TAANAKS VNR செய்திகளை உங்கள் மொபைலில் பெறுவதற்கு ON TAANAKS-NEWS என்று டைப் செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பவும்.

Thursday, April 26, 2012

விம்மி வெடிக்கும் விசும்பல்

ஒரு நாகரிகத்தின் வெற்றி என்பது அந்த நாட்டின் மக்கள்தொகையோ அல்லது வானளாவிய கட்டடங்களோ, மிகப் பெரிய நகரங்களோ அல்லது மிகச் சிறந்த உள்கட்டமைப்போ அல்ல. மாறாக, எப்படிப்பட்ட மக்களை அந்த நாடு உருவாக்குகிறது என்பதில்தான் இருக்கிறது.                          -மார்ட்டின் லூதர் கிங் ஜூனியர் 

சக ஆசிரியையான உமா மகேஸ்வரியின் மறைவுக்கு என்னுடைய இரங்கலையும், நாகரிக சமுதாயத்தின் வருத்தத்தையும் பகிர்ந்து கொள்கிறேன். சமூகத்தின் மனசாட்சியையே புரட்டிப்போட்ட அந்த ஆசிரியையின் தியாகம், தமிழகத்தின் பள்ளிக் கல்விச் சூழலை கடந்த 10 ஆண்டுகாலமாக அக்கறையோடு கூர்ந்து கவனித்து வருபவர்களுக்கு எந்தவிதமான அதிர்வையும் ஏற்படுத்தியிருக்க வாய்ப்பில்லை. ஒரு சின்ன மாற்றம். இவ்வளவு நாள்களாக பெற்றோர் மற்றும் பள்ளியின் நெருக்குதலுக்குள்ளாகி மாணவ, மாணவியர்கள்தான் தற்கொலை செய்துவந்தனர். தற்கொலை செய்துகொண்ட மாணவ, மாணவியரின் மேல் ஈவிரக்கம் இல்லாமல் நிர்வாகங்கள் காதல் தோல்வி என்று பழி சுமத்தின.மெல்லவும் முடியாமல் விழுங்கவும் முடியாமல் பெற்றோர்கள் தவித்தனர். தமிழகத்தின் ஆக்ஸ்போர்டு என்று அழைக்கப்படும் மாவட்டத்தில் இந்தக் கல்வியாண்டில் மட்டுமே நான்கு தற்கொலைகள் நடந்திருக்கின்றன. வெளியில் வராதது எவ்வளவோ. கடவுள் இவ்வுலகுக்கு அனுப்பிய குழந்தைகளைக் காதல் தற்கொலை என்ற பெயரில் இப்பள்ளிகள் கடவுளிடம் திருப்பி அனுப்பின என்றுதான் நம்மால் வேதனைப்பட முடிகிறது.புதிய பொருளாதாரக் கொள்கை, அதனோடு தொடர்புடைய தொழில்துறை வளர்ச்சி, தகவல் தொழில்நுட்பத் துறை வளர்ச்சி ஆகியவை யார் கண்ணிலும் படாமல் மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தியது கல்வித்துறையில்தான். அதுவும் நேரடியாக அல்லாமல் பெற்றோர்களின் மூலமாகக் கடந்த 10 ஆண்டுகாலம் சமூக அளவில் சில நல்ல மாற்றங்களை உருவாக்கியதும் ஒப்புக்கொள்ளக்கூடியதுதான்.சாதிய மோதல்கள் பெருமளவில் நடைபெறவில்லை என்று பெருமை தட்டிக்கொள்ள நினைக்கிறோம். ஆனால், பணம் ஒன்றே சமூக அந்தஸ்தை நிலைநிறுத்தும் காரணியாக முன்னெப்போதும் இல்லாத அளவில் உருவெடுத்திருப்பதை மறந்து விடுகிறோம். பெற்றோரும் பணத்தைச் சம்பாதிக்கும் இயந்திரமாக மட்டும் தங்கள் குழந்தைகள் இருக்க வேண்டும் என்று விரும்புகிறார்கள். அவன் ஒரு விருப்பு வெறுப்பற்ற சுயம் பற்றிய பிரக்ஞை இல்லாத மனிதனாக வளர்ந்தால் மட்டுமே தன்னுடைய எண்ணங்கள் ஈடேறும் என்ற பெற்றோர்களின் சிந்தையே.. அவர்களால் முனைந்து வளர்க்கப்பட்ட தனியார் பள்ளிகள். பெற்றோர் மற்றும் கல்வி வியாபாரிகள் கூட்டே அரசாங்கத்தின் ஒவ்வொரு கல்வி சம்பந்தமான அனைத்து நெருக்கடிகளுக்கும் காரணம்.