கடந்த வாரமும், ஒரு பல்கலைக்கழக மாணவி தற்கொலை செய்துக் கொண்டிருக்கிறார். மாணவர்களின் இந்த தற்கொலைச் செய்திகளை படிக்கும் ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும், சட்டென, நம் பிள்ளைகள் யாரோ ஒருவரின் முகம் நினைவுக்கு வந்து விடுகிறது. அந்தப் பிள்ளைகளின் மனதில் என்ன இருக்கிறது என்ற பதட்டம் வந்து விடுகிறது. நாம் அவர்களை சரியாகத் தான் கவனித்துக்கொள்கிறோமா என, நாம் நிம்மதியிழந்து தவிக்கத் துவங்கிவிடுகிறோம்.
உண்மையில் இன்றைய இளைஞர்களைப் புரிந்துக்கொள்வது, அத்தனை எளிதானதா? இந்த தற்கொலைகள் நமக்குச் சொல்லும் செய்தியை, நாம் சரியாகப் புரிந்துக்கொள்கிறோமா? வாழ்க்கையை வாழத் துவங்கும்போதே, அதை முடித்துக் கொள்ளும் இந்தத் துயரம், மனம் கசியச் செய்வதாக இருக்கிறது. மரணத்தை முத்தமிட்ட அந்த களங்கமற்ற முகங்களை புகைப்படங்களில் பார்க்கும் ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும், வாழ்வின் எந்த துயரம், வாழ்வின் எந்த அவலம் அவர்களை இந்த முடிவை நோக்கித் துரத்தியது என்ற கேள்வி அலைக்கழிக்கிறது. ஒரு இளைஞனின் தற்கொலை என்பது, ஒரு தனிமனிதனின் அழிவு மட்டுமல்ல; அது ஒரு குடும்பத்தின் அழிவு; ஒரு தலைமுறையின் அழிவு; ஒரு தேசத்தின், ஒரு சமூகத்தின் எதிர்கால நம்பிக்கையின் அழிவு. அவர்களை இந்த முடிவை எடுக்கத் தூண்டியதில் அல்லது அவர்களை அந்த முடிவிலிருந்து தடுக்கத் தவறியதில் நாம் எல்லாருக்கும், எங்கோ ஒரு மறைமுகமாக சிறிய பங்காவது, இருக்கத்தான் செய்கிறது. இந்த சமூகம், நமது இளைஞர்களுக்கு எதைத் தான் கற்பிக்கிறது? நமது கல்வி அமைப்புகள், அவர்களுக்கு எதைப் புரிந்து கொள்ள வைத்திருக்கிறது?
ஒரு மாணவரின் தற்கொலைக்கு, கல்விச் சூழல், குடும்பம், பொருளாதார நிலை, தனிப்பட்ட உறவுகள் என, நான்கு முக்கியக் காரணிகள் தூண்டுதலாக இருக்க முடியும். பல்வேறு சமூக பொருளாதார மாற்றங்களால், இன்று கல்வி பரவலாக்கப்பட்டு, சமூகத்தின் எல்லா மட்டங்களிலிருந்தும், உயர் கல்வியை நோக்கி ஏராளமானோர் வருகின்றனர். கற்பதற்கும் தடையாக இருந்த பொருளாதார, ஜாதியத் தடைகள் தகர்த்து எறியப்பட்டு விட்டன. ஆனால், பிற்படுத்தப்பட்ட சமூகங்களிலிருந்தும், பொருளாதார ரீதியாக ஏழ்மையான குடும்பங்களிலிருந்தும், உயர் கல்வியை நோக்கி வரும் மாணவர்கள், நகர்ப்புற மேல்தட்டு மாணவர்களுடன், பல்வேறு அடையாள சிக்கல்களைச் சந்திக்கின்றனர். ஒவ்வொருவருக்குள்ளும் மறைந்திருக்கும் சமூக ஏற்றத்தாழ்வு மனப்பான்மைகள், ஆங்கிலம், நவ நாகரிக வாழ்க்கை முறை என, பல சிக்கல்களை கிராமப்புற மாணவர்கள் சந்திக்கின்றனர். இது அவர்களுக்கு, தாழ்வுணர்ச்சியையும், தனிமையுணர்ச்சியையும் கொண்டு வருகிறது.
