பப் படாமலேயே உள்ளது. இன்னும் சில ஆண்டுகளில் 50 சதவிகிதம் சத்துணவு ஊழியர்கள் ஓய்வுபெறும் வயதில் உள்ளனர். இச்சூழ்நிலையில் பள்ளிகளில் சத்துணவு சமைப்பது என்பதை இல்லாமலாக்கி ஒரு ஊராட்சிக்கு ஒரு பொதுச் சமையலறை அமைக்கும் திட்டம் இருப்பதாக அமைச்சரே ஒருமுறை சூசகமாக எங்களிடம் குறிப்பிட்டார். இந்த உணவுவகைகளைப் பார்த்தாலும் அவை அனைத்தையுமே பாக்கெட்டில் கட்டிக் கொடுத்துவிட முடியும் என்பது புரிகிறது. இந்த யோசனையைப் பார்த்தால் சத்துணவுத் திட்டத்தை தனியார் மயமாக்கப் போகிறார்களோ என்று எங்களுக்கு அச்சம் ஏற்பட்டுள்ளது” என்கிறார்.
மேலும், இது குறித்து சென்னை புறநகர் அரசுப் பள்ளி ஒன்றின் தலைமை ஆசிரியர் ஒருவர் யதார்த்த நிலையை விளக்கினார்: “ஏற்கனவே நிலைமை மோசமாக இருக்கிறது. சத்துணவு சமைக்க விற்கு கிடைப்பது இல்லை. காய்கறிகளை நாங்களே வாங்கிக்கொள்ள வேண்டியிருக்கிறது. போதுமான விறகு, தரமான காய்கறிகளை வாங்க வேண்டுமானால் திருடினால்தான் உண்டு. சத்துணவு சமைப்பதற்காக வழங்கப்படும் அரிசி தரமாக இல்லை என்றால் மொத்த உணவும் கொட்டப்படுகிறது. முருங்கைக்காய், கத்தரிக்காய் போன்ற காய்களைக் குழந்தைகள் சாப்பிடுவதில்லை. ஆசிரியருக்குப் பயந்து கண்ட இடத்தில் கொட்டுகிறார்கள். இதனால் பள்ளி வளாகத்தில் குப்பைதான் குமிகிறது. பின்னர் அதைச் சுத்தப்படுத்துவதே பெரியவேலையாக இருக்கிறது. “
அரசின் நல்லெண்ணத்தைப் பாராட்ட வேண்டும் என்றும் ஆனால் இதுபோன்ற வெறும் கவர்ச்சி அறிவிப்புகளால் எந்தப் பயனும் இல்லை என்றும் கல்வியாளர் எஸ்.எஸ்.ராஜகோபாலன் குறிப் பிடுகிறார்.
“சத்துணவுத் திட்டம் ஆரம்பித்த காலத்திலிருந்து மேலிருந்து கீழ்வரை ஊழல்மயம்தான். இதுபோன்ற திட்டங்களையெல்லாம் அறிவிப்பதற்கு முன்பு முழுமையாக இத்திட்டம் எப்படி நடக்கிறது என்பதுபற்றி அரசு ஆய்வு செய்யவேண்டும். இப்போதைய விலைவாசியில் 70 பைசாவில் தரமான உணவை எப்படி வழங்க முடியும்.” என்கிறார்.
புதிய சத்துணவுத் திட்டத்துக்கான

இப்போதைக்கும் தமிழக அரசு அறிவித்த சமையல் நிபுணர் தாமு தயாரித்த உணவுப்பட்டியல் மட்டும் இப்போது நம் கையில் இருக்கிறது...கொண்டைக்கடலைப் புலவு, கருவேப்பிலை சாதம், தக்காளி முட்டை மசாலா....என்று படித்து இன்புற வேண்டியதுதான்.
No comments:
Post a Comment