TAANAKS VNR செய்திகளை உங்கள் மொபைலில் பெறுவதற்கு ON TAANAKS-NEWS என்று டைப் செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பவும்.

Wednesday, August 8, 2012

நாமக்கல் மாவட்டத்தில், துப்புரவுத் தொழிலாளர் குழந்தைகளுக்காக ஆதி திராவிடர் நலத்துறை வழங்கிய கல்வி உதவித்தொகை ரூ.81 லட்சத்தில், சுமார் ரூ.68 லட்சத்தை கையாடல் செய்துள்ளதாக 77 பள்ளித் தலைமையாசிரியர்கள் பணியிடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
இது ஏதோ நாமக்கல் மாவட்டத்தில், தொடக்கப்பள்ளிகளில் மட்டுமே நடந்ததாகக் கருதத் தேவையில்லை. தமிழகம் முழுவதும் உள்ள தொடக்கப் பள்ளி, நடுநிலைப் பள்ளி, உயர்நிலைப்பள்ளி, மேனிலைப்பள்ளி அனைத்திலும் இதுதான் நிலைமை!
இது ஏதோ இந்த ஆண்டு மட்டும்தான் இப்படியாகிவிட்டது என்றும் கருதிவிட வேண்டாம். இது தமிழகத்தில் பல ஆண்டுகளாய் தொடர்ந்து நடைபெறும் முறைகேடுதான்.
துப்புரவுத் தொழிலாளர்களின் குழந்தைகளுக்காகக் கொடுக்கப்பட்ட உதவித்தொகையில் மட்டும்தான் இந்தக் கையாடல் என்று நினைத்தால் அதுவும் தவறு. எல்லா உதவித்தொகைகளிலும் இதுபோல் கையாடல் நடக்கிறது.
கையாடல் செய்த பணத்தைப் பள்ளித் தலைமையாசிரியர்கள் மட்டுமே எடுத்துக் கொண்டார்கள் என்று கருதுவது மடமை. இதில் கல்வித்துறை அலுவலர்கள் அதிகாரிகளுக்கும் உரிய பங்கு முறையாகப் போய்ச் சேருகிறது என்பது விஷயம் தெரிந்தவர்களுக்கு எல்லாம் புரியும். சில இடங்களில், பள்ளி அமைந்துள்ள கிராமம், புறநகர் பகுதிகளில் உள்ள ஆளுங்கட்சிப் பிரமுகர்களுக்கும் முறையாகக் கிஸ்தி செலுத்தப்பட்டு வருகிறது. நடக்கும் முறைகேடுகள் பற்றி யாருமே பேசத் தயாராக இல்லை, அவ்வளவே!
2012-13 நிதிநிலை அறிக்கைப்படி பள்ளிக் கல்விக்காக ரூ. 14,555 கோடியைத் தமிழக அரசு ஒதுக்கியுள்ளது. இது ஆசிரியர்களின் சம்பளம் நீங்கலாக சுமார் 40% தொகை மாணவர்களின் நலன் மற்றும் கல்வி மேம்பாட்டுக்காக செலவிடப்படுகிறது. இதில் மேலிடம் மட்டுமே ஊழல் செய்ய முடியும். ஆனால், கல்வி உதவித்தொகை, சீருடை வழங்குதல், காலணி வழங்குதல், பாடப்புத்தகங்கள் வழங்குதல், உணவுத் திட்டம், அனைவருக்கும் கல்வித் திட்டம், நாட்டு நலப்பணித் திட்டம், தேசிய மாணவர்படை, விளையாட்டுப் போட்டிகள் இத்யாதி சில்லறை விவகாரங்களில்தான் பள்ளி அளவில் ஊழல் நடைபெறுகிறது. இந்த ஊழலுக்கு பச்சைக்கொடி காட்டும் கல்வித் துறை அதிகாரிகள்தான் இந்த ஊழலுக்கு அச்சாணி.
2011-12-ல் அனைவருக்கும் கல்வித் திட்டத்தின் கீழ் ரூ.1,891 கோடி செலவிடப்பட்டுள்ளது. 2012-13-ல் 2,000 கோடி செலவிடவுள்ளனர். இதில் ரூ.700 கோடி மாநில அரசின் பங்குத்தொகை. மீதித்தொகை மத்திய அரசின் பங்கு. தரமான கல்வி, தொடக்கப்பள்ளியின் உள்கட்டமைப்பு வசதி ஆகியவற்றுக்காக அளிக்கப்படும் இந்த நிதி, அந்தந்த மாவட்ட அதிகாரிகளின் மேற்பார்வையில், அவர்களின் கட்டுப்பாட்டில் உள்ள பள்ளிகளில், தலைமையாசிரியர்கள் மூலம் செலவிடப்படுகிறது.
அனைவருக்கும் கல்வித் திட்டம் அமலுக்கு வந்தபிறகு, தலைமையாசிரியர் பதவிக்கு அடிதடி, பேரம் அமலுக்கு வந்தன. இதுபோக, இப்போது தொடர் கல்வித் திட்டத்துக்கும் நிதி ஒதுக்கப்படுகிறது. தமிழகப் பள்ளிகளில், அனைவருக்கும் கல்வித் திட்டத்தில்தான் அதிகமான ஊழல் நடந்துள்ளது என்பது கல்வித் துறையுடன் தொடர்பு கொண்ட அனைவருக்குமே தெரியும்.
இடைநில்லாமல் படிக்க பத்தாம் வகுப்பு, 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு முறையே ரூ.1,500, ரூ.2,000 வைப்புநிதியாக அளிக்கப்படுகிறது. 21 லட்சம் மாணவர்களுக்கு ரூ.313 கோடியை அரசு ஒதுக்குகிறது. முதலில் "வைக்க வேண்டியதை வைக்காமல்', இவர்களுக்கு வைப்புநிதி கடிதங்கள் கிடைப்பதில்லை என்பது நம்மில் எத்தனை பேருக்குத் தெரியும்?
கல்வி உதவித்தொகையைப் பள்ளி அளவில்தான் வழங்க முடியும். ஆனால், அந்த உதவித்தொகை இன்னும் வந்து சேரவில்லை என்று சொல்லி, இழுத்தடித்து, மறக்கச்செய்துவிடுவதுதான் வழக்கமான மோசடி முறை. பள்ளிக் கல்வி உதவித்தொகை சில நூறு ரூபாய்கள்தான். ஆகவே இந்த சிறுதொகையை ஒரு குடும்பத் தந்தை மறப்பது எளிது. இருப்பினும் 200 மாணவர் உள்ள பள்ளியில் குறைந்தது ரூ.50,000/-கல்வி உதவித்தொகை கிடைக்கும்.
நாட்டு நலப்பணித் திட்டம், தேசிய மாணவர் படை, பசுமை மன்றம், பள்ளி விளையாட்டுப் போட்டிகள் ஆகியவற்றுக்கு வழங்கப்படும் நிதியில் பெரும்பகுதி மாணவர்களுக்கு வந்து சேருவது இல்லை. எத்தனை என்சிசி மாணவர்களுக்கு உடை, உணவுப்படி கிடைக்கிறது. பள்ளி விளையாட்டுப் பொருள்கள் தரமானவையா? போட்டிகளில் வழங்கப்படும் பரிசுப்பொருள் எத்தனை மதிப்புக்கு வழங்கப்பட வேண்டும்? வழங்கப்படும் பரிசுப்பொருளின் மதிப்பு என்ன? யாராவது கேள்வி கேட்டதுண்டா?
தமிழ்நாடு முழுவதும் அனைத்துப் பள்ளிகளுக்கு வழங்கப்பட்டவை, சரியாக கொடுக்கப்பட்டதா என மாணவர்களிடமும் பெற்றோரிடமும் விசாரித்தால், இந்த ஊழலின் விரிவையும் ஆழத்தையும் அரசு கண்டறிவது மிக எளிது.
எந்தக் கட்டுப்பாடும், எந்தக் கேள்வியும் இல்லாமல் காசு கொடுத்தால் மாணவர்கள் மட்டும்தான் கெட்டுப்போவார்கள் என்றில்லை, ஆசிரியர்களும் கெட்டுப்போவார்கள்.
இந்தியாவுக்கு சுதந்திரம் ஏன் கிடைத்தது என்பதற்கான காரணம் இத்தனை ஆண்டுகளுக்குப் பிறகு இப்போதல்லவா புரிகிறது! மக்கள் வரிப் பணத்தையும், அரசு கஜானாவையும் அவரவர் திறமைக்கும் வாய்ப்புக்கும் தகுந்தபடி கொள்ளை அடித்துக் கொழித்துக் கொள்வதற்காகத்தான் நமக்குச் சுதந்திரம் கிடைத்திருக்கிறது என்றும்; அவரவர்களுக்குத் தர வேண்டிய பங்கைத் தந்து விட்டால் தப்பித்துவிடலாம் என்றும்!
இருப்பினும் இத்தகைய அவநம்பிக்கையான சூழலிலும் ஊழலுக்கு எதிரான சில நல்ல நடவடிக்கைகள், புதிய நம்பிக்கைகளைத் தருகின்றன.

