ஒரு வழியாகக் கடந்த 17-12-2012 அன்று, இந்திய நாடாளுமன்ற மாநிலங்களவையில் எஸ்.சி./ எஸ்.டி. இனத்தவருக்கு அரசுப் பணி பதவி உயர்வில் இடஒதுக்கீடு வழங்குவதற்கான 117-வது சட்டத்திருத்த மசோதா, அவைக்கு வந்திருந்த உறுப்பினர்களில் மூன்றில் இரண்டு பங்கு பலத்துடன் நிறைவேறியுள்ளது. இனி எப்போது இம்மசோதா மக்களவையில் நிறைவேற்றப்படுமோ தெரியவில்லை.
இது தலித் மக்களின் பிரச்னை மட்டுமல்ல, இந்த தேசத்தின் பிரச்னையும்கூட. இந்து மதத்தின் சனாதன வித்தாக உருவெடுத்துள்ள சாதி எனும் கொடிய வேர், எல்லா இந்தியர்களிடமும் ஊடுருவிப் பாய்ந்து படர்ந்து நின்று நிலை கொண்டுள்ளது. எனவே, பிரமிடு வடிவிலான படிநிலைச் சாதிய சமூக அமைப்பில், உயர்ந்தோன் - தாழ்ந்தோன், மேலானவன் - கீழானவன், ஆதிக்கவாதி - அடிமைச்சாதி என்று மனித வேறுபாடு இயற்கைபோலவே காட்சியளித்து வருகிறது.
ஒடுக்கப்பட்ட சமூக மக்கள் சமூகரீதியாக முன்னேற வேண்டுமெனில், அவர்கள் சுயமாகச் சிந்திக்கும் திறனுடையவர்களாக மாற வேண்டும். அதற்கு அறிவு அவசியம். அந்த அறிவுக்குத் திறவுகோல் கல்வி. எனவே, இம்மக்களின் பிள்ளைகளை பள்ளிக்கு அனுப்ப வேண்டும் என்று திட்டமிட்டுச் செயலாற்றியவர் கோலாப்பூர் சமஸ்தான மன்னர் சாகு மகராஜ். ஒடுக்கப்பட்ட மக்களை உயர்த்துவதற்காக, பல வழிகளில் உதவிய இவர்தான் 1902-இல் முதன்முதலாக இவர்களுக்காக இடஒதுக்கீட்டையும் அமல்படுத்தினார்.
பட்டியல் வகுப்பினர் அல்லது, "ஷெட்யூல்டு காஸ்ட்' என்ற சட்டப்பூர்வமான பெயர்கொண்ட ஒடுக்கப்பட்ட மக்கள் சமூகம் உருவானதற்கு நீண்டதொரு வரலாற்றுப் பின்னணி உண்டு.
இந்தியாவில் மக்கள்தொகை கணக்கெடுப்பு, 1881-இல்தான் முதன்முதலாக நடைபெற்றது. அப்போது சமய ரீதியாகவும், வர்ண ரீதியாகவும் மட்டுமே மக்கள் வகைப்படுத்தப்பட்டார்கள். ஏனெனில் அப்போது இந்துக்கள் மற்றும் இஸ்லாமியர் என்ற பிரிவே மேலோங்கியிருந்தது. பின்னர் தொடர்ந்து 1891, 1901, 1921, 1931 என்று பத்தாண்டுகளுக்கு ஒருமுறை நடைபெற்று வந்த மக்கள்தொகை கணக்கெடுப்புகளில்தான் வகுப்பு ரீதியாகவும் படிப்படியாகக் கணக்கிட்டனர்.