இன்று உயர் கல்விக்கான செலவுகள், கடுமையாக அதிகரித்து விட்டன. பல குடும்பங்கள் குழந்தைகளின் கல்விக்காக, தங்களிடமிருக்கும் எல்லா நிதி ஆதாரங்களையும் பணயம் வைக்கின்றன. கடன்கள், எஞ்சியிருக்கும் சேமிப்புகள், சொத்துக்கள் என, பலவற்றையும் பயன்படுத்தியே பெரும்பாலான குடும்பங்களில், இன்று ஒரு மாணவனோ, மாணவியோ உயர் கல்விக்குச் செல்ல முடிகிறது. கல்விக் கட்டணங்கள் மட்டுமல்ல, மாணவர்களின் தனிப்பட்ட செலவுகளும், இன்று பன்மடங்கு அதிகரித்துவிட்டன. ஒரு குடும்பம், அதையும் தாங்க வேண்டியிருக்கிறது. இவ்வாறு, பெரும் பொருட்செலவில் ஆடப்படும், ஒரு சூதாட்டம் போல மாறிவிட்ட கல்வி அமைப்பில், மாணவர்கள் கடும் மன நெருக்கலுக்கு ஆளாகின்றனர். இன்னொரு புறம், கடுமையான பாடச் சுமை, போட்டி போட வேண்டிய நிர்பந்தம், போட்டியில் தோல்வியடைந்தால் தன் மீது, கட்டப்பட்ட மொத்த நம்பிக்கையும், சிதற வேண்டிய சூழல். இது, மாணவர்களை விபரீத முடிவுகளை நோக்கித் தள்ளுகிறது.
அடுத்ததாக, இன்றைய இளைஞர்கள் சமூகத்தில் எதிர்கொள்ளும் புதிய சுதந்திரங்களும், வாய்ப்புகளும், தேவைகளும் அவர்களை நிலைகுலைய வைக்கின்றன. பொறுப்புகளையும், கடமைகளையும் விட, கேளிக்கைகள், இன்றைய இளைஞர்களின் வாழ்க்கையை பெருமளவு சூழ்ந்து கொண்டிருக்கின்றன. இணையம், அலைபேசி வழியாக, உறவுகளில் பல புதிய சாத்தியங்கள் இன்று உருவாகி இருக்கின்றன. போதை பொருள்களை பயன்படுத்துவது, இரவு நடனங்களுக்குச் செல்வது, சிறு, சிறு, வன்முறைகளில் ஈடுபடுவது என, பல வழிகளில் இன்று இளைஞர்கள் தங்கள் வாழ்க்கையை கொண்டாட விரும்புகின்றனர். இன்னொரு புறம், நவநாகரிக உடைகள், விதவிதமான எலக்ட்ரானிக் சாதனங்கள், உயர்தர உணவகங்கள் என, எண்ணற்ற தூண்டில்கள் இளைஞர்களை சுண்டி இழுக்கின்றன. பெரும் ஷாப்பிங் மால்களில் எதையும் வாங்காமல், எண்ணற்ற பொருள்களை உற்றுப் பார்த்தபடி நகரும் ஆயிரக்கணக்கான இளைஞர்களின் கண்களை பார்க்கும்போதெல்லாம், அவர்களின் வேட்கையை எளிதாக புரிந்துக் கொள்ள முடியும். இவ்வாறு, ஆண், பெண் உறவுச் சிக்கல்கள் காரணமாகவோ, வேறு தேவைகள் காரணமாகவோ, ஏதேனுமொரு நெருக்கடியில் மாட்டிக் கொள்ளும் மாணவர்கள், அதிலிருந்து வெளியேற முடியாமல் தற்கொலையின் வழியே தப்பிக்க முயற்சிக்கின்றனர்.