அரசுப் பள்ளிகளில் சிறந்த கல்வி பெற என்ன வழி?

பெரு நகரங்களில் பிரபலமான தனியார் பள்ளிகளில் எல்.கே.ஜி. சேர்ப்பதற்கே ரூ.1 லட்சம் வரை நன்கொடை அளிக்க வேண்டியுள்ளது. பல பள்ளிகளில் குழந்தையைச் சேர்ப்பதற்கான விண்ணப்பம் பெற அதிகாலை 3 மணியில் இருந்தே பெற்றோர்கள் காத்திருந்த நிலையும் ஏற்பட்டது.
 பிரபலமான பள்ளிகளில் குழந்தைகளைப் பள்ளியில் சேர்க்க 6 மாதங்களுக்கு முன்பே முயற்சிகளைத் தொடங்க வேண்டியுள்ளது. அமைச்சர்கள், பெரிய தொழிலதிபர்கள் என சிபாரிசுப் பட்டியல் நீண்டுகொண்டே செல்கிறது. ஆனால், இன்றளவிலும் 80 சதவிகிதத்துக்கும் மேற்பட்ட மாணவர்களுக்குக் கல்வி அளித்துவரும் அரசுப் பள்ளிகளில் சேர எந்த நெருக்கடியும், கிராக்கியும் இல்லை.
 ஏன் இந்த நிலை? அரசுப் பள்ளிகளில் உள்ள பிரச்னைகள் என்ன? போதிய இடவசதி, தகுதியான ஆசிரியர்கள், அரசின் முழு ஆதரவு ஆகியவை இருந்தும் அரசுப் பள்ளிகளின் மதிப்பு ஏன் உயரவில்லை? இங்கே படிப்பவர்களுக்கு ஏன் கல்லூரிகளிலும் வேலைச் சந்தையிலும் அதிக மதிப்பு கிடைப்பதில்லை?
 அரசுப் பள்ளிகளில் காணும் பிரச்னைகள் ஏராளமானவை. போதிய ஆசிரியர்கள் பணியில் இல்லை. ஆகவே, மாணவர்களுக்குச் சீரான கல்வியைக் கொடுக்க முடியவில்லை. அரசுப் பள்ளிகளில் பணியில் இருக்கும் ஆசிரியர்களில் பலர் படித்து முடித்து பல வருடங்கள் காத்திருந்து பணிக்கு வருவதால் அவர்கள் இப்போதைய சூழலுக்கு ஏற்ப தங்களைத் தயார் செய்து கொள்வதில்லை என்ற கருத்தும் உள்ளது.
 அரசுப் பள்ளிகளில் படிக்கும் குழந்தைகளின் பெற்றோர்கள் பெரும்பாலானோர் கூலி வேலை செய்பவர்கள்தாம். எனவே, அவர்கள் தங்கள் குழந்தைகள் என்ன படிக்கிறார்கள் என்பதைக்கூட அறிந்திருப்பதில்லை.
 இந்தக் குழந்தைகளில் பெரும்பாலானோர் முதல் தலைமுறையாகப் பள்ளிக்கு வருபவர்கள். இதையெல்லாம் கருத்தில்கொண்டு அவர்களைக் கையாளும் திறன், அணுகுமுறைகள் அரசுப் பள்ளிகளில் இல்லை என்ற கருத்து மேலோங்கியுள்ளது. ஆயிரக்கணக்கில் மாணவர்கள் பயிலும் பள்ளியில் குறைந்த கழிவறைகள்தான் உள்ளன. அதுவும் போதிய சுகாதாரமாக இருப்பதில்லை. இதுபோன்ற காரணங்களால் பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளைத் தனியார் பள்ளிகளில் சேர்க்கும் நிலைக்குத் தள்ளப்படுகிறார்கள்.
 அரசுப் பள்ளி மாணவர்கள் பள்ளி நேரங்களில் வகுப்பறையைவிட்டு வெளியில் சுற்றித் திரிவதைக் காணமுடிகிறது. இதைக் கட்டுப்படுத்தவோ ஒழுங்குபடுத்தவோ அரசுப் பள்ளிகளில் எந்த நடவடிக்கையும் இல்லை.
 தனியார் பள்ளிகளில் பயிலும் மாணவர்கள் கட்டுக்குள் இருக்கின்றனர். காலையில் பள்ளிக்குச் செல்லும் குழந்தைகள் பள்ளியிலேயே இருப்பார்கள் என்ற நம்பிக்கையும், பள்ளி முடிந்ததும் பத்திரமாக வீடு திரும்புவார்கள் என்ற நிம்மதியும் பெற்றோர்களுக்கு இருக்கிறது.
 அனைத்து அரசுப் பள்ளிகளும் மோசம் என்று சொல்வதற்கில்லை. சிறப்பாகச் செயல்படும் பள்ளிகளும் உள்ளன. பெரிய அளவில் கட்டமைப்பு இல்லாத அரசுப் பள்ளிகளில் பயிலும் மாணவர்களும் மாநில அளவில் படிப்பில் சாதனை படைத்துள்ளனர். அனைத்து வசதிகளும், போதிய ஆசிரியர்களும் உள்ள அரசுப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை குறைவாக இருக்கிறது.
 அரசுப் பள்ளிகள் புத்தக அறிவை மட்டுமே வளர்க்கின்றன. சிபிஎஸ்இ பள்ளிகள் புத்தகங்களைத் தாண்டிய அறிவை உறுதி செய்கின்றன. படைப்பாற்றல், ஆங்கிலப் புலமை வளர்கிறது. பிற திறமைகளை வளர்ப்பதில் இப்பள்ளிகள் வெற்றி காணுகின்றன.
 தனியார் பள்ளிகள் திறமையானவர்களை உருவாக்கினாலும், சமூகப் பொறுப்புள்ள திறமையான மனிதர்கள் உருவாக வாய்ப்பளிக்கும் களமாக அரசுப் பள்ளிகளே உள்ளன என்பதில் மாற்றுக் கருத்து இல்லை.
 அரசு பிற துறைகளைவிட கல்வித்துறைக்கு அதிக நிதி ஒதுக்கியுள்ளது. கல்விக்கான நிதி அதிகரிப்பது நம்பிக்கைதரும் விஷயம்.
 இந்த நிதி எவ்வாறு செலவிடப்படுகிறது என்பதைப் பொறுத்தே பலன் கிடைக்கும் என்பதும் மறுப்பதற்கில்லை. அரசுப் பள்ளிகளின் தரத்தை எல்லா வகையிலும் உயர்த்த வேண்டும்.
 பெற்றோர்கள் தனியார் பள்ளிகளை நாடுவதை மாற்ற வேண்டும். அப்போதுதான் பள்ளிக் கல்வியில் உள்ள பிரச்னைகளைத் தீர்க்க முடியும்.
 கல்விக்கு அதிக நிதியைச் செலவழிக்கும் அரசு அதைச் சிறந்த முறையில் செலவிட்டு சிறந்த, தரமான கல்வியை பெரும்பான்மையான மக்களுக்குக் கிடைக்க வழிவகுக்க வேண்டும்.
 