""1919-இல் மாண்டேகு - சேம்ஸ்போர்டு திட்டம்'' கொண்டு வரப்பட்டு, ஆங்கிலேயரின் அரசாட்சியில் இந்தியர்களுக்கும் பங்களிக்கும் உரிமை பரவலாக்கப்பட்டது. பிரிட்டிஷ் அரசாட்சியில் இந்தியர்களுக்கும் பிரதிநிதித்துவம் வழங்கியபோது சமூக ரீதியாக விளிம்பு நிலை மக்களாயிருந்தவர்களின் பிரதிநிதிகளுக்கும் வாய்ப்பு தர வேண்டும் என்ற கோரிக்கை பாபாசாகேப் அம்பேத்கரால் முன் வைக்கப்பட்டு, பிரிட்டிஷாரால் ஏற்றுக் கொள்ளப்பட்டது. அதன்படி, இந்திய ஆட்சிப் பணியில் தீண்டாதாரும் இடம் பெற்றனர்.
அரசாட்சியில் பங்குபெறும் இந்தியப் பிரதிநிதிகளைத் தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் முறையைக் கொண்டு வருவதற்காக பிரிட்டிஷார் ""சவுத்பரோ குழு''வை அமைத்தனர். இக்குழுவின் முன் தீண்டாதாருக்கான கோரிக்கை வைத்து பாபாசாகேப் அம்பேத்கர் வாதாடியதன் பயனாக, அவர்களுக்கும் சில பிரதிநிதித்துவம் வழங்கப்பட்டது.
""லார்டு சர். ஜான் சைமன்'' என்பவர் தலைமையில் ஒரு குழுவை நியமித்தது பிரிட்டிஷ் பேரரசு. இந்தியாவில் தீண்டாத மக்கள் படும் கொடுமை, அவர்களின் இழிநிலை ஆகியவற்றையெல்லாம் தொகுத்து, இதிலிருந்து விடுபடத் தேவையான வழிமுறைகளையும் வகுத்து, அதை சைமன் குழுவில் சமர்ப்பித்து தீண்டாத மக்களின் வாழ்வுரிமைக்காக வாதாடி நின்றார் பாபாசாகேப் அம்பேத்கர். பாபாசாகேபின் கோரிக்கையில் உள்ள நியாயத்தை உணர்ந்த ஆங்கிலேய அரசு, தீண்டாதாரின் உரிமை குறித்து, வட்டமேஜை மாநாட்டில் தீர்மானிக்கப்படும் என்று அறிவித்ததோடு, அந்த மாநாட்டில் தீண்டாதாரின் பிரதிநிதிகளாகப் பங்கேற்க பாபாசாகேப் அம்பேத்கர் மற்றும் தாத்தா ரெட்டைமலை சீனிவாசன் இருவரையும் அழைத்தது.
1930-இல் லண்டனில் நடைபெற்ற முதலாவது வட்டமேஜை மாநாட்டில் தீண்டத்தகாத மக்கள் மட்டுமே வாக்களித்து தங்களது பிரதிநிதிகளைத் தேர்ந்தெடுக்கும் தனித் தொகுதி முறையை நடைமுறைப்படுத்துவது குறித்து ஆவன செய்ய "லோதியன் கமிட்டி' அமைக்கப்பட்டது. இதன் மூலம் இந்தியா முழுவதும் குடியிருந்த தீண்டத்தகாத மக்கள் மாநில வாரியாகக் கண்டறியப்பட்டு, ஒரு பட்டியலுக்குள் கொண்டு வரப்பட்டனர். அதுவே "ஷெட்யூல்டு காஸ்ட்' என்ற இனமாக அடையாளப்படுத்தப்பட்டது. இதுவே 1935-ஆம் ஆண்டு இந்திய அரசாங்க சட்டத்திலும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. அன்றைக்கு சென்னை, பம்பாய், வங்காளம், பஞ்சாப், பிகார், ஒரிசா, அசாம், காஷ்மீர் ஐக்கிய மற்றும் மத்திய என்று 10 மாகாணங்களைக் கொண்டிருந்த இந்திய நாட்டில் 429 சாதியினர் இந்தத் தீண்டத்தகாதார் பட்டியலுக்குள் கொண்டு வரப்பட்டனர்.
