TAANAKS VNR செய்திகளை உங்கள் மொபைலில் பெறுவதற்கு ON TAANAKS-NEWS என்று டைப் செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பவும்.

Wednesday, April 4, 2012

கல்வியைக் காணோம்

ரு நாட்டின் வாழ்வும் வளர்ச்சியும் வளமும் சார்ந்திருக்கின்ற முக்கிய அடிப்படைகளில் ஒன்று கல்வி. "கேடுஇல் விழுச்செல்வம் கல்வி' என்கிறார் வள்ளுவர். மனிதனை உருவாக்கும் கல்வியை முயன்று போற்றி வளர்க்க வேண்டும் என்பது சுவாமி விவேகானந்தர் கருத்து. மனிதவள மேம்பாட்டுக்குத் துணை நிற்பது கல்வி.கல்வியை முறைசார் கல்வியாகவும் முறைசாரா கல்வியாகவும் வளர்த்து வருகிறோம். முறைசார் கல்வி, நாற்றங்காலாயிருக்கும் மழலையர் பள்ளிக் கல்வியில் தொடங்கி தொடக்கப்பள்ளி, நடுநிலைப்பள்ளி, உயர்நிலைப்பள்ளி, மேல்நிலைப்பள்ளி, கல்லூரி, பல்கலைக்கழகம், ஆய்வு நிறுவனம் என பல கட்டமைப்புகளில் நடைபெறுகிறது.

கல்விக்காக அரசு கோடி கோடியாகச் செலவிடுகிறது. கல்வி வளர்ச்சியில் தனியாரும் பங்கு பெறுகின்றனர். இந்தக் கல்விக் கட்டமைப்பில் அடிப்படையாக இருப்பது பள்ளிக்கல்வி. மழலையர் பள்ளி முதல் மேனிலைப்பள்ளி வரை மாணாக்கரிடம் கல்வி ஏற்படுத்தும் மேன்மையான மாற்றத்தை ஒட்டித்தான் அவர்களது உயர் கல்வியும் வாழ்க்கையும் அமைகிறது.
கடந்த சில ஆண்டுகளாக பள்ளிக்கல்வி காலத்தில் ஏற்பட்டு வரும் நோக்கையும் போக்கையும் காட்டுவதாக பிப்ரவரியில் ஒரே வாரத்தில் பள்ளிகளில் நடைபெற்ற மூன்று நிகழ்வுகளைக் கூறலாம். இவை நாட்டு மக்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளன.இவை புதுமையானவை அல்ல. ஆனால், இவை மூன்றும் மூன்று வெவ்வேறு வகையான பள்ளிகளில் தொடர் நிகழ்வுகளாக நடந்திருப்பதுதான் சமுதாய அக்கறை உள்ளவர்களை எல்லாம் கவலைப்படச் செய்கின்றன.

முதலாவதாக, சென்னையில் ஓர் ஆங்கிலோ இந்தியப் பள்ளியில் ஓர் ஆசிரியையை 9-ம் வகுப்பு மாணவன் வகுப்பறையில் கத்தியால் குத்திக் கொலை செய்த சம்பவம்.

இரண்டாவதாக, விருதுநகர் மாவட்டம் நரிக்குடியிலுள்ள அரசு மருது பாண்டியர் மேல்நிலைப்பள்ளியில் நடந்தது. 12-ம் வகுப்பு படிக்கும் மாணவர் சிலர் வழிபாட்டு நேரத்தில் பங்கு பெறாமல், மேஜைகளைத் தட்டி இடையூறு செய்திருக்கின் றனர். அவர்களைத் திருத்த முயன்ற ஆசிரியரை இரண்டு மாணவர்கள், ""எங்கள் செயல்பாட்டில் தலையிட்டால் சென்னையில் ஆசிரியையைக் கொலை செய்ததுபோல் இங்கும் செய்வோம்'' என்று மிரட்டினராம். காவல் நிலையத்தில் குற்றம் பதிவு செய்துள்ளனர். அந்த மாணவர்களைக் கைது செய்தபோது அவர்களிடம் கத்தி இருந்ததாகவும் காவல்துறை கண்காணிப்பாளர் கூறியுள்ளார்.

