பெரு நகரங்களில் பிரபலமான தனியார் பள்ளிகளில் எல்.கே.ஜி. சேர்ப்பதற்கே ரூ.1 லட்சம் வரை நன்கொடை அளிக்க வேண்டியுள்ளது. பல பள்ளிகளில் குழந்தையைச் சேர்ப்பதற்கான விண்ணப்பம் பெற அதிகாலை 3 மணியில் இருந்தே பெற்றோர்கள் காத்திருந்த நிலையும் ஏற்பட்டது.
பிரபலமான பள்ளிகளில் குழந்தைகளைப் பள்ளியில் சேர்க்க 6 மாதங்களுக்கு முன்பே முயற்சிகளைத் தொடங்க வேண்டியுள்ளது. அமைச்சர்கள், பெரிய தொழிலதிபர்கள் என சிபாரிசுப் பட்டியல் நீண்டுகொண்டே செல்கிறது. ஆனால், இன்றளவிலும் 80 சதவிகிதத்துக்கும் மேற்பட்ட மாணவர்களுக்குக் கல்வி அளித்துவரும் அரசுப் பள்ளிகளில் சேர எந்த நெருக்கடியும், கிராக்கியும் இல்லை.
ஏன் இந்த நிலை? அரசுப் பள்ளிகளில் உள்ள பிரச்னைகள் என்ன? போதிய இடவசதி, தகுதியான ஆசிரியர்கள், அரசின் முழு ஆதரவு ஆகியவை இருந்தும் அரசுப் பள்ளிகளின் மதிப்பு ஏன் உயரவில்லை? இங்கே படிப்பவர்களுக்கு ஏன் கல்லூரிகளிலும் வேலைச் சந்தையிலும் அதிக மதிப்பு கிடைப்பதில்லை?
அரசுப் பள்ளிகளில் காணும் பிரச்னைகள் ஏராளமானவை. போதிய ஆசிரியர்கள் பணியில் இல்லை. ஆகவே, மாணவர்களுக்குச் சீரான கல்வியைக் கொடுக்க முடியவில்லை. அரசுப் பள்ளிகளில் பணியில் இருக்கும் ஆசிரியர்களில் பலர் படித்து முடித்து பல வருடங்கள் காத்திருந்து பணிக்கு வருவதால் அவர்கள் இப்போதைய சூழலுக்கு ஏற்ப தங்களைத் தயார் செய்து கொள்வதில்லை என்ற கருத்தும் உள்ளது.
அரசுப் பள்ளிகளில் படிக்கும் குழந்தைகளின் பெற்றோர்கள் பெரும்பாலானோர் கூலி வேலை செய்பவர்கள்தாம். எனவே, அவர்கள் தங்கள் குழந்தைகள் என்ன படிக்கிறார்கள் என்பதைக்கூட அறிந்திருப்பதில்லை.
இந்தக் குழந்தைகளில் பெரும்பாலானோர் முதல் தலைமுறையாகப் பள்ளிக்கு வருபவர்கள். இதையெல்லாம் கருத்தில்கொண்டு அவர்களைக் கையாளும் திறன், அணுகுமுறைகள் அரசுப் பள்ளிகளில் இல்லை என்ற கருத்து மேலோங்கியுள்ளது. ஆயிரக்கணக்கில் மாணவர்கள் பயிலும் பள்ளியில் குறைந்த கழிவறைகள்தான் உள்ளன. அதுவும் போதிய சுகாதாரமாக இருப்பதில்லை. இதுபோன்ற காரணங்களால் பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளைத் தனியார் பள்ளிகளில் சேர்க்கும் நிலைக்குத் தள்ளப்படுகிறார்கள்.
அரசுப் பள்ளி மாணவர்கள் பள்ளி நேரங்களில் வகுப்பறையைவிட்டு வெளியில் சுற்றித் திரிவதைக் காணமுடிகிறது. இதைக் கட்டுப்படுத்தவோ ஒழுங்குபடுத்தவோ அரசுப் பள்ளிகளில் எந்த நடவடிக்கையும் இல்லை.
தனியார் பள்ளிகளில் பயிலும் மாணவர்கள் கட்டுக்குள் இருக்கின்றனர். காலையில் பள்ளிக்குச் செல்லும் குழந்தைகள் பள்ளியிலேயே இருப்பார்கள் என்ற நம்பிக்கையும், பள்ளி முடிந்ததும் பத்திரமாக வீடு திரும்புவார்கள் என்ற நிம்மதியும் பெற்றோர்களுக்கு இருக்கிறது.
அனைத்து அரசுப் பள்ளிகளும் மோசம் என்று சொல்வதற்கில்லை. சிறப்பாகச் செயல்படும் பள்ளிகளும் உள்ளன. பெரிய அளவில் கட்டமைப்பு இல்லாத அரசுப் பள்ளிகளில் பயிலும் மாணவர்களும் மாநில அளவில் படிப்பில் சாதனை படைத்துள்ளனர். அனைத்து வசதிகளும், போதிய ஆசிரியர்களும் உள்ள அரசுப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை குறைவாக இருக்கிறது.
அரசுப் பள்ளிகள் புத்தக அறிவை மட்டுமே வளர்க்கின்றன. சிபிஎஸ்இ பள்ளிகள் புத்தகங்களைத் தாண்டிய அறிவை உறுதி செய்கின்றன. படைப்பாற்றல், ஆங்கிலப் புலமை வளர்கிறது. பிற திறமைகளை வளர்ப்பதில் இப்பள்ளிகள் வெற்றி காணுகின்றன.
தனியார் பள்ளிகள் திறமையானவர்களை உருவாக்கினாலும், சமூகப் பொறுப்புள்ள திறமையான மனிதர்கள் உருவாக வாய்ப்பளிக்கும் களமாக அரசுப் பள்ளிகளே உள்ளன என்பதில் மாற்றுக் கருத்து இல்லை.
அரசு பிற துறைகளைவிட கல்வித்துறைக்கு அதிக நிதி ஒதுக்கியுள்ளது. கல்விக்கான நிதி அதிகரிப்பது நம்பிக்கைதரும் விஷயம்.
இந்த நிதி எவ்வாறு செலவிடப்படுகிறது என்பதைப் பொறுத்தே பலன் கிடைக்கும் என்பதும் மறுப்பதற்கில்லை. அரசுப் பள்ளிகளின் தரத்தை எல்லா வகையிலும் உயர்த்த வேண்டும்.
பெற்றோர்கள் தனியார் பள்ளிகளை நாடுவதை மாற்ற வேண்டும். அப்போதுதான் பள்ளிக் கல்வியில் உள்ள பிரச்னைகளைத் தீர்க்க முடியும்.
கல்விக்கு அதிக நிதியைச் செலவழிக்கும் அரசு அதைச் சிறந்த முறையில் செலவிட்டு சிறந்த, தரமான கல்வியை பெரும்பான்மையான மக்களுக்குக் கிடைக்க வழிவகுக்க வேண்டும்.
No comments:
Post a Comment