இந்தியாவிற்கு 1947-இல் சுதந்திரம் கிடைத்தது. 1950-இல் இந்திய அரசியல் சட்டம் அமலுக்கு வந்தது. ஆனால், அதற்கு 20 ஆண்டுகளுக்கு முன்னரே அதாவது, பிரிட்டிஷ் பேரரசு காலத்திலேயே தலித் மக்களுக்கான இடஒதுக்கீடு 1932-இல் போடப்பட்ட பூனா ஒப்பந்தத்தின் மூலம் அதிகாரப்பூர்வமாக நடைமுறைக்கு வந்துவிட்டது என்பது குறிப்பிடத்தக்க சரித்திரச் செய்தியாகும்.
இந்தியாவில் ஷெட்யூல்டு காஸ்ட் மக்களுக்கு வழங்கப்பட்டு வரும் இடஒதுக்கீடு என்பது மூன்று வகைப்படும்.
அதில் முதலாவது "தேர்தல் ஒதுக்கீடு'. இதில் வேட்பாளர் மட்டுமே எஸ்.சி.யாக இருப்பார். ஆனால், வாக்காளர்கள் அனைத்து சாதியினரும்தான். எனவே, பிற சாதியினரின் வாக்குகளை அதிகமாகப் பெறுபவரே வெற்றியடைய முடியும். எனவே, "தலித் மக்கள் தங்களுக்குரிய உண்மையான பிரதிநிதியைத் தேர்ந்தெடுக்க முடியாமல் போகிறது என்பதை இங்கே குறிப்பிட்டாக வேண்டும்.
இரண்டாவது கல்வி ஒதுக்கீடு. இதன் மூலம் படிப்பறிவு பெற்ற பட்டதாரிகள் ஷெட்யூல்டு சமூகத்திலும் வரத் தொடங்கினர். இந்தக் கல்வி ஒதுக்கீடு முறையால் இச்சமூகம் மெல்ல மெல்ல மேலெழும்பி வருகிறது.
மூன்றாவதாக வேலைவாய்ப்பு ஒதுக்கீடு. ஆண்டாண்டுகாலமாய் அடிமைச் சேவகம் மட்டுமே செய்வதற்குக் கட்டாயப்படுத்தப்பட்டு, கொடுமைக்குள்ளாக்கப்பட்ட தலித் சமூகம் தலைநிமிர அரசுப் பணி மிகவும் அவசியமாயிற்று. அவர்களுக்கும், ஆட்சியதிகாரப் பொறுப்பில் உரிய பங்கு வழங்க வேண்டும் என்ற நியாயமான உணர்வின் காரணமாகவே, வேலைவாய்ப்பில் இடஒதுக்கீடு கொண்டு வரப்பட்டது. ஆனால், இந்த இடஒதுக்கீடு சரிவரக் கடைப்பிடிக்கப்படாததால், இவர்களுக்குரிய பல லட்சம் பணியிடங்கள் இன்னும் காலியாகவே உள்ளன. இதேபோன்ற நிலைதான் பதவி உயர்வு ஒதுக்கீட்டிலும் நீடித்து வருகிறது.
என்னதான் சட்டம் நன்றாக இருந்தாலும் அதை நடைமுறைப்படுத்துபவர் நாணயமற்றவராக இருந்துவிட்டால் அந்தச் சட்டத்தால் என்ன பயன்? என்று பாபாசாகேப் அம்பேத்கர் வினா எழுப்பியதற்கேற்ப, இந்த இடஒதுக்கீடு மத்திய, மாநில அரசுகளால் முற்றிலும் முழுமையாக அமல்படுத்தப்படவில்லை. இம் மக்களுக்கான அரசுப் பணியிடங்கள் முழுமையாக நிரப்பப்படவில்லை என்பது ஒருபுறமிருக்க, வழங்கப்பட்டுள்ள இடங்களும் கடைநிலை ஊழியர்களின் பணிகளாக உள்ளதே தவிர உயர் பதவிகளில் நிலைவாரியாக ஓரளவுக்குக்கூட நிரப்பப்படவில்லை.