மிஷனரிகளும் கல்வியாளர்களும் சமூக ஆர்வலர்களும் செய்து வந்த சேவையானது சில தனியார் மற்றும் வியாபாரிகளின் கைக்குப் போய்விட்டது. கல்வி வியாபாரப் பொருளான உடனே வியாபாரத்தின் அத்தனை சட்ட திட்டங்களும் அதற்கு பொருந்திப்போனது. வாடிக்கையாளரின் திருப்தியே கல்வி வியாபாரிகளின் நோக்கமானது. ஆகவே, வாடிக்கையாளரின் சிற்றின்பங்களான தொலைக்காட்சி பார்ப்பது அவற்றின் நெடுந்தொடரில் மூழ்கித்திளைப்பது போன்றவற்றுக்கு வடிகாலாக அமையும் நோக்கில் அந்த நேரத்தில் குழந்தைகளைக் கல்வி என்ற பெயரிலோ அல்லது டியூஷன் என்ற பெயரிலோ கல்விச்சாலையிலேயே அவர்களைப் பிணைவைப்பதும் தொடங்கியது.கல்வி தன் ஆன்மாவை இழந்த குறு வரலாறு இதுதான். இதற்கு தொடர்ந்து வந்த அரசுகளின் கல்விக் கொள்கைகளும் ஒரு காரணமாக அமைந்தன. நுழைவுத் தேர்வு இருந்தாலும் இல்லையென்றாலும் மனப்பாடம் செய்வதில் திறமையிருந்தாலே அந்த மாணவன் பொறியாளராகவே, மருத்துவராகவோ ஆகிவிடலாம். மாணவனின் நுண்ணறிவுக்கான வழியே இல்லாமல் போய்விட்டது. தமிழகத்தின் ஆக்ஸ்போர்டு என்றழைக்கப்படும் ஒரு மாவட்டத்தில்தான் தமிழகத்தின் அனைத்து மாவட்டத்திலிருந்தும் தலைசிறந்த மாணவர்கள் கொண்டு வந்து மற்றும் கொண்டுவரப்பட்டுக் குவிக்கப்படுகின்றனர். இவர்களில் 470 மதிப்பெண்களுக்கு மேல் எடுத்தால் கல்விக் கட்டணம் முதல் விடுதிக் கட்டணம் வரை இலவசம். ஏனென்றால், இவர்கள்தான் கல்வி வியாபாரத்தின் முதலீடு.இவ்வாறு தேர்ந்தெடுக்கப்பட்ட 60 முதல் எழுபது மாணவ, மாணவியரில் ஒருவர் மாநில அளவில் மதிப்பெண் எடுத்துவிட்டால் அடுத்த வருடம் விளம்பரம் சூடுபிடிக்கும். ஏதோ ஒரு வருடம் ஒரு சாதனை படைத்தாலே தொடர்ந்து பல வருடங்கள் அதையே ஒவ்வொரு வருடமும் விளம்பரப்படுத்தி சேர்க்கை நடைபெறுகிறது.இந்த மாணவர்களின் பள்ளி நேரம் ஏறக்குறைய காலை 5.30 மணிக்கு தொடங்கி இரவு 10.30 வரை நெடுந்தொடர்போல் முடிவில்லாமல் நீளும். இடைவேளையில் கழிப்பறைக்குச் செல்லலாம். சக மாணவரிடம் பேசலாம், ஆனால், சிரித்தால் குற்றம். இதேபோல் இங்குள்ள பல இரு பாலர் பள்ளிகளில் ஒரு பாலர் மற்றொரு பாலரைப் பார்க்கவே முடியாது, இன்னும் சில பள்ளிகளில் ஒரு வகுப்பறையில் இரு பாலர் இருந்தாலும் அவர்கள் ஒருவருக்கொருவர் பேச அனுமதிக்கப்படுவதில்லை.இன்றைய தமிழகச் சூழலில் மிகவும் தவறாகப் புரிந்துகொள்ளப்பட்ட கருத்தாக்கம் இரு பாலர் பள்ளி பற்றியது. நான் நீலகிரி மாவட்டத்தில் மேல்மட்ட மாணவ, மாணவியர் மட்டுமே படிக்க சாத்தியப்பட்ட ஒரு பள்ளியில் பணிபுரிந்தபோது ஒரு பிப்ரவரி மாதத்தில் பள்ளி ஆண்டுத் தேர்வுக்கு 10 நாள்களே இருக்கும் நேரத்தில் மாணவ, மாணவியரின் பையை திடீரென சோதனை செய்து ஆட்டோகிராப் புத்தகங்களைக் கைப்பற்றினர். அதில் மாணவ-மாணவியர் தங்கள் ஞாபகங்களை எழுதி இறுதியில் (அதாவது அன்புடன்) என்று கையொப்பமிட்டிருந்தனர்.