கட்டுரைகள்உயர் கல்வியின் தரம் உயர வேண்டும்




நம் நாட்டின் பொருளாதார முன்னேற்றத்துக்கு உயர் கல்வியின் தரம் உயர வேண்டும் என்ற அடிப்படை உண்மை நமது அரசியல் தலைவர்கள் பலருக்கும் தெரிந்திருக்கவில்லை.
நவீன உலகின் பொருளாதாரச் சூழ்நிலை கடந்த காலத்தைப் போல்தான் என நம்மில் பலர் நினைக்கிறோம். அதாவது, நிறைய தொழிற்சாலைகள் உருவாகி உற்பத்தி பெருகி ஏற்றுமதி அதிகரித்து அதனால் நாட்டின் பொருளாதாரம் வளரும் என்ற நம்பிக்கை.
இந்த வகையான பொருளாதார முன்னேற்றம் இக்காலத்தில் நடைமுறைக்கு சாத்தியமல்ல என்பதை ஐரோப்பாவின் பல நாடுகள் பொருளாதாரத்தில் பின்தள்ளப்பட்டதிலிருந்து புரிந்துகொள்ள வேண்டும்.
இன்றையச் சூழ்நிலையில் விஞ்ஞான முறையிலான புதிய கண்டுபிடிப்புகள், நிர்வாக நடைமுறைகளில் மாற்றங்கள் ஆகியவற்றுக்கு முக்கிய இடம் உண்டு. இவை உருவாக ஒரு நாட்டின் உயர் கல்வி நிலையங்களும், கல்லூரியின் ஆராய்ச்சித் துறைகளும் மிகவும் சிறப்புடன் செயல்பட வேண்டும்.
ஆசியாவில் நமது முன்னேற்றத்துடன் போட்டியிடும் நாடுகள் சீனா, சிங்கப்பூர், தைவான் மற்றும் தென் கொரியா எனலாம். நாம் உற்பத்தி செய்யும் ஒரு பொருளை மேலைநாடுகளில் விற்பனை செய்ய முயலும்போது அதே பொருளை நம்மைவிடக் குறைந்த விலைக்கு மற்றொரு நாடு அங்கே விற்க முயன்றால் அதுவே இருநாடுகளுக்கான பொருளாதாரப் போட்டியாகிறது.
இந்தப் போட்டியில் வெற்றிபெறும் நாட்டின் பின்னணியில் அந்நாட்டின் உயர் கல்வி நிலையங்களும், ஆராய்ச்சித் துறைகளும் இருக்கும். அங்கு உருவாகும் படிப்பாளிகளும், விஞ்ஞானிகளும் புதிய கண்டுபிடிப்புகளையும், பொருள்களை உற்பத்தி செய்யும் புதிய நடைமுறைகளையும் உருவாக்குகிறார்கள்.
2008-ம் ஆண்டு "லண்டன் டைம்ஸ்' பத்திரிகை நடத்திய ஓர் ஆராய்ச்சியின்படி உலகின் தலைசிறந்த 200 பல்கலைக்கழகங்களில் சீனா, தென் கொரியா, ஹாங்காங் ஆகிய நாடுகளில் தலா மூன்று பல்கலைக்கழகங்களும் தைவான், இந்தியா ஆகிய நாடுகளில் தலா ஒரு பல்கலைக்கழகமும் இடம்பெற்றன.
ஆக, நம்மைவிட அதிக அளவில் உயர் கல்வியில் முன்னேறிய மூன்று நாடுகள், நமக்குச் சரிசமமாக ஒரு மிகச் சிறிய நாடு எனும் பரிதாபமான நிலைமை.
21-ம் நூற்றாண்டில் உலகின் தலைசிறந்த உயர் கல்விக்கான அடிப்படை அம்சங்களை உள்ளடக்கிய நாடுகளில் சீனா மற்றும் அமெரிக்காவுக்கு அடுத்த இடம் இந்தியாவுக்கே. இதுபோல் உலகின் மூன்றாவது இடத்தை நம் நாடு பிடித்ததற்கு நமது நாட்டின் ஆங்கிலக் கல்வி முறையும் மிக அதிக அளவில் கல்லூரியில் மாணவர்கள் சேர்ந்து பட்டம் பெறுவதும்தான் காரணமாயிருந்தது.
எனினும், நமது மக்கள்தொகையைக் கணக்கிலெடுத்தால், இந்தியாவின் இளைஞர்களில் 10 சதவிகிதமே உயர் கல்வியில் சேர்ந்து பட்டம் பெறுகிறார்கள். ஆனால், சீனாவில் 15 சதவிகிதத்தினரும் பல மேலைநாடுகளில் 60 சதவிகித இளைஞர்களும் உயர் கல்வி பயில்கிறார்கள். உயர் கல்வி பெறும் மாணவர்களின் எண்ணிக்கை ஒருபுறம், அவற்றின் தரம் மற்றொருபுறம் என்ற உண்மையை நமது அரசு உணர்ந்து அதற்கான நடவடிக்கைகளைத் தொடங்க வேண்டும் என்பது விஷயம் தெரிந்தவர்களின் அறிவுரை.
நமது கல்லூரிகளும் பல்கலைக்கழகங்களும் சரியான நிதி வசதி இல்லாமலும் நிறைய உள்பூசல்களுடன் சரியாக நிர்வகிக்கப்படாத நிலைமையிலும் இயங்குகின்றன என்பது ஒரு கசப்பான உண்மை. சரியான நிதி வசதியின்மையால் கல்லூரியின் நூல் நிலையங்கள், ஆராய்ச்சிக் கூடங்கள், வகுப்பறைகள்வரை தரமில்லாமல் உள்ளன. நிறைய ஆசிரியர் பணியிடங்கள் காலியாகவுள்ளன; தாற்காலிக ஆசிரியர்களை நியமனம் செய்து நமது கல்லூரிகள் இயங்குகின்றன.
பல்கலைக் கழகத் துணைவேந்தர்களின் நியமனம் அரசியல் அடிப்படையில் நடக்கின்றது. மாணவர்கள் மத்தியில் ராகிங் தொடங்கி அடிதடி சண்டைகள் வரை போகிறது; ஆசிரியர்கள் தொழிற்சங்கங்கள் ஆரம்பிப்பதால் கல்வி கற்கும் சூழ்நிலையை இந்தியப் பல்கலைக்கழகங்களும் கல்லூரிகளும் தொலைத்துவிட்டன.
இதற்கு முடிவுதான் என்ன எனும் விவாதம் உயர்மட்ட அளவில் நடந்தது. அரசின் நிதிநிலை ஆதாரத்துடன் கல்லூரிகள் நடத்தி எல்லா மாணவர்களுக்கும் உயர் கல்வி வழங்கிட முடியாது என்பதால் தனியார் கல்லூரிகளும் பல்கலைக்கழகங்களும் உருவாவது அவசியம் என முடிவெடுக்கப்பட்டது.
இந்த முடிவின்படி நாடெங்கிலும் பல தனியார் பல்கலைக்கழகங்களும் கல்லூரிகளும் உருவாயின. ஆனால், தனியார் உயர் கல்வி நிறுவனங்கள் லாபநோக்கில் நடக்கும் வியாபாரம்போல ஆகிவிட்டன. இது எதிர்பார்த்திருக்க வேண்டிய ஒன்று.
நம் நாட்டில் அரசுக் கல்லூரிகள், விடுதிகள் எல்லாமே அரசின் உதவித்தொகையுடன் நடந்து வந்தன. எனவே கட்டணங்கள் அதிகமாக இல்லை. இதனாலேயே அதில் பயிலும் மாணவர்கள், பெற்றோர் ஆகியோருக்கு கல்வியில் பெரிய அக்கறை உருவாகவில்லை.