இந்நிலையில் இந்தியாவிலுள்ள பிற்படுத்தப்பட்ட மக்களுக்கும் இடஒதுக்கீடு வழங்குவதற்கு வகை செய்வதற்காக 1979-இல் நியமிக்கப்பட்ட மண்டல் குழு தனது அறிக்கையை 1980-இல் சமர்ப்பித்தது. இது பத்தாண்டுகள் கழித்து 1990-இல் அமல்படுத்தப்பட்டது. இதன்படி பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு மத்திய அரசுப் பணியிலே 27 விழுக்காடு நடைமுறைக்கு வந்தது. ஆக, இந்தியாவில் சமூகத்தில் ஒடுக்கப்பட்ட எஸ்.சி./எஸ்.டி. மக்களுக்கும் இடஒதுக்கீடு, ஒடுக்குகின்ற ஆதிக்கவர்க்கமான பிற்படுத்தப்பட்ட மக்களுக்கும் இடஒதுக்கீடு என்ற நிலை ஏற்பட்டுவிட்டது.
16-11-1992-இல் இந்திரா சஹானி என்பவரால் பிற்படுத்தப்பட்ட மக்களுக்கான இடஒதுக்கீட்டை எதிர்த்துத் தொடரப்பட்ட வழக்கில் வழங்கப்பட்ட தீர்ப்பில், ""எஸ்.சி./எஸ்.டி. ஊழியர்களுக்கு அரசுப் பணி பதவி உயர்வில் இடஒதுக்கீடு வழங்கக்கூடாது. இதை 5-வது வருடத்திலிருந்து அமல்படுத்த வேண்டும்'' என்று அந்த வழக்கிற்கு எந்தவிதத்திலும் தொடர்பில்லாத ஒரு பிரச்னையில் தீர்ப்பு வழங்கியது நீதிமன்றம்.
ஏற்கெனவே தலித் இனத்தாருக்கு இடஒதுக்கீடு வழங்குவதில் எவ்வளவு குளறுபடி செய்ய முடியுமோ, எவ்வளவு தாமதம் செய்ய முடியுமோ அதையெல்லாம் செய்து கொண்டிருந்த ஆதிக்க சாதி உணர்வு அதிகாரிகளால் இந்த நீதிமன்றத் தீர்ப்பு உடனடியாக நடைமுறைப்படுத்தப்பட்டது. அதன்படி, அரசுப் பதவி உயர்வில் இடஒதுக்கீடு வழங்குவது உடனடியாக நிறுத்தப்பட்டது.
அதனால்தான் மீண்டும் பதவி உயர்விலும் இடஒதுக்கீடு வழங்க வேண்டுமென்று தலித் மக்கள் குரல் கொடுத்தார்கள். கோரிக்கை வைத்தார்கள். போராட்டம் நடத்தினார்கள். அதனால் இதற்காக 1995-இல் 16(4ஏ) என்ற 77-வது சட்டத்திருத்த மசோதா இந்திய நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது.
இதன்படி எஸ்.சி., எஸ்.டி., ஊழியர்களுக்குப் பதவி உயர்வில் மீண்டும் இடஒதுக்கீடு வழங்க வகை செய்யப்பட்டது. ஆனால், இது நடைமுறைக்கே வரவில்லை.
இதை எதிர்த்து எம். நாகராஜ் என்பவர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்தார். இவ்வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம் தனது 19-10-2006-இல் வெளியிட்ட தீர்ப்பில் கீழ்க்காணும் 3 நிபந்தனைகளை விதித்தது.
1. அரசின் உயர் பதவிகளில் இடம் காலியாக இருக்கிறது என்பதை அரசு உறுதிப்படுத்த வேண்டும்.
2. இப்பதவிகளில் எஸ்.சி., எஸ்.டி. ஊழியர்களை நியமிக்கும் அளவுக்கு அவர்கள் பாதிக்கப்பட்ட நிலையில்தான் உள்ளார்கள் என்பதை அரசு ஊர்ஜிதப்படுத்த வேண்டும்.
3. இப்பதவிகளில் எஸ்.சி., எஸ்.டி. ஊழியர்களை நியமனம் செய்தால் அரசின் நிர்வாகத் திறன் எந்தவிதத்திலும் பாதிக்கப்படாது என்று அரசு உத்தரவாதம் அளிக்க வேண்டும்.