அதைப் பார்த்த பள்ளியின் தலைமை ஆசிரியை எந்த அர்த்தத்தில் அந்த வார்த்தை எழுதப்பட்டது என்பதைகூடப் புரிந்துகொள்ள முயற்சிக்காமல் மாணவிகளை அடிக்கத் தொடங்கினார். எத்தனை பேரை காதலிக்கிறாய் எனக் கேட்டார். பிறகு ஆட்டோகிராப் புத்தகங்களை நெருப்பிலிட்டார். இவை மாணவ, மாணவியரின் பரீட்சையில் பாரதூரமான விளைவை ஏற்படுத்தியது. 56 வயதான அந்த தலைமையாசிரியையின் முதிர்ச்சியின்மை மாணவியின் பள்ளிக்கால ஆட்டோகிராபைதான் பார்த்தது. அதன் பின்னணியில் இருந்த நட்பைப் புரிந்துகொள்ளவில்லை.காலை 5.30-க்கு "ஸ்டடி' என்ற பெயரில் தொடங்கப்படும் கல்வி சுமார் 7 மணிக்கெல்லாம் பாடவேளைக் கல்வியாகிவிடும். ஏனென்றால், பெரும்பாலான பள்ளிகள் அரசு ஆசிரியர்களின் கூட்டாண்மையில்தான் நடக்கிறது. ஆகவே, காலையில் இவர்கள் மற்றும் இவர்கள் நண்பர்கள் இங்கு வேலை பார்த்து முடித்துவிட்டு அரசுப் பள்ளியில் ஒப்பமிட்டு ஒப்புக்குப் பணிபுரிந்து மாலை மீண்டும் தனியார் பள்ளிக்குப் பாய்ந்து சென்று 5.30 முதல் இரவு 9.30 வரை வேலைபார்த்துத் தங்கள் அக்கறையை நிரூபிப்பர்.சப்ஜெக்ட் எக்ஸ்பெர்ட் என்ற பெயரில் உலவும் இந்த ஆசிரியர்களின் நிபுணத்துவம் புத்தகத்தையும், பழைய கேள்வித்தாளையும் மனப்பாடம் செய்து வைத்திருப்பது மட்டும்தான்.இவ்வாறு மூன்று தனியார் பள்ளிகளில் பகுதி நேர ஆசிரியராகச் செயல்படும் ஓர் அரசுப் பள்ளி ஆசிரியர் கடந்த வருடம் தமிழக அரசின் நல்லாசிரியர் விருதைப் பெற்றுப் பள்ளிக் கல்வித் துறைக்கு தீராத களங்கத்தையும் ஏற்படுத்தினார். இவ்வாறு மாநிலத்தில் முதல் மதிப்பெண்கள் எடுத்த பள்ளிகளால் நிறைந்திருக்கும் மாவட்டத்தில் அரசுப் பள்ளி ஆசிரியர்களின் உதவி ஆசிரியர்களாகத்தான் பல தனியார் பள்ளி ஆசிரியர்கள் செயல்பட முடிகிறது. டாப் செக்ஷன் எனப்படும் 2 வகுப்புகளில் மட்டும்தான் பாடம் எடுக்கும் ஆசிரியர் விடைத்தாள்களைத் திருத்துவார். மற்ற மாணவர்களின் விடைத்தாள்களை திருத்துவதற்கென்றே தனி ஆசிரியர்களும், பரீட்சை நடத்துவதற்கும் தனி ஆசிரியர்கள் உள்ளனர்.இவ்வாறான பணியில் ஈடுபடுத்தப்படும் ஆசிரியர்கள் இடையில் பணியை விட்டு விலகவும் முடியாது. கல்வித்துறையில் புகார் அளிக்கவும் முடியாது. ஏனென்றால் அரசு அலுவலகர்கள் மற்றும் ஆசிரியர்களால் நிரம்பி வழியும் இந்தப் பள்ளிகளின் நிர்வாகத்தின் கரங்கள் தொடக்கக் கல்வி அலுவலர் அலுவலகம் முதல் முதன்மைக் கல்வி அலுவலகம் வரை நீண்டு பயமுறுத்தும். எந்தவிதமான தொழிற்சங்க நெறிமுறைகளுக்கும் உட்படாமல் தொழிலாளர் நல சட்டதிட்டங்களையும் தாண்டி மிக மோசமான அடக்குமுறைகளுக்கு உள்பட்டு இப்பள்ளிகளில் கொத்தடிமைபோல் செயல்படும் ஆசிரியர்கள் ஏராளம்.