மூன்றாவதாக, உடுமலையில் ஒரு தனியார் பள்ளியில் 11-ம் வகுப்பு மாணவன் ஒருவன் பள்ளி வளாகத்திலுள்ள விடுதி அறையில் தூக்குப் போட்டு இறந்திருக்கின்றான். அவன் எழுதி வைத்திருந்த மூன்று கடிதங்களிலிருந்தும் அவன் நண்பர்கள் கூறும் செய்திகளிலிருந்தும் ஓர் ஆசிரியர் படிக்கும்படி கூறி அடித்துத் துன்புறுத்தியதால் அவன் தற்கொலை செய்து கொண்டதாகத் தெரிகிறது.

இந்த மூன்று நிகழ்வுகளிலிருந்து தெரியும் நடைமுறை நிலைமைகள் என்ன?

மூன்றில் ஒன்று உயர்ந்த லட்சியங்களைக் கொண்ட பாதிரியார்கள் நடத்தும் பள்ளி. இங்கு படிக்கும் மாணவர்கள் எல்லாம் மேட்டுக்குடியினர். நிறைய கல்விக்கட்டணம் பெற்று நடத்தும் பள்ளி. கொலை செய்த மாணவன் ஒரு செல்வந்தர் வீட்டுப் பிள்ளை. அவனுக்கு ஒரு நாள் கைச்செலவுக்கு அவனது பெற்றோர் நூறு ரூபாய் கொடுப்பார்களாம். ஒரு இந்திப் படத்தைப் பார்த்து கொலை செய்யத் திட்டமிட்டதாக அவன் கூறியுள்ளான்.


இரண்டாவது, அரசினர் பள்ளி. பயில்கின்ற மாணவர்கள் எல்லாம் கிராமங்களைச் சேர்ந்த மாணவர்கள். பெரும்பாலும் முதல் தலைமுறை மாணவர்களாக இருப்பார்கள். ஏழை, எளிய, நடுத்தரக் குடும்பங்களைச் சேர்ந்தவர்கள். ஆசிரியர்கள் வெளியூர்களிலிருந்து வருபவர்களாக இருப்பார்கள். வகுப்பறைக்கு வெளியில் ஆசிரியர்-மாணவர் தொடர்பு இருக்காது. கூடிக் கலையும் இடமாகப் பள்ளி இருக்கும்.

மூன்றாவது, தனியார் பள்ளி. எங்கள் பள்ளியில் சேர்த்தால் இறுதித் தேர்வில் இவ்வளவு மதிப்பெண்கள் பெறலாம் என்று கூறி பெருந்தொகை பெற்று கல்வி வழங்கும் பள்ளிகளில் ஒன்றாக இருக்கலாம். இப்படிப்பட்ட பள்ளிகளில் படிப்பதைத் தவிர, வேறு ஒன்றும் செய்ய முடியாது. பள்ளி சிறைச்சாலையாகிவிடும். ஆசிரியர்கள் காவலர்களாக இருப்பார்கள். எல்லாம் தெரிந்தே தங்கள் பிள்ளைகள் இன்ஜினீயர்களாக, டாக்டர்களாக, ஐஏஎஸ். ஐபிஎஸ் அதிகாரிகளாக வரவேண்டுமென்று இவற்றில் பெற்றோர்கள் சேர்த்துவிடுகின்றனர். மொத்தத்தில் மாணவர்களை உருவாக்கும் சரியான, முறையான கல்வி கிடைக்கவில்லை என்பது வெளிப்படை. 