தனியார் கல்லூரிகளில் அதிகக் கட்டணம் செலுத்தி கல்வி கற்பதால் மாணவர்கள், பெற்றோர், ஆசிரியர்கள் ஆகிய எல்லோருமே மிகுந்த அக்கறை காட்டுகின்றனர். எல்லா தனியார் உயர் கல்வி நிறுவனங்களும் லாபநோக்கில் நடந்தாலும் மாணவர்கள் சேர்க்கைக்கு அவர்களுக்குள் கடும் போட்டிகள் உருவாகி மிகச் சிறந்த கல்லூரிகளுக்கு அதிகப் பணம் செலுத்தி மாணவர்கள் சேர்வது வரவேற்கத்தக்க ஓர் அம்சமே என்பது கல்வியாளர்களின் கருத்து. இதை அப்படியே நிரூபிப்பது அமெரிக்காவின் பல தனியார் பல்கலைக் கழகங்களே!
இதற்கு நம் மாநிலத்திலேயே ஓர் உதாரணத்தைச் சொல்ல முடியும். சென்னை போரூர் ராமச்சந்திரா மருத்துவப் பல்கலைக்கழகத்தில் எம்.பி.பி.எஸ். மற்றும் எம்.டி., எம்.எஸ். பட்டப்படிப்பில் சேர அகில இந்தியாவிலும் இருந்து மாணவர்கள் போட்டிபோட்டுக் கொண்டு வருகிறார்கள். இதில் மிக அதிக அளவில் அமெரிக்காவில் இருந்தே டாலர் பணத்தைச் செலுத்தி இந்தக் கல்லூரியில் சேருகிறார்கள். அவர்களில் சில பெற்றோரிடம் பேசும்போது, ""இந்த மருத்துவக் கல்லூரியில் கல்வியின் தரம் நன்றாக இருப்பதால் எங்கள் குழந்தைகளை இங்கே சேர்க்கிறோம்'' என்று மகிழ்ச்சியுடன் கூறுகிறார்கள்.
அமெரிக்காவில் உள்ள 3,500 பல்கலைக்கழகங்களில் பாதி தனியாருக்குச் சொந்தமானவையே. அரசின் பல்கலைக்கழகங்களைவிடவும் சிறந்த கல்வியை வழங்கும் எம்.ஐ.டி., பாஸ்டன் பல்கலைக்கழகங்கள் தனியார் பல்கலைக்கழகங்களே! இதுபோன்ற தனியார் பல்கலைக்கழகங்களிலிருந்துதான் நிறைய புதிய கண்டுபிடிப்புகள் உருவாகி அமெரிக்கப் பொருளாதாரத்தைத் தொடர்ந்து முன்னிலையில் வைத்துள்ளன. உயர் கல்வியில் பட்டப்படிப்பும் ஆராய்ச்சிகளும் கண்டிப்பாக இணைந்து செயல்படும் நிலை அங்கே உருவாகிவிட்டது. ஆராய்ச்சி அமைப்பு இல்லாத உயர் கல்வி நிலையங்களில் அதிக மாணவர்கள் சேர்வதில்லை. கல்லூரியின் விரிவுரையாளர்களும், பேராசிரியர்களும் ஆராய்ச்சியில் ஈடுபட்டு தங்கள் தகுதியைத் தொடர்ந்து நிரூபித்தால்தான் வேலையில் தொடர முடியும்.
அமெரிக்காவில் ஆராய்ச்சியில் ஈடுபட்டு புதிய விஷயத்தை ஆராய்ச்சிக் கட்டுரையாக வெளியிடாத கல்லூரி ஆசிரியருக்கு சம்பள உயர்வு கிடையாது. நிறைய பல்கலைக்கழகங்களில், தொடர்ந்து ஐந்து ஆண்டுகள் ஆராய்ச்சிக் கட்டுரை வெளியிடாத ஆசிரியர் பதவி நீக்கம் செய்யப்படுகிறார்.
இதுபோன்ற நடைமுறைகளை சீனா போன்ற நாடுகள் பின்பற்றி தங்கள் நாட்டிலும் உயர் கல்வி மற்றும் ஆராய்ச்சி கலாசாரத்தை வளர்த்துள்ளன.
சமீபத்தில் "இந்தியா கேட்ஸ்' எனப்படும் வியாபாரம் மற்றும் பணிகளில் பொது ஒப்பந்தம் ஒன்றில், பல நாடுகளுடன் சேர்ந்து கல்வியில் வெளிநாட்டின் பல்கலைக்கழகங்கள் நம் நாட்டில் கல்வி நிலையங்களைத் தொடங்கலாம் என ஒப்புக் கொள்ளப்பட்டுள்ளது. அதன் அடிப்படையில் வெளிநாட்டின் தனியார் பல்கலைக்கழகங்கள் நம் நாட்டில் கல்லூரிகளைத் தொடங்கலாம். இதைப் பலர் வரவேற்றுள்ளனர்.
தரமான கல்வியை இவர்கள் வழங்கும் வகையில் இந்தத் தனியார் கல்வி நிலையங்களை அரசு கண்காணிக்க வேண்டும். தங்களுக்கு வேண்டியவர்களைத் தேர்ந்தெடுக்காமல், திறமையான கல்வியாளர்கள் மற்றும் நிர்வாகிகளை உள்ளடக்கி தனியார் கல்வி நிலையங்களுக்கு அனுமதி வழங்குவது முதல் அவற்றைக் கண்காணிக்கும் வேலையையும் செய்ய வேண்டும்.
இன்றைய சூழ்நிலையில் தனியார் கல்வி நிலையங்கள் அதிகம் உருவாகிய பின்னரும் கல்வியின் தரம் உயரவில்லை. உதாரணமாக, தமிழ்நாட்டில் அரசு மற்றும் அரசு நிதியுதவியுடன் நடத்தப்படும் பொறியியல் கல்லூரிகள் ஒன்பது. தனியார் சுயநிதிப் பொறியியல் கல்லூரிகள் 473. அண்ணா பல்கலைக்கழகத்தின்கீழ் இயங்கும் 18 கல்லூரிகளையும் சேர்த்தால் மொத்தம் 491.
இதில் 2010-11-ம் ஆண்டில் படித்த மாணவர்கள் 1,62,231 பேர். இவர்களிடம் நடத்தப்பட்ட ஓர் ஆய்வில் 16 சதவிகிதம் மாணவர்கள்தான் கல்வியில் சிறந்து விளங்கினார்கள். என்ஜினீயர்களாகப் பட்டம் பெற்று வேலையில் சேரும் பலருக்குச் சரியான வேலைத்திறன் இல்லாதது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இதற்கான முக்கிய காரணம், நிறைய சுயநிதிக் கல்லூரிகளில் சரியான ஆசிரியர்கள் கிடையாது. பொறியியல் கல்லூரியில் பி.இ. பட்டம் பெற்ற ஒருவர் உடனே அதுபோன்ற கல்லூரியில் ரூ.5,000 சம்பளத்தில் விரிவுரையாளராக சேர்த்துக் கொள்ளப்படுகிறார். எனவே இந்தியாவில் லாப நோக்கில் நடைபெறும் சுயநிதிக் கல்லூரிகளைக் கண்காணித்து வழிநடத்திச் செல்லும் அமைப்பு உருவாக வேண்டும்.
÷சரியான நடவடிக்கைகள் மூலம் உயர் கல்வியின் தரம் உயர்ந்து, ஆராய்ச்சிகளும் பெருகி அதன் முழுப்பலனும் இந்தியப் பொருளாதார வளர்ச்சிக்கு உதவ வேண்டும் என்பது இன்றைய காலகட்டத்தின் மிக அவசரமான அவசியம்!