இன்னும் பல ஆசிரியர்கள் பணியில் சேரும்போது அளித்த சான்றிதழ்களைப் பெறவே பல நூறு தடவை பள்ளிக்கு நடக்கும் அவலமும் இம்மாவட்ட பள்ளிகளில் அதிகம். இப்பள்ளிகளில் சேரும்போது ஒப்படைக்கும் சான்றிதழ்களை வேலையை ராஜிநாமா செய்தால் அடுத்த ஆண்டு ஜூன் மாதம்தான் கொடுப்பார்கள்.சுமார் 4,000 மெட்ரிக் பள்ளிகளைக் கவனிக்க வெறும் 16- ஐஎம்எஸ் (மெட்ரிக் பள்ளி ஆய்வாளர்களே) உள்ளனர். முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு அரசுப் பள்ளிகளின் சிக்கல்களைத் தீர்ப்பதற்கே நேரம் போதவில்லை. மேலும் அலுவலகத்திலே தனியார் பள்ளிகளின் தாக்கம் பலமாக இருக்கிறது.பெரும்பாலான தனியார் பள்ளிகளில் முதல்வர் பதவி என்பதே ஏவலாளி பதவியாகத் தான் கருதப்படுகிறது. அவரது பணி ஆசிரியர்களைத் திட்டுவது, தாளாளர்களுக்கு வணக்கம் போடுவது, எப்போது அவர் சுய சிந்தனையை வெளிப்படுத்துகிறாரோ அப்போது அவர் பள்ளியிலிருந்து வெளியேற்றப்படுவார். பெரும்பான்மையான தனியார் பள்ளிகளில் முதல்வர்கள் பெரும் அடையாள நெருக்கடியில்தான் நாட்களை நகர்த்துவர். முதல்வர்கள் நிலையே இப்படியென்றால் ஆசிரியர்களின் நிலையோ பரிதாபம்.காலை முதல் இரவு வரை வேலை அழுத்தத்தில் வைக்கப்பட்டிருக்கும் ஆசிரியரால் தினசரி பத்திரிகைகூட படிக்க நேரம் கிடைக்காது. எப்படி அவர் பொது அறிவை வளர்ப்பார்? ஆசிரியப்பணி பற்றிய தரிசனம் எப்படி கிடைக்கும்? இந்த ஆசிரியர்களால் எவ்வாறு எதிர்கால இந்தியாவை செதுக்க முடியும்? செய்முறை பயிற்சியிலிருந்து விளையாட்டு வகுப்புவரை எந்தச் சிரத்தையுமில்லாமல் வெறும் மதிப்பெண் மட்டுமே குறிக்கோளாகக் கொண்டு செயல்படும் பள்ளிகள் ஒரு வரைமுறைக்குள் கொண்டுவரப்பட வேண்டும். ஏனென்றால், இப்பள்ளிகளால்தான் மாணவர்களின் மன அழுத்தம் அதிகரிக்கிறது.குழந்தைகள் மதிப்பெண் பெறுவது மட்டுமே தங்களுக்கு மதிப்பு என்று கருதும் பெற்றோர்களின் மனோபாவம் மாற வேண்டும். அவர்களால்தான் மாணவர்களின் மன அழுத்தம் அதிகரிக்கிறது.சட்டமும் திட்டமும் போட்டால் மட்டும் போதாது. தயவுதாட்சண்யமில்லாமல் மாணவர்களின் வருங்காலத்தைக் கருத்தில்கொண்டு அதிகாரிகள் முறையாகச் செயல்படுவதை அரசு உறுதி செய்ய வேண்டும். இவையெல்லாம் ஒரு மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியின் முதல்வராக இருக்கும் ஒருவரின் விம்மி வெடிக்கும் விசும்பல்!
கட்டுரையாளர்: கொங்குநாடு மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி முதல்வர்-நாமக்கல்.

No comments:

Post a Comment