பெரும்பாலான நாளிதழ்களும் வார, திங்கள் இதழ்களும் இன்றைய கல்வி பற்றி தலையங்கங்கள், கட்டுரைகள் எழுதிக் கொண்டிருக்கின்றன.கல்வியின் அடிப்படை இன்று நேற்றல்ல, சில ஆண்டுகளாகவே ஆட்டம் காணத் தொடங்கியிருக்கின்றது. கல்வி வழிமாறிப் போவதை அவ்வப்போது சில ஆன்றோர்களும் கல்வியை ஆராய்ந்த அறிஞர் குழுக்களும் சுட்டிக் காட்டியுள்ளன. எல்லாம் செவிடன் காதில் ஊதிய சங்குதான். கல்வியின் தரம் குறைவதற்கான காரண, காரியங்கள் வெளிப்படை. இதில் எல்லோருடைய பங்களிப்பும் இருக்கின்றது. புதை குழியில் சிக்கிய யானையைப் போன்று நமது முறைசார் கல்வி சிக்கித் தவிக்கின்றது, தீர்வைத் தேடுவதற்காக. மனித வளர்ச்சியின், பண்பாட்டின் காரணியான கல்வியை வாணிபப் பொருளாக்கி விட்டோம். நல்ல மனிதனை உருவாக்க வேண்டுமென்ற நோக்கம் பின்னுக்குத் தள்ளப்பட்டு, வேலைவாய்ப்பை பெறும் கல்வியே பயன்பாடுடைய சிறந்த கல்வி என்ற கருத்து மேலோங்கியது.நீதிபோதனை கற்பிக்கும் நேரத்தில் கணிப்பொறி கற்றால் திறமைகள் மேலோங்கும் என்ற எண்ணம் கோலோச்சியது. அரசு இலவசங்கள் வழங்கிய பட்டியலில் கல்வி இடம்பெறவில்லை. கல்வியைத் தனியாரிடம் தாரை வார்த்தது. நூற்றுக்கு நூறு வெற்றி, பாடங்களில் நூறு சதவிகிதம் பெற்றுத்தரும் உயர் கட்டணப் பள்ளிகள் பெருகின. கல்வியின் விழுமங்கள் காற்றில் பறந்தன. எல்லோருக்கும் கல்வி என்பது அரசின் நோக்கம். அதற்காக தொடங்கிய எண்ணற்ற அரசுப் பள்ளிகளில் அகக் கட்டுமானங்கள் இல்லை. ஆசிரியர்களும் இல்லை. எதுவும் இல்லை. அரசு சாதனை புள்ளிவிவரங்களுக்காக இருக்கும் பள்ளிகளே மிகுதி.ஆசிரியர்களின் தரத்தைப் பற்றிக் கவலை இல்லை. ஆசிரியர் பணி, சேவை என்பது போய் தொழிலாயிற்று. அரசுப் பள்ளியிலும் அரசு உதவி பெறும் பள்ளிகளிலும் கை நிறையச் சம்பளம். ஆசிரியப் பயிற்சிக் கல்லூரிகள் பெரும்பாலானவை சுயநிதி அடிப்படையில் இயங்குபவை.பணம் கொடுத்து இடம்பெற வேண்டும். பணம் கொடுத்தால் பட்டம் கிடைக்கின்ற காலம். ஆசிரியர் பயிற்சிக் கல்லூரிகளின் தரம் கேள்விக்குரியது. ஆசிரியர்கள் எந்த அளவுக்கு ஒழுக்கம், பண்பாட்டில் உயர்ந்து மாணவர்களின் மதிப்பைப் பெறுகின்றனரோ அந்த அளவுக்குத்தான் மாணவர்களுக்கு அவர்கள் வழிகாட்ட முடியும். பணம் கொடுத்து வேலை வாங்கும் ஆசிரியரிடம் பொறுப்புணர்ச்சி எப்படி வரும்?