தமிழ்ப் பாடநூலில் தமிழுக்குத் தட்டுப்பாடா?




நீதித்துறையும் கல்வித்துறையும் மிகமிக விழிப்புணர்வோடு செயல்பட வேண்டிய துறைகளாகும். எந்த நிலையிலும் குற்றம் செய்யாதவனுக்கு நீதிமன்றம் தண்டனை வழங்கிவிடக் கூடாது. அதேபோல, கல்வித்துறையின் தவறான முடிவுகளும் பிழையானவைகளும் கவனிப்பற்ற செயல்பாடுகளும் பள்ளி வளாகத்திற்குள்ளும் வகுப்பறைச் சுவர்களுக்குள்ளும் சென்றுவிடக் கூடாது.
 இதனால் சமூகமும் எதிர்காலத் தலைமுறையும் பாதிக்கப்படும். தமிழ்நாட்டுப் பள்ளிக் கல்வித்துறை, பிரச்னைகள் எதுவுமில்லாமல் "அப்பாடா' என்று உட்கார்ந்து மூச்சுவிட்டுப் பல நாள்களாகிவிட்டன. பள்ளிக் கட்டண வழக்கு, ஆசிரியர் கொலை, மாணவர் தற்கொலை, பள்ளிப் பேருந்துப் பிரச்னை என்று மூச்சுமுட்டுகிறவரை பிரச்னைகள் மலையாகக் குவிந்துவிட்டன.
 இவையனைத்தும் அவ்வப்போது நிகழும் சமூக நிகழ்வுகள் என்றாலும், இவற்றைக் கட்டுப்படுத்துவதும் நெறிப்படுத்துவதும் பொதுமக்களுக்கு விளக்கம் தர வேண்டியதும் கல்வித்துறையின் கடமை என்பதை யாரும் மறுக்க முடியாது.
 கல்வித்துறை, வல்லுநர்களைக்கொண்டு நன்கு திட்டமிட்டுச் செயல்படுத்தும் நடைமுறைகளுள் பாடநூல் தயாரிப்பு என்பது மிகவும் முக்கியமானதாகும். பத்துப்பேர் தயாரிக்கும் ஒரு பாடநூல், பல கோடி மாணவர்கள் கல்வி பயில அடிப்படைக் கருவியாக அமைகிறது. அதனால் அதன் வடிவமைப்பு, உள்ளடக்கம் ஆகியவற்றில் கல்வித்துறை மிகுந்த அக்கறை எடுத்துக்கொள்ள வேண்டும்.
 தமிழகத்துப் பள்ளிகளில் பயன்படுத்தப்படும் சமச்சீர்க்கல்விப் பாடநூல்களைப் பார்த்தால் நேர்த்தி தெரியவில்லை; நெருடலைத்தான் உணரமுடிகிறது. கிட்டத்தட்ட எல்லாப் பாடநூல்களிலும் பக்கத்துக்குப் பக்கம் இடம்பெற்றுள்ள எழுத்துப்பிழை, கருத்துப் பிழைகளைச் சுட்டிக்காட்டிக் களைத்துப் போய்விட்டது. இன்னும் பாடநூல்களில் உள்ள பிழைகள் முற்றிலுமாகக் களையப்படவில்லை.
 ஒன்று முதல் பத்துவரை இப்போதுள்ள பாடநூல்களுள் தமிழ்ப்பாட நூல்களில்தாம் ஏராளமான பிழைகள் காணப்படுகின்றன. புதிய அரசு பொறுப்பேற்றதும் தமிழ்ப்பாட நூல்களில் இருபத்தேழு பகுதிகள் நீக்கப்பட வேண்டியவை என அறிவித்தது. அதேசமயம் பாடநூல்களில் உள்ள கருத்துப் பிழை, இலக்கணப் பிழை ஆகியவற்றைப் பலரும் சுட்டிக்காட்டினர்.
 அதன்பின்னர், மாவட்டந்தோறும் ஆசிரியர்கள் கூடி, நூல்களைப் படித்து ஆய்வு செய்து, பிழைகளைத் தொகுத்தனர். அவ்வாறு தொகுத்தவகையில், தமிழ்ப்பாட நூல்களில் மட்டும் நூற்றுஎழுபத்தேழு பிழைதிருத்தம், சேர்க்கை, நீக்கங்களை மேற்கொள்ளுமாறு கல்வித்துறை பள்ளிகளுக்கு உத்தரவிட்டது.
 அதைத் தொடர்ந்து திருத்திய பதிப்புகள் வெளிவருவதற்கு முன்பே, ஒன்று முதல் எட்டாம் வகுப்புவரை முப்பருவத் திட்ட அடிப்படையில் ஒவ்வொரு வகுப்புக்கும் மும்மூன்று இயல்களை மட்டும் நூலாக்கிக் கல்வித்துறை மாணவர்களுக்கு வழங்கியுள்ளது.
 பாடநூல்கள் தயாரிக்கத் தொடங்கிய நிலையிலேயே, ஒரு வகுப்பின் பாடநூலாசிரியர் குழுவுக்கும் பிற குழுவுக்குமிடையே பாடவைப்பு நிலை, பாட வளர்ச்சி தொடர்பான பொதுச்சிந்தனை இல்லாமற் போய்விட்டது. இதன் காரணமாக வகுப்புகளுக்கிடையே பாடப்பகுதிகள் திரும்பத் திரும்ப இடம்பெறும் நிலை ஏற்பட்டுள்ளது. பாடப்பொருளில் எவ்வித மாற்றுக் கருத்துக்கும் இடமில்லை.
 படைப்பாளர்கள் மீத்திறன் உடையவர்கள், அறிஞர்கள், சமூகநலம் நாடுவோர் என்பதில் ஐயமில்லை. ஆனால், பாட நூல் குழுவினர் ஒருவருடைய படைப்பையே மீண்டும் மீண்டும் இடம்பெறச் செய்து, புதியவர்களையும் புதிய செய்திகளையும் மாணவர்கள் அறிய வாய்ப்பில்லாமல் செய்துவிட்டதை அனைவராலும் உணரமுடிகிறது. தமிழ்மொழி வற்றாத களஞ்சியமாக இருக்க, பாடநூல்களின் கருத்தமைவு செயற்கைப் பற்றாக்குறையை - பொய்யான இலக்கியத் தட்டுப்பாட்டினை - வெளிச்சம்போட்டுக் காட்டுகிறது.
 பத்து வகுப்புகளிலும் செய்யுட்பகுதியில் பாரதியார், பாரதிதாசன், கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை, நாமக்கல் கவிஞர் ராமலிங்கனார் ஆகியோரின் கவிதைகள் இடம்பெற்றுள்ளன. ஐந்தாம் வகுப்புப் பாடநூலில் பாரதியாரின் இரண்டு பாடல்கள் இரண்டு இடங்களில் இடம் பெற்றுள்ளன. அதே பாடநூலில் கவிமணியின் இரண்டு பாடல்கள் இரண்டு இடங்களில் இடம்பெற்றுள்ளன. ஒரே பாடப்புத்தகத்தில் இரு கவிஞர்களின் நான்கு பாடல்கள் இடம்பெறச் செய்ய வேண்டியதன் தேவையென்னவென்று தெரியவில்லை.
 திருக்குறளில் இன்பத்துப்பால் தவிர, நூற்றெட்டு அதிகாரங்கள் எஞ்சியிருக்க, ஒழுக்கமுடைமை, வாய்மை, சான்றாண்மை, காலமறிதல், கேள்வி ஆகிய ஐந்து அதிகாரக் குறட்பாக்கள்மட்டும் நான்கு, ஐந்து, ஏழு, ஒன்பது, பத்தாம் வகுப்புகளில் சுற்றிச் சுற்றி வலம் வந்துகொண்டேயுள்ளன. பிற அதிகாரங்களை அறிமுகம்செய்ய குழுவினர் ஏன் தயங்குகின்றனர் என்பது புரியாத புதிராக உள்ளது.