இந்த மூன்று நிபந்தனைகளைத் தெளிவாக்கிய பின்னர்தான் பதவி உயர்வில் எஸ்.சி., எஸ்.டி. ஊழியர்களுக்கு இடஒதுக்கீடு வழங்கலாம் என்று தீர்ப்பு அளிக்கப்பட்டது.
இந்நிலையில் உத்தரப் பிரதேசத்தில் முதலமைச்சராக பதவியேற்ற பகுஜன் சமாஜ் கட்சித் தலைவி செல்வி மாயாவதி, மேற்காணும் மசோதாவை மையப்படுத்தி அரசுப் பணி பதவி உயர்வில் இடஒதுக்கீடு வழங்க உத்தரவிட்டார். இதை எதிர்த்து அலகாபாத் அமர்வு உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்தார்கள்.
இவ்வழக்கினை விசாரித்த நீதிபதிகள் தல்வீர் பண்டாரி, தீபக் மிஸ்ரா ஆகியோர் வழங்கிய தீர்ப்பில், தாழ்த்தப்பட்ட வகுப்பு ஊழியர்களுக்குப் பதவி உயர்வில் இடஒதுக்கீடு வழங்க வலுவான சட்ட ஆதாரமில்லை என்று கூறி உத்தரப் பிரதேச அரசாணையை 28-4-2012 அன்று ரத்து செய்து விட்டனர்.
இதன்பிறகு 4.9.2012-இல் மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் விவாதித்து, பதவி உயர்வில் இட ஒதுக்கீடு வழங்குவதற்கான மசோதாவை நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் தாக்கல் செய்து ஒப்புதல் பெறுவது என்று தீர்மானிக்கப்பட்டது. இந்த 117-வது சட்டத்திருத்த மசோதா மூலம் எஸ்.சி., எஸ்.டி. ஊழியர்களுக்குப் பதவி உயர்வில் இடஒதுக்கீடு வழங்க எந்தவித நிபந்தனையையும் பின்பற்ற வேண்டிய தேவையில்லை என்று சட்டப் பாதுகாப்பு செய்யப்பட்டுள்ளது அவ்வளவே. அதாவது ஏற்கெனவே இருந்த உரிமை, பறிக்கப்பட்ட உரிமை திரும்பத் தர வழி வகுக்கப்பட்டுள்ளது.
மத்திய அரசின் செயலாளர் அந்தஸ்தில் எஸ்.சி. ஒருவர்கூட இல்லை. கூடுதல் செயலாளர்களில் ஓரிருவரே உள்ளனர். நூற்றுக்கும் மேற்பட்ட துறைவாரியான செயலாளர்களில் ஐந்தாறு எஸ்.சி. மட்டுமே உள்ளனர். மாநில தலைமைச் செயலாளர்கள் யாருமே இல்லை. உச்ச நீதிமன்றத்தில் எஸ்.சி. நீதிபதி இல்லை. உயர் நீதிமன்ற நீதிபதிகளில் ஓரிருவர் மட்டுமே உள்ளனர். பிற அரசு நிறுவனங்களிலும் உயர் அதிகாரிகளாக எஸ்.சி. இனத்தவர் இல்லை என்கிற நிலை, பட்டியல் இனத்தவர்கள் வேண்டுமென்றே புறக்கணிக்கப்படுகிறார்கள் என்பதைத்தானே காட்டுகிறது?
பதவி உயர்விலும் இடஒதுக்கீடு என்பதை பிற்படுத்தப்பட்டவர்களுக்கும், இஸ்லாமியர்களுக்கும்கூட நடைமுறைப்படுத்த வேண்டும் என்று முலாயம்சிங் கருத்தறிவிக்கிறார். அதை தி.மு.க. தலைவர் கருணாநிதி ஆதரித்து அறிக்கை விடுகிறார். அப்படியானால், பதவி உயர்வில் எஸ்.சி.க்கு இடஒதுக்கீடு வழங்கினால் அரசு நிர்வாகத்தில் திறமை போய்விடும் என்கிறார்களே, இடஒதுக்கீடு பிற்படுத்தப்பட்டவர்களுக்கும் வழங்கினால் மட்டும் திறமை போய்விடாதா? இதென்ன பித்தலாட்டமான வாதம்?