பெற்றோர்களின் பங்களிப்பும் முக்கியம். பெற்றோர்கள் பலவகை மனப்பான்மையோடும் சூழ்நிலையிலும் இருக்கின்றனர். நகரங்களிலுள்ள படித்த, வசதிகள் நிரம்பிய, உயர்ந்த பணிகளிலுள்ள பெற்றோர்களுக்கு பிள்ளைகளின் வளர்ச்சி, கல்வி பற்றி நினைத்துப் பார்க்க நேரமில்லை. கணவனும் மனைவியும் வேலைபார்ப்பவர்களாக இருந்தால் அவர்கள் பாடே பெரும்பாடாக இருக்கும். படிக்காத பெற்றோர், பிள்ளை படிக்க வேண்டுமென்ற ஆசையில் பள்ளியில் சேர்த்திருப்பார்கள். அதோடு சரி. சில பெற்றோர் பிள்ளைகளின் மீதிருக்கும் அன்பால் அவர்கள் வழியில் செல்வார்கள். சில பெற்றோர்தான் பொறுப்புணர்ந்து செயல்படுவார்கள்.பெரும்பாலான பள்ளிகளில் பாடம் ஒன்றுதான் குறியாகும். விளையாட இடமோ, நேரமோ இல்லை. கலை, இலக்கிய பண்பாட்டுக் கூட்டங்கள் நடத்துவதில்லை. வாழ்க்கை விழுமங்கள், அறநெறி, ஒழுக்கம் பற்றி கற்றுக் கொடுக்கப்படுவதில்லை. ஆன்மிக உணர்வு அற்றுப் போயிற்று. கூட்டுக் குடும்பமாக இருந்தால் பெரியவர்கள் பண்பாட்டை, ஒழுக்கத்தைக் கற்றுக் கொடுப்பார்கள். சின்னஞ்சிறு தனிக்குடும்பங்களில் வாய்ப்பு இல்லை. கூட்டுறவு மனப்பான்மை வளர வாய்ப்பற்ற நிலை. புற சக்திகளான தொலைக்காட்சி, கணிப்பொறி, அலைபேசி, திரைப்படங்கள், திசை திருப்பும் இதழ்கள் ஆகியவற்றின் ஆதிக்கம் கூடி வருகின்றது. பற்றாக்குறைக்கு அரசு மதுக்கடைகள் நடத்துவதால் குடிக்கும் பழக்கம் மாணவர்களையும் பற்றிக் கொள்கிறது.கல்விக்கு வழிகாட்ட வேண்டிய அரசு குறுகிய வட்டத்தில் சுழல்கிறது. கல்வியில் அரசியல் வந்தது. சமச்சீர் கல்வியில் அரசியல் வந்ததால் ஆசிரியர்கள் மாணவர்கள் பட்டபாடு தீரவில்லை. அரசியல்வாதிகள் ஆதாய நோக்கில் பள்ளிகளை நடத்துகின்றனர். கல்வி வாணிபம் ஓகோவென்று நடக்கின்றது. கல்வியைக் காணோம்.கல்விச் சீர்திருத்தத்திற்கு முன்னுரிமை கொடுத்து அரசு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். கல்வியில் அரசியல் வேண்டாம். எல்லா அரசியல் கட்சித் தலைவர்களும் கட்சிகளின் எல்லை தாண்டி, நாட்டின் நலன் கருதி கல்வியில் அக்கறை காட்ட வேண்டும். எல்லா பள்ளிகளையும் தரமானவைகளாக மாற்ற வேண்டும். பள்ளிகளைக் கண்காணித்து வழிநடத்தும் பொறுப்பில் உள்ளாட்சி மன்றங்களையும் பங்கு பெறச் செய்ய வேண்டும். அரசே கல்வியின் முழுப் பொறுப்பையும் ஏற்க வேண்டும்.தாய்மொழி இல்லாக் கல்வி. நமது பண்பாட்டை, வரலாற்றை மறந்த கல்வி. அதன் விளைவுகளைத்தான் இன்று காண்கிறோம்.

கட்டுரையாளர்: மா.பா. குருசாமி (காந்தியப் 
பொருளாதார அறிஞர்)

No comments:

Post a Comment