 சமயக் குரவர்கள் நால்வர், ஆழ்வார்கள் பன்னிருவர், சிவப்பிரகாசர், உமறுப்புலவர், குணங்குடி மஸ்தான், காசிம் புலவர், செய்குத்தம்பி பாவலர், எச்.ஏ.கிருட்டினப் பிள்ளை எனப் பாவலர்களும் அற, சமய நூல்களும் பலவாக இருக்க, குமரகுருபரர் ஒருவரின் பாடல் மட்டும் ஐந்து, ஏழு, எட்டு என மூன்று வகுப்புகளில் அடுத்தடுத்து இடம் பெற்றுள்ளது. வள்ளலாரைப் பற்றிய பாடப்பகுதியும் அவரது பாடல்களும் ஆறு, எட்டு, பத்து ஆகிய மூன்று வகுப்புகளிலும் இடம் பெற்றள்ளது. இந்நிலை ஏன் ஏற்பட்டது என்பதை யாராலும் உணர முடியவில்லை.
 நாட்டு வளம், மழை வளம், வேளாண்மை, வீரம், இயற்கை ஆகியவை பற்றிய நாட்டுப்புறப் பாடல்கள் கணக்கின்றி இருக்க, தாலாட்டுப் பாடல் ஒன்றே நான்கு, ஏழு ஆகிய இரண்டு வகுப்புகளில் இடம் பெற்றுள்ளது.
 கதைபொதி பாடல்கள் என்னும் தொடர்நிலைச் செய்யுட்பகுதி வகுப்பின் நிலைக்கேற்ப பாடநூல்களில் இடம்பெறுவது வழக்கம். செய்யுட்களைப் படித்து, அவற்றின் தொடர்பொருளை அறிந்து, இலக்கியத்தைச் சுவைக்க வழிகோலுவது தொடர்நிலைச் செய்யுட்பகுதி. அத்தகைய இனிய பகுதியை ஐந்தாம் வகுப்பில் அறிமுகம் செய்துவிட்டுத் தொடர்ந்தாற்போல ஆறு, ஏழு வகுப்புகளில் இல்லாமற் செய்திருப்பது எத்தகைய அணுகுமுறை என்பது அவர்களுக்கே வெளிச்சம்.
 செய்யுட்பகுதி இவ்வாறிருக்க, உரைநடைப் பகுதியிலும் இம்மாதிரியான குறைபாடுகள் காணப்படுகின்றன. ஆறாம் வகுப்பில் உள்ள "நாடும் நகரமும்' என்னும் பாடமும் ஏழாம் வகுப்பில் உள்ள "ஊரும் பேரும்' என்னும் பாடமும் ஒரே மாதிரியான பாடக் கருத்துடையவை. இவ்விரண்டும் ஊர்ப்பெயர்கள் எவ்வாறு ஏற்பட்டன என்பதை விளக்குகின்றன. இவை அடுத்தடுத்து இரு வகுப்புகளில் இடம்பெற்றுள்ளதை என்னவென்று கூறுவது? அதேபோன்று கோவூர்கிழார் பற்றிய பாடம் ஐந்து, ஏழு என இரண்டு வகுப்புகளில் பாடமாக அமைந்துள்ளது.
 செம்மொழியின் தகுதிப்பாடுகள் பற்றிய விளக்கம் ஏழாம் வகுப்பிலும் பத்தாம் வகுப்பிலும் பாடமாக வைக்கப்பட்டுள்ளது. தெனாலிராமன் கதை ஆறாம் வகுப்பில் மட்டுமே இரண்டு இடங்களில் அமைந்துள்ளது. இராம்கி என்பவரது சிறுகதை ஏழாம் வகுப்பில் இரண்டு இடங்களில் பாடமாக உள்ளது. தமிழில் வேறு எதுவுமே இல்லை என்பதுபோல பாட வைப்பு நிலை அமைந்துள்ளது.
 மதுரையைச் சிறப்பிக்கும் உரைநடைப்பகுதி ஐந்து, ஏழு என இரண்டு வகுப்புகளிலும் இடம் பெற்றுள்ளது. அதேபோன்று அகராதிக் கலை, கலைக்களஞ்சியம் என்னும் ஒருதன்மைத்தாய் அமைந்த பாடப்பகுதி நான்கு, ஐந்து, எட்டு என மூன்று வகுப்புகளிலும் உள்ளன. நாடகக்லை, நாடகக் கலைஞர்கள் பற்றிய பாடப்பகுதி ஏழு, எட்டு வகுப்புகளில் இடம்பெற்றள்ளதைக் காணலாம். மேலும் பீர்பால் கதைகளும் இலட்சுமி எழுதிய கதைகளும் இரண்டிரண்டு வகுப்புகளில் இடம்பெற்றுள்ளன.
 பாடநூல்களை மேலும் ஆழமாகப் பார்த்தால், குண்டுச் சட்டிக்குள் குதிரை ஓட்டுவது போல, ஒரு சில செய்திகளையே பாடநூல்குழுவினர் திரும்பத்திரும்ப பாடமாக அமைத்துள்ளது தெளிவாகத் தெரியும். நன்னூல் ஆசிரியர் பவணந்தி முனிவர், ""கூறியது கூறல்'' என்பது நூலில் இடம்பெறக் கூடாத குற்றமெனக் கூறுகிறார். அந்த இலக்கண விதிமுறைகளைச் சிறிதும் கருத்தில் கொள்ளாது மனம்போன போக்கில் பாடநூல்கள் அமைக்கப்பட்டுள்ளன.
 தமிழறிஞர்களின் நூல்களிலிருந்து அவர்களது கட்டுரைகளைப் பாடமாக எடுத்தாள்வது பள்ளி, கல்லூரி, பல்கலைக் கழகங்களில் இன்றும் நடைமுறையில் உள்ளது. சமச்சீர்க்கல்வி பாடநூல்களில் தமிழறிஞர்களின் கட்டுரைகள் எதுவும் பாடமாக இல்லை. அத்தகைய கட்டுரைகளால் மாணவர்கள் மறைமலையடிகள், திரு.வி.க. மு.வ. போன்றவர்களின் தமிழ்நடையையும் கருத்துகளையும் அறிந்து கொள்ள முடியும். மொழிப் பயிற்சியில் கொடுத்திருப்பது யானைப்பசிக்குப் போடப்பட்ட சோளப்பொரிபோல உள்ளது.
 நான்காம் வகுப்பில் இடம்பெற்றுள்ள "சங்கப்பாடல் வர்ணனை' வகுப்பின் தரத்திற்கு ஏற்புடையதன்று. அதேசமயம் ஒன்பது, பத்தாம் வகுப்புகளில் இடம்பெற்றுள்ள, ஆசிரியர் குழுவினர் எழுதிய கட்டுரைகள் கருத்துச்செறிவின்றி வறட்சியாகத் தோன்றுகின்றன.
 அதியமானைப் பற்றி ஒளவையார் பாடிய புறப்பாடலில் காணப்படும் உவமை, பாடநூல்கள் எப்படி இருக்க வேண்டும் என்பதைக் காட்டுவதாக உள்ளது.
 நாளொன்றுக்கு எட்டுத்தேர்களைச் செய்யும் ஒரு தச்சன், ஒரு திங்கள் அரிதின் முயன்று, ஒரு தேருக்குரிய ஒரு சக்கரத்தை மட்டும் செய்வானாகில், அச்சக்கரம் எத்தகைய வனப்பும் உறுதியும் உடையதாக இருக்குமோ, அதுபோல பாடநூல்கள் சிறப்புடையதாக அமைய வேண்டும்.
 பலகோடி மாணவர்கள் பயன்படுத்தும் பாட நூலின் உள்ளடக்கம் பிழையற்றதாய், கருத்துவளமுடையதாய், வளர்ச்சிநிலையில் அமைந்ததாய், தமிழின் அனைத்துவகை இலக்கியங்களையும் அறிந்து கொள்ள இடந்தருவதாய் அமைவது அவசியம். என்ன வளம் இல்லை தமிழில், ஏன் இந்தச் செயற்கைத் தட்டுப்பாடு? பாடநூல்களில் பள்ளங்கள் உண்டாக யார் காரணம்? இது அனைவரும் சிந்திக்க வேண்டிய ஒன்று.