காரணங்கள் எதுவாக இருந்தாலும், நாம் நம் இளைஞர்களை காப்பாற்ற வேண்டிய பெரும் சவாலில் இப்போது இருக்கிறோம். பெற்றோர், தங்கள் குழந்தைகளை பந்தயக் குதிரைகளாக மாற்றும் எண்ணத்தை முதலில் நிறுத்த வேண்டும். தங்கள் குழந்தைகளுக்கு எது சாத்தியமோ, அதை அவர்கள் இயல்பாக அடைய அனுமதிக்க வேண்டும். அவர்கள் தோல்வியடையும் போது, அந்த தோல்விக்கு அப்பாலும், ஒரு வாழ்க்கை இருக்கிறது. அதில் அடைவதற்கு எவ்வளவோ இருக்கின்றன என்பதை, ஒவ்வொரு கட்டத்திலும், பெற்றோர், தங்கள் பிள்ளைகளுக்குச் சொல்லித் தர வேண்டும். தங்களால் அடைய முடியாததை எல்லாம், தங்கள் பிள்ளைகள் வழியே அடைய வேண்டும் என்று நினைப்பது, மிகவும் இழிவான சுயநலம் அல்லவா? மேலும், இன்றைய இளைஞர்களின் ஆசாபாசங்களை பெருந்தன்மையுடனும், அறிவுணர்ச்சியுடனும் புரிந்துக்கொள்ள முன் வரவேண்டும். தங்களது போலி ஒழுக்க மதிப்பீடுகளால், அவர்களை அச்சுறுத்துவதால், எந்த பயனும் இல்லை. ஒவ்வொரு கட்டத்திலும், அவர்கள் தங்களை மீட்டுக் கொள்ள பெற்றோர் உதவ முடியும். இதில், ஆசிரியர்களின் பங்கு மிகவும் மகத்தானது. தங்கள் முன் அமர்ந்திருக்கும் இளைஞனின் மூளைகளை மட்டுமல்ல, இதயங்களைத் தொட அவர்கள் முயற்சிக்க வேண்டும். இளைஞர்களின் இதயத்தில் பாதிப்புகளை ஏற்படுத்துவது மிகவும் சுலபம். இந்த வாழ்க்கையை எந்த சூழலிலும் எதிர்க்கொள்வதற்கான புரிதலையும், மனோதிடத்தையும் அவர்கள், மாணவர்களிடம் ஏற்படுத்த முடியும்.
எந்தத் தோல்விக்கும், ஆசாபாசத்திற்கும் இடையிலும் வாழ்வின் மகத்துவத்தை, அவர்கள் மாணவர்களுக்கு உணர்த்த வேண்டும். அத்தகைய ஒரு மகத்தான பணியை இன்று, எந்த ஆசிரியர் செய்கிறாரோ, அவர் கடவுளுக்கு நிகரானவர். இந்தக் கட்டுரையை படித்துக் கொண்டிருக்கும் மாணவர்களுக்கும், இளைஞர்களுக்கும் சொல்ல ஒன்று இருக்கிறது. நீங்கள் தான் இந்த உலகின் அச்சு. நீங்கள் தான் இந்த வாழ்க்கையின் மையம். பணம், உறவு முறிவுகள், தோல்விகள் எல்லாமே, வாழ்க்கையில் வரும் சிறு இடைவேளைகள். இடைவேளைக்குப் பிறகே, உங்கள் வாழ்க்கையின் மகத்தான திருப்பங்கள் காத்திருக்கின்றன. நீங்கள் இன்று ஏதோ ஒன்றில் தோல்வியடைவது, இதைவிட மகத்தான ஒன்றை அடைவதற்கே! நீங்கள் மலை மீது எரிய வேண்டிய பெரு நெருப்பு; மின்மினிகள் போல மறையலாமா?
email: manushyaputhiran@gmail.com
- மனுஷ்ய புத்திரன், பத்திரிகையாளர், சிந்தனையாளர்