அரசுப் பணியில் பதவி உயர்வு என்பது வெறும் மூப்பு வரிசை (சீனியாரிட்டி) அடிப்படையில்தான் வழங்கப்படுகிறது. அப்படியானால்... 100 அலுவலர்களில் 22 பேர் எஸ்.சி. என்றால், இதில் கண்காணிப்பாளராகப் பதவி உயர்வு பெறும் 50 பேரில் 11 பேர் எஸ்.சி. என்று நியமனம் பெறுவதுதானே நடைமுறை நியாயம்?
÷இன்றைய மாணவர்களில் எஸ்.சி./எஸ்.டி. மாணவர்கள் எடுக்கும் உச்சகட்ட மதிப்பெண்களுக்கும் பிற ஜாதி மாணவர்கள் எடுக்கும் உச்சகட்ட மதிப்பெண்களுக்கும் இடையிலுள்ள வேறுபாடு வெறும் அரை மதிப்பெண், ஒரு மதிப்பெண் என்ற அளவில்தான் உள்ளது என்கின்றபோது, தலித் மக்களின் திறமைக்கு என்ன குறைச்சல் என்ற கேள்விக்கு எவரால் பதில் கூற முடியும்?
இடஒதுக்கீடு மூலம் அரசுப் பணியில் அமரலாம். ஆனால், பதவி உயர்வில் மட்டும் அது கூடாது என்கின்ற வாதம், இம்மக்களை அதிகாரப் பதவியில் அமர்த்தாமல் அடிமட்ட வேலைகளிலேயே நிறுத்திக் கொள்ளும் வஞ்சகத்தனம்தானே தவிர வேறில்லையே?
÷இப்போது தாக்கல் செய்யப்பட்டுவரும் மசோதா, பதவி உயர்வில் எஸ்.சி.க்கு இடஒதுக்கீடு வழங்க வகை செய்யும் மசோதா என்றே பலரும் புரிந்து கொண்டுள்ளார்கள். அப்படியே பேசியும் வருகிறார்கள். அது தவறு. பதவி உயர்வில் இடஒதுக்கீடு வழங்க வேண்டுமென்று 1995-ஆம் ஆண்டே மசோதா தாக்கல் செய்யப்பட்டு நிறைவேற்றப்பட்டுவிட்டது. ஏற்கெனவே வழங்கப்பட்டுள்ள பதவி உயர்வில் இடஒதுக்கீடு என்ற சட்டத்தில் சரியானபடி வாக்கிய அமைப்பு இல்லை என்பதால், அதை விதிமுறைப்படி திருத்தம் செய்வதற்காகக் கொண்டு வரப்படும் ஒரு துணை மசோதா அவ்வளவே!
÷நாடாளுமன்றம் மறு தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைக்கப்பட்டுள்ள நிலையில், இனி மக்களவை எப்போது கூடி, இதனை எவ்விதம் நிறைவேற்றும் என்பது தெரியவில்லை. ஒடுக்கப்பட்ட மக்களின் உன்னதத் தலைவர் பாபா சாகேப் அம்பேத்கர் எடுத்துரைத்ததைப்போல் "உலகம் எவ்வளவுதான் விஞ்ஞானப்பூர்வமாக வளர்ந்தாலும் இந்தியா மட்டும், அது கடைப்பிடிக்கும் சாதிய வர்ணாசிரம சதிக்குள் சிக்குண்டு முன்னேற்றத்தைத் தடுக்கும் முட்டுக்கட்டையாகவே கிடக்கும்' என்ற தீர்க்கதரிசன வாசகம்தான் நம் நினைவிற்குள் சுழல்கிறது.
ஜெய்பீம்!
கட்டுரையாளர்: சட்டப்பேரவை உறுப்பினர். இந்தியக் குடியரசுக் கட்சியின் அகில இந்தியத் துணைத் தலைவர்.