விறகு சேகரிக்காத மாணவியருக்கு விடுதியில் "டிபன் கட்'


வேலூர்: 
அடுப்பு எரிக்க விறகு பொறுக்கி வராததால், 40 மாணவியரை, பட்டினி போட்ட சம்பவம், காட்பாடி அருகே நடந்தது. இதனால், ஐந்து மாணவியர் மயக்கம் அடைந்தனர்.

வேலூர் அடுத்த காட்பாடி செங்குட்டை அக்ரஹாரத்தில், அரசு ஆதி திராவிடர் பெண்கள் விடுதி உள்ளது. இங்கு தங்கியுள்ள, 40 மாணவியர், காட்பாடி அரசு பெண்கள் மேல் நிலை பள்ளியில் படித்து வருகின்றனர். இவர்களுக்கு, கல்வி, சாப்பாடு செலவு அனைத்தையும் அரசு வழங்கி வருகிறது. நேற்று காலை, டிபன் செய்யவில்லை. "ஏன் டிபன் செய்யவில்லை' என,மாணவியர் கேட்ட போது, "அடுப்பு எரிக்க விறகு இல்லை. அதனால் டிபன் செய்யவில்லை. நீங்கள் விறகு பொறுக்கி கொண்டு வந்தால் தான், சமையல் செய்ய முடியும்' என, தற்காலிக சமையல் காரர் சரஸ்வதி கூறினார்.
பட்டினி: இதை கேட்ட மாணவியர், செய்வதறியாமல் திகைத்து நின்றனர். ஐந்து மாணவியர், பசியைப் பொறுத்தபடி பள்ளி சென்றனர். மற்ற மாணவியர், விடுதியில் தங்கிவிட்டனர். விடுதியில் தங்கியவர்களில், ஐந்து மாணவியர் மயக்கம் போட்டு விழுந்தனர். இதைப் பார்த்த மற்ற மாணவியர், விடுதியை விட்டு வெளியே வந்து, அங்கிருந்தவர்களிடம் தகவல் தெரிவித்தனர். சமூக சேவகர் சேகர் பாபு, விடுதி வார்டன், ஜெயந்திக்கு, போன் மூலம் தகவல் தெரிவித்தார். "டிபன் போடாமல் மாணவியரை சித்திர வதை செய்வதா?' எனக் கேட்டனர். வெளியில் இருந்து டிபன் வாங்கித் தர ஏற்பாடு செய்வதாகக் கூறிய ஜெயந்தி, மாணவியரை உள்ளே அழைத்துச் சென்றார். சிறிது நேரத்தில் விறகு கொண்டு வரப்பட்டு, மாணவியருக்கு மதிய உணவு வழங்கப்பட்டது. மாணவியரை பட்டினி போட்டது குறித்து, அப்பகுதியினர், ஆதி திராவிடர் நலத்துறை அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்தனர்.
விசாரணை: மாவட்ட ஆதி திராவிடர் நல அதிகாரிகள் மாணவியரிடம் விசாரணை நடத்தினர். தினம் அடுப்பு எரிக்க விறகு பொறுக்கி கொண்டு வரும்படி, சமையல்காரர்,வார்டன் ஆகியோர் கூறுவதாக, மாணவியர் குற்றம் சாட்டினர். வார்டன் ஜெயந்தி கூறுகையில், ""ஒவ்வொரு வாரமும் விடுதிக்கு தேவைப்படும் விறகு, ஞாயிற்றுக்கிழமை வந்து விடும். ஆனால், விறகு மண்டிகாரர் விபத்தில் சிக்கிக் கொண்டதால், விறகு வந்து சேரவில்லை. இப்போது, இந்த பிரச்னை சரி செய்யப்பட்டு விட்டது,'' என்றார்.

Wednesday, August 1, 2012

அரசு பணம் ரூ.81 லட்சம் மோசடி: 75 ஹெச்.எம்கள் சிக்குகின்றனர் கல்வி உதவிதொகை சுருட்டியது அம்பலம்

நாமக்கல்: 


ஆதிதிராவிடர் நலத்துறையில் மாணவர்களுக்கு வழங்குவதாக கூறி, ரூ. 81 லட்சத்தை கல்வித்துறை அலுவலர்கள், 75 பள்ளிகளை சேர்ந்த தலைமை ஆசிரியர்கள் கூட்டணி சேர்ந்து மோசடி செய்துள்ளது விசாரணையில் அம்பலமாகியுள்ளது. 

ஆதிதிராவிடர் நலத்துறை மூலம் ஆதிதிராவிட மாணவ&மாணவிகள் பயன் அடையும் வகையில் கல்வி உதவித்தொகைகள் வழங்கப்படுகிறது. நாமக்கல் மாவட்டத்தில் கடந்த 2010, 2011ம் ஆண்டுகளில் கல்லூரி மாணவ&மாணவியருக்கான கல்வி உதவித் தொகையை வழங்கியதில் ஒரு கோடிக்கு ரூபாய்க்கு முறைகேடு நடந்தது சில மாதங்களுக்கு முன்பு கண்டுபிடிக்கப்பட்டது. 
இந்நிலையில் ஆதிதிராவிடர் நலத்துறையில் நடந்துள்ள மற்றொரு மோசடி தற்போது அம்பலமாகி உள்ளது. 

நாமக்கல் மாவட்ட கலெக்டர் குமரகுருபரனுக்கு ஒரு கடிதம் வந்தது. அதில், ஆதிதிராவிடர் நலத்துறை மூலம் அரசு பள்ளிகளில் படிக்கும் சுகாதாரமற்ற தொழில் புரியும் பெற்றோர்களின் குழந்தைகளுக்கு வழங்கப்படும் கல்விஉதவித் தொகையில் மிகப்பெரிய மோசடி நடந்துள்ளதாக கூறப்பட்டிருந்தது. இதுகுறித்து விசாரிக்கும்படி மாவட்ட தொடக்க கல்வி அலுவலருக்கு கலெக்டர் உத்தரவிட்டார். விசாரணையில் அதிர்ச்சிகரமான பல தகவல்கள் வெளிவந்துள்ளன.

கல்வி உதவித்தொகையை பள்ளிகளுக்கு வழங்கியதில் பள்ளி தலைமை ஆசிரியர்களுடன் கூட்டு சேர்ந்து ஆதிதிராவிடர் நலத்துறை அலுவலர்கள் மோசடி செய்துள்ளனர். பள்ளிகளில் படிக்கும் அனைத்து குழந்தைகளின் பெயரையும் சுகாதாரமற்ற தொழில்புரியும் பெற்றோரின் குழந்தைகள் என துவக்க மற்றும் நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் பட்டியல் தயாரித்து அதை ஆதிதிராவிடர் நலத்துறை அலுவலகத்தில் கொடுத்து பணம் பெற்றுள்ளனர். இந்த பணத்தை இரு தரப்பினரும் பங்குபோட்டுள்ளனர். குழந்தைகளுக்கு வழங்கியதாக மோசடியாக பட்டியல் தயார் செய்து ஏ.இ.ஓ. அலுவலகங்களுக்கு தலைமை ஆசிரியர்கள் அனுப்பி வைத்துள்ளனர்.
இந்த மோசடிக்கு மாவட்ட ஆதிதிராவிடர் நல அலுவலர் மற்றும் அங்கு பணிபுரியும் ஊழியர்கள் துணைபோய் உள்ளனர். 

இதுகுறித்து நாமக்கல் கலெக்டர் குமரகுருபரன் கூறியதாவது:
ஆதிதிராவிடர் நலத்துறையில் நடந்துள்ள இந்த மோசடி அதிர்ச்சி அளிக்கிறது. அரசு பணத்தை அரசுத்துறை அதிகாரிகளே கூட்டணி சேர்ந்து கையாடல் செய்துள்ளனர். கடந்த 2010, 2011 ஆகிய இரு ஆண்டுகளுக்கான கல்வி உதவித்தொகை கேட்டு பள்ளி தலைமை ஆசிரியர்கள் கடந்த நவம்பர் மாதம் ஆதிதிராவிடர்நலத்துறைக்கு புரபோசல் அனுப்பி உள்ளனர். கடந்த ஜனவரி மாதம் தான் இதற்கான பணம் அரசிடம் இருந்து வந்துள்ளது. அதையடுத்து ஆதிதிராவிடர் நலத்துறை அதிகாரிகள் பள்ளி தலைமை ஆசிரியர்களின் பெயருக்கு செக் கொடுத்துள்ளனர். 75 பள்ளிகளை சேர்ந்த தலைமை ஆசிரியர்கள் சுகாதாரமற்ற தொழில்புரியும் குழந்தைகளுக்கான கல்வி உதவித்தொகை கேட்டு விண்ணப்பித்துள்ளனர். மொத்தம் ரூ 81 லட்சத்துக்கு செக் போடப்பட்டுள்ளது. 

இந்த பணம் பள்ளி குழந்தைகளை சென்றடையவில்லை என்பது தற்போது நடத்திய விசாரணையில் தெரியவந்துள்ளது. 

ஒரு பள்ளியில் படிக்கும் அனைத்து குழந்தைகளையும் சுகாதாரமற்ற தொழில்புரியும் பெற்றோரின் பட்டியலில் சேர்த்து பள்ளி தலைமை ஆசிரியர்கள் ஏமாற்றியுள்ளனர். இதுகுறித்து விரிவான விசாரணை நடத்த காவல்துறைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
இவ்வாறு கலெக்டர் குமரகுருபரன் கூறினார்.

முதல்கட்டமாக 3 பள்ளி ஆசிரியர்கள் மீது போலீசார் நடவடிக்கை எடுத்துள்ளனர். காரைக்குறிச்சி ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி ஆசிரியர் சரவணன் கைது செய்யப்பட்டுள்ளார். மோகனூர் பேட்டபாளையம் ஆர்.சி பள்ளி தலைமை ஆசிரியர் சார்லஸ், கபிலர்மலை யூனியன் பள்ளபாளயம் துவக்கப்பள்ளி தலைமை ஆசிரியர் பூபதி ஆகியேரை போலீசார் தேடி வருகின்றனர்.